For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவல்நிலையத்தில் பெண்ணின் பாலுறுப்பில் சித்திரவதை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில் பெண் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்யுமாறு சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால நஷ்ட ஈடாக ரூ. 2 லட்சத்தை வழங்கவேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் லீலாவதி என்ற பெண்மணி கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து அவரது வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த ஹோட்டல் தொழிலாளியான சந்திரா என்கிற நடுத்தர வயது பெண்மணியை உடுமலைப்பேட்டை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் பல நாட்கள் அடைத்து வைத்து 7 காவலர்கள் விசாரணை என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக அவரை பலவகைகளில் சித்ரவதை செய்துள்ளார்கள்.

அவருடைய விரல் நகக்கண்களில் ஊசியால் குத்திய தோடு, அவரை தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய மர்ம உறுப்பில் காவல் துறையினர் லத்தியால் குத்தி சித்ரவதை செய்துள்ளனர். இதனால் ரத்தம் வடிந்திருக்கிறது. இத்தகைய கடுமையான சித்ரவதை செய்து லீலாவதி படுகொலை குறித்து ஒரு ஒப்புதல் வாக்குமூலம் காவல்துறையினர் பெற்றுள்ளனர்.

மகள் வழக்கு

இது குறித்து தகவலறிந்து மதுரை மாவட்டம், மேலூரில் வசிக்கும் அவருடைய மகள் பி.ராஜகுமாரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், "எனது தாய் சந்திரா உடுமலைப்பேட்டையில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி, எனது தாய் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது குறித்து விசாரணை செய்வதற்காக எனது தாயை உடுமலைப்பேட்டை போலீஸார் அழைத்துச் சென்றதாக எனது தாய் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

அவ்வாறு அழைத்துச் சென்ற எனது தாயை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சித்திரவதை செய்துள்ளனர். எனவே, போலீஸ் காவலில் வைத்து எனது தாய் சித்திரவதை செய்யப்பட்டது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கவும் உத்தரவிட வேண்டும்'' என கோரப்பட்டிருந்தது.

நீதிபதி உத்தரவு

இந்த வழக்கு விசாரணை நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு புதன்கிழமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

போலீஸ் காவலுக்கு உத்தரவிட்ட நீதிபதியின் அறிக்கை, உடுமலைப்பேட்டை மருத்துவமனையின் அறிக்கை, கோவை அரசு மருத்துவமனையின் அறிக்கை, கோவை மாவட்ட நான்காவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் அறிக்கை ஆகியவற்றைப் பார்க்கும்போது, சந்திராவின் உடலில் காயங்கள் இருப்பதைப் பதிவு செய்துள்ளது தெரியவருகிறது. இதை உடுமலைப்பேட்டை காவல் ஆய்வாளர் மறுக்க முடியாது.

இதை மறைப்பதற்காக சந்திரா போதையில் கீழே விழுந்ததால், அவரது உடலில் காயம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தது தெரிய வருகிறது.

சந்திராவின் உடலில் காயங்கள்

சந்திரா உடலில் உள்ள காயத்துக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது மட்டுமில்லாமல், வழக்கு விசாரணைக்கும் சட்ட ரீதியான குறுக்கீடு தேவை என இந்த நீதிமன்றம் கருதுகிறது. சந்திராவின் உடலில் காயங்கள் இருப்பதை கவனித்த கோவை மாவட்ட இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை உடுமலைப்பேட்டை போலீசார் பின்பற்றினார்களா என்பதை கவனிக்கத் தவறிவிட்டார்.

அடித்து காயப்படுத்திய போலீசார்

கோவை மத்திய சிறையின் மருத்துவ அதிகாரி "பிவிசி' பைப்பை பயன்படுத்தியால்தான் சந்திராவின் உடலில் காயங்கள் ஏற்பட்டது என்பதை தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கையைப் பார்க்கும்போது குற்றவியல் நீதிமன்றம் தனது கடமையை முறையாகச் செய்யவில்லை என்பது தெரிகிறது. அதனால், அவர்களிடம் வழக்கு விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஏழைப்பெண்ணின் அழுகுரல்

அதேபோன்று முதலாவது குற்றவியல் நீதிமன்றம் அதை விட மோசம். சந்திரா பாத்திரம் கழுவி தனது பிழைப்பை நடத்தி வருகிறார். அவரது கணவர் படுத்த படுக்கையாக மகளோடு வசித்து வருகிறார்.

இத்தனை கஷ்டங்களோடும், அழுகுரலோடும் சந்திரா உதவி கோரியது நீதிமன்றம், போலீசாரின் காதுகளில் கேட்கவில்லை. சந்திராவின் குற்றச்சாட்டுகள் கடுமையாக உள்ளன.

போலீஸ் மீது வழக்கு

குற்றச்சாட்டுகளின் தன்மையைப் பார்க்கும்போது, அது குறித்து விசாரணை செய்ய வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தால் மட்டுமே சரியாக இருக்கும்.

சந்திரா கூறும் போலீஸ் அதிகாரிகள் மீது சிபிஐ உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

சிபிஐ விசாரணை

இது குறித்து விசாரணை செய்ய சிபிஐ இணை இயக்குநர் பதவிக்கு குறைவில்லாத அதிகாரியை சிபிஐ ஆணையர் நியமனம் செய்ய வேண்டும். அவர், சந்திரா கூறும் கருத்துகளைப் பதிவு செய்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்.

ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு

பல்நோக்கு மருத்துவமனையின் எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சைத் துறை டாக்டர் அளித்த அறிக்கையில் சந்திராவின் உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 3 வாரங்களுக்கு மேல் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இதைப் பார்க்கும்போது போலீஸ் காவலில் இருக்கும் போதுதான் எலும்பு முறிவு ஏற்பட்டது என்பது உண்மையாகிறது. இதற்கு இடைக்கால நஷ்ட ஈடாக ரூ. 2 லட்சத்தை தமிழக அரசு சந்திராவுக்கு வழங்க வேண்டும்.

சந்திராவின் ஜாமீன் மனு

அனைத்து மருத்துவமனைகளின் ஆவணங்களையும் ஆய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள் விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சந்திராவின் ஜாமீன் மனுவை ஒரு வாரத்துக்குள் முடித்து வைக்க வேண்டும். மேலும், இரண்டு வாரங்களுக்குள் ரூ. 2 லட்சத்தை சந்திராவிடம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

English summary
The Madras high court on Wednesday directed the CBI to probe the charges of custodial torture and rape of a middle-aged woman accused of murder in Udumalpet police station in Tiruppur district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X