For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஸ்வரூபமெடுக்கிறது சாதிக் பாட்ஷா தற்கொலை விவகாரம்? சி.பி.ஐ.யின் திடீர் ரெய்டுகளால் பரபரப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

பெரம்பலூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீதான ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய சாட்சியமாக கருதப்பட்ட, தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்ஷா மற்றும் அவரது நெருங்கிய நண்பர் சுப்புடு ஆகியோரது வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதிக் பாட்ஷா தற்கொலை விவகாரத்தை சி.பி.ஐ. தூசு தட்டுவதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெக்டரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. சென்னையில் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் அவர் இருந்தார்.

CBI raids Raja's aide Sadiq Batcha's house

சாதிக் பாட்ஷாவின் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் ஆ. ராசாவின் மனைவி புவனேஸ்வரி முதலில் பங்குதாரராக இருந்தார். பின் அவர் விலகிக் கொள்ள ஆ.ராசாவின் சகோதரி மகன் பரமேஸ்குமார் இந்த நிறுவனத்தில் முக்கிய பங்குதாரரானார்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மூலமாக ஆதாயமாக ஆ. ராசா பெற்றதாக கூறப்படும் பணம் இந்த கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதாக சி.பி.ஐ. கருதுகிறது. ரூ1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் 5 ஆண்டுகளில் ரூ600 கோடி வருவாய் ஈட்டியது இந்த ஆதாயப் பணத்தில்தான் என்பது சி.பி.ஐ. குற்றச்சாட்டு.

இதனால்தான் சாதிக் பாட்ஷாவின் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் மீது சி.பி.ஐ. வலை விரிக்கப்பட்டது. சாதிக்பாட்ஷாவும் டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

ஆனால் டெல்லியில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நாளில் அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதியன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் சாதிக் பாட்ஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது ஸ்பெக்ட்ரம் வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாதிக் பாட்ஷாவின் தற்கொலை குறித்து பல்வேறு யூகங்களும் எழுந்தன. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாதிக் பாட்ஷா அப்ரூவராக மாற இருந்ததாகவும் ஆனால் சிலரது நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டதாகவும் கூட தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பான வழக்கில் சாதிக் பாட்ஷா தற்கொலைதான் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ.யும் தெரிவித்ததால் இந்த விவகாரம் சற்றே ஓய்ந்திருந்தது.

இந்த நிலையில் ஆ. ராசா மீது புதியதாக சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர்ந்துள்ளது சி.பி.ஐ. இதைத் தொடர்ந்து டெல்லி, பெரம்பலூர் உட்பட 15 இடங்களில் சி.பி.ஐ. இன்று அதிரடி சோதனை நடத்தியது.

அதே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்ஷாவின் பெரம்பலூர் வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர் சுப்புடு என்பவரது வீட்டிலும் பல மணிநேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இந்த ஆவணங்கள் ஆ. ராசா வழக்கு தொடர்பானதா? அல்லது சாதிக் பாட்ஷாவின் மரணம் தொடர்பானதா? எனத் தெரியவில்லை. இருப்பினும் சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து 4 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது வீடு, நண்பர் வீடுகளில் சி.பி.ஐ. திடீரென சோதனை நடத்தியிருப்பது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

English summary
CBI officials had raided Former telecom minister A Raja's aide Sadiq Batcha's house in Perambalur who was committed suicide on Mar 16, 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X