For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.75 கோடி மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சிங்கப்பூர் தொழிலதிபர்களிடம் சுமார் 75 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் அதிமுக முன்னாள் எம்.பி.யும், தொழிலதிபருமான கே.சி.பழனிச்சாமி, அவரது மகன் சுரேந்தர் உள்ளிட்ட ஆறு பேர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதில் பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிச்சாமி, கடந்த 2004ம் ஆண்டு, தங்களுடன் சேர்ந்து கூட்டு நிறுவனம் தொடங்கி, ரூ.75 கோடி மோசடி செய்து விட்டதாக, சிங்கப்பூர் தொழிலதிபர் ஆதப்பன் மற்றும் மொரீஷியஸைச் சேர்ந்த ரத்தினசாமி ஆகியோர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்திருந்தனர்.

CCB files chargesheet against ex-AIADMK MP

இந்த வழக்கில், ஏற்கனவே கே.சி.பழனிச்சாமி கைதாகி, நீதிமன்ற ஜாமீனில் விடுதலையாகி விட்டார். இந்த வழக்கில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளர் ஏ.வி.சீனிவாசன், சென்னை எழும்பூரிலுள்ள பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்துள்ள விசாரணை இறுதி அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கே.சி.பழனிச்சாமி கடந்த 2004ம் ஆண்டு, சிங்கப்பூர் தொழிலதிபர் ஆதப்பன் மற்றும் ரத்தினசாமியின் ஓரி நிறுவனத்துடன் சேர்ந்து, சேரன் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனம் ஒன்றை துவங்கினார். இதில் தனது குடும்பத்துக்கு சொந்தமான சேரன் பிராப்பர்டீஸ் நிறுவனம் மற்றும் வசந்தா மில்ஸ் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்த சுமார் 100 கோடி பெறுமானமுள்ள அசையா சொத்துக்களை, சேரன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டார்.

ஆதப்பன் மற்றும் ரத்தினசாமி ஆகியோர் இணைந்து சுமார் ரூ.75 கோடி முதலீடு செய்தனர். இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு சென்னையிலுள்ள ஏ.பி.என்.அம்ரோ வங்கியில் பராமரிக்கப்பட்டது.

பழனிச்சாமியும், ஆதப்பன் மற்றும் ரத்தினசாமி செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தில், பழனிச்சாமியிடமுள்ள ரூ.100 கோடி பெறுமானமுள்ள அசையா சொத்தில், ஓட்டல் மற்றும் ஐ.டி.நிறுவனம் உள்ளிட்ட வணிக நிறுவனமாக மாற்றும் நடவடிக்கைக்காக மட்டும், முதலீட்டு தொகை 75 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு காசோலையில், எந்த நிபந்தனையுமின்றி பழனிச்சாமி கையெழுத்திடலாம் என ஒப்பந்தத்தில் முதலில் கூறப்பட்டிருந்தது.

பின்னர் இந்த ஒப்பந்தம் மாற்றப்பட்டு, மொத்தம் 45 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்கப்பட்டால் அதற்கு, ஆதப்பன் மற்றும் ரத்தினசாமியின் ஒப்புதல் பெற வேண்டும் எனக் கூறப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத் திருத்தத்தை வங்கியில் காட்டாமல், கே.சி.பழனிச்சாமி, தனது கையெழுத்திடும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 75 கோடி ரூபாயையும் (ரூ.இரண்டு லட்சத்து 39, 448 தவிர)தொகையையும், தனக்கு வேண்டிய பல்வேறு நிறுவன வங்கிக் கணக்குகளுக்கு காசோலை மூலம் மாற்றி, மோசடி செய்து விட்டார்.

இதற்கு ஒப்பந்த ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்தும் சான்றாக உள்ளன. மேலும் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அம்சத்துக்காக பணத்தை செலவு செய்யாமல், முதலீட்டாளர்களுக்கு தெரியாமல் பணத்தை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டார்.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் மற்றும் பணம் டெபாசிட் செய்யப்பட்ட நிறுவனங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனவே, கே.சி.பழனிச்சாமி, அவரது மகன் சுரேந்தர் கவுண்டர், அவரது சார்பு நிறுவனங்களின் நிர்வாகிகள் கே.கே.சிவக்குமார், ஒய்.விஜயன், வி.கவிதா மற்றும் சி.சிவக்குமார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையென தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில், கே.சி.பழனிச்சாமி மீது, இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 403, 406, 418, 420, 465, 468, 471, 477 ஏ, 120 பி, 423, 511 ஆகிய பிரிவுகளில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Chennai central crime branch (CCB) police filed a chargesheet against former AIADMK MP K.C. Palanisamy in connection with the charge of cheating a Mauritius-based company of Rs 75 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X