For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேது சமுத்திர திட்டம் தாமதத்திற்கு காரணம் தமிழக அரசுதான்: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சேது சமுத்திர திட்ட வழக்கில் தமிழக அரசின் மனு, அத்திட்டம் செயல்படுத்துவதை தாமதப்படுத்தும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் 8வது தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தக்ஷின் பாரத் கேட்வே சரக்கு பெட்டக முனைய தொடக்கவிழா மற்றும் சாதனை படைத்த துறைமுக நுகர்வோர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இன்று நடைபெற்றது.

விழாவில், திட்டப்பணிகளை மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் துவக்கி வைத்தும், சாதனை படைத்த துறைமுக நுகர்வோர்களுக்கு விருது வழங்கியும் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் கூறியதாவது, உலக அளவில் பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவியபோதும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அதிக சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.

சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது இத்திட்டத்தை தாமதப்படுத்தும் செயலாகும். தமிழக அரசு சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பது சரியானது அல்ல.

இத்திட்டம் தென்மாவட்ட மக்களின் கனவு திட்டம் மட்டுமல்ல, தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டமாகும். இத்திட்டத்தால் நம் நாட்டின் பொருளாதாரம் உயரும். இத்திட்டத்தால் கப்பல் போக்குவரத்தும் பெருகும். எனவே இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு மிகுந்த முனைப்பு காட்டுவதுடன், துரிதமாக எடுத்தும் செயல்படுத்தும்.

மத்திய அரசின் சிறப்பான திட்டங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெற்றியை தேடித்தரும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள மக்கள் காங்கிரஸின் பிரதம வேட்பாளராக இளம்தலைவர் ராகுல்காந்தியை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனை பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார். இளம்தலைவர் ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அணி முதலிடத்தில் வெற்றிபெறும்.

சோமாலியா கொள்ளையர்கள்

சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் பணயக்கைதிகளாக சிக்கியுள்ள 8மாலுமிகளை மீட்க இந்திய அரசாங்கம் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் அவர்களிடம் 3வருடமாக சிக்கியிருப்பது வருத்தம் அளிக்கிறது.

மீனவர்கள் பிரச்சினை

தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரத்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசால் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இருதரப்பிலும் பேச்சுவார்த்தை மூலமாக சுமூகமான நிலையை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு வழக்கம்போல அரசியலாக்கி எதிர்க்காமல் ஆதரவு தரவேண்டும்.

இதுபோன்று தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசிற்கு ஆதரவு அளித்து துணை நிற்கவேண்டும். இப்படி எல்லோரும் இணைந்து செயல்பட்டால்தான் தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகுக்கமுடியும் என்று கூறினார்.

சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த, 2005ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், முதலாவது ஆட்சியின் போது, சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்டது. 2,100 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, இந்தத் திட்டம் துவக்கப்பட்டது.நாட்டின் மேற்குப் பகுதியிலிருந்து வரும் கப்பல்கள், இலங்கையைச் சுற்றி வராமல், நேரடியாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரவேண்டும் என்பதற்காகவே, இந்தத் திட்டம் துவக்கப்பட்டது.

Centre keen on Sethu project, says Vasan

திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின், சிலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், ராமர் பாலம் இடிபடும் என, காரணம் கூறினர். இந்த வழக்கை விசாரித்த, உச்சநீதிமன்றம் , பொதுமக்களின், மத உணர்வுகளை காயப்படுத்தாத வகையில், இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என, கேள்வி எழுப்பியது. இந்த அறிவுரையை தீவிரமாக பரிசீலித்து, மாற்றுப் பாதையில், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, 4ஏ என்ற பாதையை தேர்வு செய்து, அந்தப் புதிய பாதை வழியாக, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம் என, தீர்மானித்தது.

இதையடுத்து, அந்த புதிய பாதையில், சுற்றுச்சூழல் குறித்து ஆராய்ந்து, அறிக்கை அளிக்கும்படி, பிரபல நிபுணர் பச்சோரி தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டது. 2007ல் அமைக்கப்பட்ட கமிட்டி, பல்வேறு ஆய்வுகளுக்கு பின், 2013ல் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், சேது சமுத்திர திட்டத்தால், பயன் ஏதும் இல்லை என, குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டத்திற்காக, 2007ம் ஆண்டு வரை, 767 கோடி ரூபாயை, மத்திய அரசு செலவிட்டுள்ளது.

வழக்கு காரணமாக, அப்படியே பணிகள் நிலுவையில் உள்ளன. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு உறுதியாக உள்ளது.இந்நிலையில், இத்திட்டத்திற்கு எதிராக, தமிழக அரசு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவேதான் மத்திய அமைச்சர். ஜி.கே. வாசன் சேது சமுத்திர திட்டம் தாமதமாவதற்குக் காரணம் தமிழக அரசு என்று கூறியுள்ளார்.

English summary
The Centre is keen on implementing Sethusamudram Ship Canal Project (SSCP) as it will not only benefit Tamil Nadu but also lead to a spurt in economic development of the country, Union Shipping Minister G.K.Vasan has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X