For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரள மாணவர்களின் இரட்டை இருப்பிட சான்றிதழ் ஊழல்.. சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை

இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வியாபம் ஊழல் போலவே இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாணவர்கள் சிலர் போலி இருப்பிட சான்றிதழைக் கொடுத்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர முயன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வால் ஏற்கனவே மன வேதனையில் உள்ள தமிழக மாணவர்களையும் பெற்றோர்களையும் இது அதிர வைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் தலையிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

CBI probe into duplicate residential certificate issue

இரட்டை இருப்பிடச் சான்றிதழ்கள் மூலம் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மத்திய அரசு திணித்த நீட் தேர்வு மூலம் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக மாணவர்களுக்கு, மாநிலத்தில் உள்ள குதிரை பேர அரசின் சார்பில், 'குட்கா' புகழ் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மெரிட் லிஸ்ட் முறைகேடுகளால், மிகப்பெரும் அநீதியை இழைக்கப்பட்டு இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் மருத்துவக் கனவு இதன்மூலம் அடியோடு தகர்க்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 'இருப்பிடச் சான்றிதழ்கள்' வழங்குவது பற்றி தெளிவான வழி காட்டுதல்கள் உள்ளன. இருப்பிடச் சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரி கொடுத்து, அதை சம்பந்தப்பட்ட மாணவர் வசிக்கும் தாலுகாவின் தாசில்தார்தான் இறுதியாக கையெழுத்திட்டு வழங்க வேண்டும்.

அப்படி வழங்கும்போது, அந்த மாணவரின் பெற்றோர் இருப்பிடம் தொடர்ந்து 5 வருடங்கள் தமிழகத்தில் இருந்துள்ளதா என்பதை பாஸ்போர்ட், ரேசன் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் மூலம் உறுதிசெய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, தமிழ் மொழி பேசாத மாணவர்களுக்கு 'இருப்பிடச் சான்றிதழ்' வழங்கும்போது, அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அட்மிஷன் வழிகாட்டுதல்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இப்படியிருந்தும், எப்படி "இரட்டை இருப்பிடச் சான்றிதழ்கள்" பெறப்பட்டன? தாசில்தார்களை மிரட்டி, இதுபோன்ற சான்றிதழ்களைக் கொடுக்க வைத்தது யார்? என்ற கேள்விகள் எழுகின்றன. இந்தச் சான்றிதழின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான மெரிட் லிஸ்டை வெளியிட்ட போது, அந்தத் தகுதிப் பட்டியலைத் தயாரிக்கும் தேர்வு கமிட்டியின் உறுப்பினர்களும், செயலாளரும் ஏன் போதிய கவனம் செலுத்தவில்லை?.

'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்' அளித்த வெளிமாநில மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பட்டியலைத் தேர்வு கமிட்டி ஏன் கண்ணை மூடிக்கொண்டு தயாரித்தது? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு நிர்வாக ஒதுக்கீட்டில் மட்டும் 900த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 'இரட்டை இருப்பிட சான்றிதழுடன்' எப்படித் தேர்வு செய்யப்பட்டார்கள்? இதுபோன்றச் சான்றிதழ்களை வைத்து தேர்வுசெய்ய தேர்வுக் கமிட்டிக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு என்ற அடிப்படையில் உள்ள 3382 இடங்களில், சிறப்புப் பிரிவுகளான விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை என்றும், அந்த இடங்கள் எல்லாம் பொதுப்பிரிவில் இருப்போருக்கு சென்றுவிட்டன என்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது.

கழக ஆட்சியில் வழங்கப்பட்ட இஸ்லாமிய சமுதாயத்திற்கான உள் இட ஒதுக்கீட்டின்படி தன் மகளுக்கு சீட் கிடைக்கவில்லை என்றுகூறி, 'இரட்டை இருப்பிட சான்றிதழ்' அளித்து, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக இருக்கும் அம்ஜத் அலி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். போலி 'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்' அளித்தோர் பற்றி விசாரிக்க சுகாதாரத்துறை மூலமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், அரசு சுகாதாரத்துறையின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் வெறும் கண் துடைப்பாக மாறி விடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

கிராமப்புற மாணவர்கள், விளையாட்டுப் பிரிவில் சாதனைகள் படைத்த மாணவர்கள், 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் எதிர்காலத்தை பாழடித்து, "போலி" இரட்டை இருப்பிடச்சான்றிதழ் மற்றும் முறைகேடான தேர்வு மூலம் வேறு மாநிலத்தவரை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களில் சேருவதற்கு 'குதிரை பேர' அதிமுக அரசு துணை போயிருப்பது கண்டனத்திற்குரியது. போலி 'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்' வழங்கினால், அந்த மாணவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ இடம் ரத்து செய்யப்பட்டு, மாணவர் மீதும் அவரது பெற்றோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி சேர்க்கை (PROSPECTUS) விதி 3(h)-ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வியில் சேருவதற்கு ஒரு கோடி ரூபாய் வரை விலை போகிறது என்ற நிலையில், அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரும் மாணவருக்கு வருடாந்திர கட்டணம் ரூ13,600 என்றும், பி.டி.எஸ் மாணவருக்கு கட்டணம் ரூ11600 என்றும் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுவதற்கு வசதியாக இப்படி போலி 'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்' கொடுத்தவர்கள் தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்களோ என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

ஒரு மெடிக்கல் சீட் வெளியில் ஒரு கோடி ரூபாய் என்று எடுத்துக் கொண்டால், இப்படி இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் "தகுதி பட்டியலில்" இடம்பெற்றுள்ளவர்கள் மூலம் நடைபெற்றுள்ள ஊழல், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற "வியாபம்" ஊழலை விட மோசமானதாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த இமாலய முறைகேடால், இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதிக் கொள்கைகள் எல்லாம் 'குதிரை பேர' அரசால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்பார்த்தே துவக்கத்தில் இருந்து தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்றும், மருத்துவக் கல்வியில் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கும் முறையே தொடர வேண்டும் எனவும் திமுக தொடர்ந்துப் போராடி வருகிறது.

ஆகவே, 'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்' மூலம் மருத்துவக் கல்லூரிகளுக்கான "தகுதி பட்டியலில்" இடம்பெற்றுள்ளவர்கள் பற்றி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏதோ ஒன்று, இரண்டு பேர் இப்படிக் கொடுத்து விட்டார்கள் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுப்பதால் இந்த முறைகேடுகளின் மொத்த உருவமும் வெளிச்சத்திற்கு வராது.

ஆகவே "இரட்டை இருப்பிட சான்றிதழ்" வழங்கக் காரணமாக இருந்தோர், தகுதிப் பட்டியலை வெளியிட்ட தேர்வுக் கமிட்டியில் இடம்பெற்றோர், தேர்வுக் கமிட்டிக்கு நிர்பந்தம் கொடுத்தோர் உள்ளிட்ட அனைவர் மீதும் தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியதிருப்பதாலும், 'இரட்டை இருப்பிடச் சான்றிதழ்' என்பது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரமாக இருப்பதாலும், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீடுகளில் சேருவதற்கு 22.8.2017 அன்று வெளியான "தகுதிப் பட்டியல்" குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பில் இருக்கும் மாண்புமிகு பொறுப்பு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
TN Opposition leader MK Stalin has sought a detailed CBI probe into duplicate residential certificate issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X