For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முத்துக்குமாரசாமி தற்கொலை: சிபிஐ விசாரணை கேட்பது நியாயம்தானே?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

நெல்லை வேளாண்மைத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி, கடந்த ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

CBI enquiry will reveal the truth in Agri Krishnamoorthy case

வேளாண் துறையில், டிரைவர்கள் நியமன விவகாரத்தில், நெருக்கடி காரணமாக, முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. தமிழகத்தில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

வேளாண் துறையில் தற்காலிக ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட 7 பேரிடம் தலா ரூ.1.75 லட்சம் வீதம் பணம் வசூலித்து தருமாறு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் வற்புறுத்தியதால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

நெருக்கடி அதிகரித்ததால், மார்ச் 5ம் தேதி கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதற்கு அடுத்தநாளே அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தனி உதவியாளர்கள் மற்றும் வேளாண் துறையில் ஓட்டுநர் பணிகளை பெற்றவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி காலை அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அப்போதைய வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு பிரிவு 7, கூட்டுச்சதி, தற்கொலைக்கு தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நெல்லை நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ''என் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது. தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரசாமியிடம் நான் நேரடியாக பணம் கேட்டு மிரட்டியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்து சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்த நீதிபதி வி.எஸ்.ரவி, பொறியாளர் முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டிய சம்பவத்தில், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நேரடி தொடர்பு இருப்பதற்கும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்

தற்கொலை செய்த முத்துகுமாரசாமி தற்கொலை கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி ரவி தெரிவித்தார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை செய்யப்பட்டாலும், அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரும் முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

'பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலும்' என்ற பழமொழிக்கொப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டவர் அதிமுக அமைச்சர் என்பதால், அவரை இந்த வழக்கிலிருந்து தப்புவிக்கும் வண்ணம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை என்ற பெயரால் ஏனோதானோ என்ற முறையில் விசாரித்து முழுமையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் இந்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்திருக்கிறார்கள் என்பது கருணாநிதியின் கருத்தாகும்.

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிசிஐடி சரியாக கையாளவில்லை என்பதற்கு பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்வதற்கு முன், நெல்லை சந்திப்பில் உள்ள அதிமுக பிரமுகரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிளை, பிரமுகர் வீட்டுமுன் நிறுத்திவிட்டு, மொபைல் போனில் பேசியுள்ளார். பணப்பிரச்னையில் திட்டியதால், அருகிலிருந்த ரயில் கடவுபாதைக்கு சென்று, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் இறப்பிற்குப் பின், மோட்டார் சைக்கிளை தேடிய போலீசார், அதை, அதிமுக பிரமுகர் வீட்டு முன் கண்டுபிடித்தனர். அதை, வழக்கின் ஒரு ஆவணமாக வைத்துக்கொள்ளாமல், அதை, முத்துக்குமாரசாமி குடும்பத்திடம் ஒப்படைத்தது ஏன்? என்பது பாதிக்கப்பட்டவர்களின் கேள்வியாகும்.

முத்துக்குமாரசாமியின் வீட்டுக்கு ஆள் அனுப்பி, அவர் மகன்களிடம், குடும்ப பிரச்னையில், தற்கொலை என்பது போல், கடிதம் பெறச்சொன்ன அதிகாரிகள் யார், யார்? இந்த அதிகாரிகள் குறித்து, என்ன விசாரணை நடத்தப்பட்டுள்ளது?

முத்துக்குமாரசாமியிடம் பணம் கேட்டு நச்சரித்த, தகாத வார்த்தைகளால் திட்டிய அதிமுகவினரில் ஒருவருக்கு கூட, இதுவரை, நோட்டீஸ் அனுப்பி விசாரிக்காதது ஏன்?

முத்துக்குமாரசாமி, பலராலும் மிரட்டப்பட்டதற்கு, ஆதாரங்கள் குவிந்து கிடக்கிறது ஆனால், எந்த வித வலுவான ஆதரங்களையும் சமர்ப்பிக்காமல் சிபிசிஐடி மெத்தனமாக நடந்து கொண்டதாலேயே அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்பது முத்துக்குமாரசாமி குடும்பத்தினரின் குமுறலாகும்.

பலவீனமாக வழக்கை விசாரணை செய்து, பலவீனமான வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துள்ளார்கள். கண்துடைப்பு நடவடிக்கைகளாகச் சிலவற்றைச் செய்து காப்பாற்றும் முயற்சியாகத்தான் இதனை பார்க்க வேண்டியுள்ளது என்பதால், முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாகும்.

குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரை நீக்கி தாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று நிரூபித்த ஆளும் அதிமுக அரசு, முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுமா?

English summary
Demanding CBI enquiry into the case pertaining to the suicide of Agricultural Engineering Executive Engineer S. Muthukumarasamy. With the court dismissing the Agri Krishnamoorthy case in the pretext of insufficient evidence submitted by the CBCID.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X