For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம்: 19 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறை உதவி ஆணையர், எஸ்ஐ கைது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருச்சி: காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆணையர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. 19 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் இப்போது துப்புத்துலங்கியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வேப்பூரை சேர்ந்த மோகன் என்பவரின் மகள் செல்வராணியை இதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் கடந்த 1994 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எதிர்ப்பு காரணமாக இருவரும் ஊரை விட்டு வெளியேறினர். இதையடுத்து, தனது மகள் செல்வராணியை கண்டுபிடித்து தரக்கோரி மோகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, செல்வராணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குன்னம் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மோகன், மேலும் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, செல்வராணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, காதல் ஜோடியை கண்டுபிடிக்க காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கடந்த 1995 ஆம் ஆண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையில் பாடலூர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த காந்தி (தற்போது மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறார்) தலைமையில், டிரைவர் ரவி(தற்போது திருச்சி விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்), அன்பரசு, சின்னதுரை ஆகிய 4 பேர் இடம் பெற்று இருந்தனர்.

இந்த வழக்கில் மாயமான காதல் ஜோடியை கண்டுபிடிக்க செல்லதுரையின் சகோதரர் பாண்டியனை அழைத்து தனிப்படை காவல்துறையினர் விசாரித்தனர். பின்னர் பாண்டியனிடம் செல்லதுரையை அழைத்து வர வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். பாண்டியனும் சென்னைக்கு சென்று செல்லதுரையை தேடிப்பார்த்தார்

அதன்பிறகு மீண்டும் குன்னம் வந்த பாண்டியன், தனிப்படை காவல்துறையினரிடம், செல்லத்துரை தன்னுடன் வரமறுத்ததுடன், தன்னை தாக்கி விட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறினார். இந்நிலையில், காவல்துறையினர் விசாரணை நடந்த சில நாட்களில் பாண்டியன், குன்னம் பகுதியில் உள்ள மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

அவருடைய உடலை கைப்பற்றிய குன்னம் காவல்துறையினர், இது குறித்து தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். ஆனால் பாண்டியன் சாவில் மர்மம் இருப்பதாக பல்வேறு அமைப்புகள் புகார் கூறினர். இதையடுத்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு, பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து பாண்டியனின் மனைவி அஞ்சலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது.

கடந்த 2013ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்தது. 1995ஆம் ஆண்டு தனிப்படை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காந்தியிடம் விசாரிக்க முடிவு செய்தனர். தற்போது இவர் காவல்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருவதால், அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது சிபிஐ.

இதையடுத்து உதவி ஆணையர் காந்தி, இமிகிரேசன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோரிடம் சி.பி.ஐ. காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், உதவி ஆணையர் காந்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோரை சி.பி.ஐ. காவல்துறையினர் நேற்று கைது செய்து, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, உதவி ஆணையர் காந்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோரை வரும் 9ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பாலச்சந்திரன் உத்தரவிட்டார்.

19 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மரணம் தொடர்பான மர்மம் சிபிஐ மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

English summary
The CBI on Monday arrested an Assistant Commissioner of Police and a Sub-Inspector in connection with the death of a labourer who was picked up for an inquiry in 1995 in the Kunnam police station limits, now in Perambalur district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X