For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி: 6 வாரங்களுக்குப் பிறகு மத்திய அரசு விளக்கம் கேட்பது கடைந்தெடுத்த மோசடி : ராமதாஸ்

காவிரி விவகாரத்தில் ஆறுவாரங்களுக்குப் பிறகு மத்திய அரசு விளக்கம் கேட்பது கடைந்தெடுத்த மோசடி என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில், தீர்ப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு புதிய மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது கடைந்தெடுத்த மோசடி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது. அதற்கு ஆறு வார கால அவகாசமும் அளித்தது. ஆனால், இன்றுடன் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

 மேலாண்மை வாரியமா ? திட்டமா ?

மேலாண்மை வாரியமா ? திட்டமா ?

காவிரிப் பிரச்சினை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பை அடுத்த ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் பல இடங்களில் 'திட்டம்' என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திட்டம் என்பதே காவிரி மேலாண்மை வாரியம் தான் என்பதை நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் 216 முதல் 236 வரை நீளும் எட்டாவது அத்தியாயத்தை முழுமையாகப் படித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.

 கழுத்தை அறுக்கும் செயல்

கழுத்தை அறுக்கும் செயல்

இதற்கெல்லாம் மேலாக பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கில் தமிழகத்தின் கோரிக்கையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான். அவ்வாறு இருக்கும் போது உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள திட்டம் என்பது மேலாண்மை வாரியம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை இதில் மத்திய அரசுக்கு ஏதேனும் ஐயம் இருந்தாலும் கூட தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருக்க முடியும். ஆனால், ஆறு வாரங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது உச்சநீதிமன்றத்தை அணுகுவது நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் செயலாகத்தானே இருக்க முடியும்.

 தேர்தலை மனதில் வைத்தே நாடகம்

தேர்தலை மனதில் வைத்தே நாடகம்

கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அங்கு அரசியல் லாபம் தேடும் நோக்குடன் தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய பாரதிய ஜனதா அரசு மறுக்கிறது. அதேநேரத்தில் இந்த வி‌ஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இப்போது விளக்கம் கேட்கும் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட வேண்டியது காவிரி மேலாண்மை வாரியமா? ஸ்கீமா? என்பது தொடர்பாக மத்திய அரசுக்கு எந்தக் குழப்பமும் இல்லை; இவ்வி‌ஷயத்தில் மத்திய அரசு கடைபிடிப்பது காலம் கடத்தும் அணுகுமுறை தான் என்பதற்கு ஆயிரம் உதாரணங்களைக் கூற முடியும்.

 மூன்று மாநிலங்களின் கருத்து

மூன்று மாநிலங்களின் கருத்து

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வி‌ஷயத்தில் மத்திய அரசு முதன் முதலில் கருத்துக் கூறியது பிப்ரவரி 27ம் தேதி தான். ஆங்கில நாளிதழில் வெளியாகியிருந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் சிறப்பு நேர்காணலில் ஒரு இடத்தில் கூட திட்டம் என்று குறிப்பிடவில்லை; காவிரி மேலாண்மை வாரியம் என்று தான் குறிப்பிட்டிருந்தார். அதன்பின் மார்ச் 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கூட, ‘‘இந்தப் பிரச்சினைக்கு மற்ற 3 மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு முடிவெடுக்கப்படும். இதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை'' என்று தான் மத்திய நீர்வளத் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் விளக்கமளித்திருந்தார்.

 இரண்டும் ஒன்று தான்

இரண்டும் ஒன்று தான்

கடைசியாக நேற்று முன்நாள் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்த அவர், ‘‘காவிரி திட்டம் என்பதும், காவிரி மேலாண்மை வாரியம் என்பதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்று தான்'' என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அடுத்த 2 நாட்களுக்குள் எல்லா தெளிவும் விலகி, குழப்பம் சூழ்ந்து விட்டதைப் போல உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப் போவதாக மத்திய அரசு கூறுவதைப் பார்க்கும் போது, ‘‘ நல்ல நாடகம் நடக்குது'' என்பதை உணர்ந்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

 ராஜினாமா செய்து அழுத்தம்

ராஜினாமா செய்து அழுத்தம்

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகத்திற்கு சற்றும் குறையாதது மாநில அரசின் துரோகம். தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றுகிறது என்பதும், துரோகம் செய்கிறது என்பதும் நன்றாகத் தெரிந்தும் அதற்கு எதிராக வாயைத் திறப்பதற்குக்கூட தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. மாறாக சொல்லிக் கொடுக்கப்பட்ட கிளிப் பிள்ளையைப் போல, ‘‘உச்சநீதிமன்றம் கொடுத்த அவகாசம் முடியும் வரை காத்திருப்போம்'' என்பதையே மீண்டும், மீண்டும் கூறி வந்தனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி மத்திய அரசுக்கு அழுத்தம் தரலாம் என்ற யோசனை அவர்களின் காதுகளில் விழவில்லை.

 இன்று இரவுக்குள் வாரியம்

இன்று இரவுக்குள் வாரியம்

உச்சநீதிமன்றம் விதித்தக் கெடு இன்றுடன் முடிவடைந்து விட்ட நிலையில் நாளைக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விட்டு அமைதியாக ஊழல் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்யமாட்டார்கள். இவர்கள் தான் தமிழகத்தின் சாபம். காவிரிப் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு இழைத்த துரோகத்தை தமிழக மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். எனவே, உச்சநீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்து மக்களை ஏமாற்றுவதை விடுத்து உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்று இரவுடன் முடிவடைவதற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Central Government is trying to fool us says Ramadoss. PMK Founder Ramadoss says that, Central Government's plea on Supreme Court for seeking explanation on Cauvery issue after sizx months is a planned drama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X