For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா அணை கட்ட மத்திய அரசு தடை விதிக்க அம்மாவின் முயற்சிகளே காரணம்: தமிழக அரசு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணை கட்ட கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணை கட்ட கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Centre stops Kerala's Siruvani dam plan,Thanks to Jaya- TN govt.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுனர் மதிப்பீட்டுக் குழு தனது 96-வது கூட்டத்தில், கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணை கட்டும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு நிலையான ஆய்வு வரம்புகளை மத்திய அரசு வழங்கலாம் என்று அளித்த பரிந்துரையை தற்போது மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், "இந்த பிரச்சினை குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆய்வு செய்தது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான நடுவர் மன்ற இறுதி ஆணையை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் முடிவுறும் வரையிலோ அல்லது தமிழ்நாடு அரசின் இசைவினை பெறும் வரையிலோ, வல்லுனர் மதிப்பீட்டுக்குழுவின் பரிந்துரையை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு ஜூன் மாதம் அட்டப்பாடி பாசனத்திட்டத்திற்காக கேரள அரசு அணை ஒன்று கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறது என ஊடகங்களில் செய்திகள் வந்ததை அடுத்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா அன்றைய பிரதமருக்கு 21.6.12 அன்று கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்த கடிதத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் மீது உச்ச நீதிமன்றத்தில், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தில் விளக்கங்கள் கோரும் மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் வரையிலோ அல்லது நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரையிலோ கேரள அரசு எந்த ஒரு திட்டத்தையும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கேரள அரசுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டதுடன், மத்திய நீர் வளக்குழுமம் எந்த ஒரு தொழில்நுட்ப அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து தமிழக அரசால் இது குறித்து மத்திய அரசுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. 19.9.13 அன்று தமிழ்நாடு அரசுக்கு மத்திய நீர் ஆதார அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவினைப் பெற்ற பின்னர், காவிரி நடுவர் மன்றத்தின் இசைவைப் பெறும்படி கேரள அரசு கேட்டுக்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுனர் மதிப்பீட்டுக் குழு, 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெற்ற 92-வது கூட்டத்தில், அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்வதற்கான நிலையான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு கேட்டுக்கொண்ட கோரிக்கைக்கு, தமிழ்நாடு அரசின் கருத்தைப் பெறுமாறும், தமிழ்நாடு அரசின் கருத்து பெறப்பட்டபின் தான், கேரள அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் முடிவு எடுத்தது.

இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுனர் மதிப்பீட்டுக்குழு 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெற்ற 96-வது கூட்டத்தில் கேரள அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு செய்வதற்கான நிலையான ஆய்வு வரம்புகளுக்கு அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது.

மத்திய நீர் ஆதார அமைச்சகத்தின் 19.9.13 நாளிட்ட கடிதத்திற்கும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுனர் மதிப்பீட்டுக்குழுவின் மார்ச் மாதம் 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெற்ற கூட்ட முடிவிற்கும் முரணானதாக இந்த பரிந்துரை அமைந்தது.

இக்குழு தமிழ்நாட்டின் கருத்தினைப் பெறாமல் முடிவெடுத்துள்ளது என்பதைத் தெரிவித்தும், மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடம் இருந்து தமிழ்நாடு அரசுக்கு இதன் தொடர்பாக கடிதங்கள் ஏதும் வரவில்லை என்பதை எடுத்துரைத்தும், அவ்வாறு கடிதங்கள் அனுப்பப்பட்டிருப்பதாக இக்குழுவின் நடவடிக்கை குறிப்பில் குறிப்பிட்டிருப்பது, உண்மைக்கு மாறானதாகும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 27.8.16 அன்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தார்.

மேலும், இப்பிரச்சினையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, வல்லுனர் மதிப்பீட்டுக் குழு, இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான நிலையான ஆய்வு வரம்புகள் வழங்குவதற்கு அளித்த பரிந்துரையை உடனடியாக திரும்பப்பெற மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் அதனைச் சார்ந்த முகமைகளுக்கு அறிவுரை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைக்கு வரும் வரையிலும் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இறுதியாக்கம் செய்யப்படும் வரையிலும், கேரள மற்றும் கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் நீர் ஆதார அமைச்சகம் ஆகியவை அனுமதி அளிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தலைமைச் செயலாளர், மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கும் மற்றும் நீர் ஆதார அமைச்சகத்திற்கும் இதே கருத்துக்களை வலியுறுத்தி 30.8.16 அன்று கடிதம் அனுப்பினார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுதொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை 2.9.16 அன்று தமிழ்நாடு சட்டசபையில் முன்மொழிந்தார். அதன் அடிப்படையில், மத்திய நீர் ஆதார அமைச்சகத்தின் 19.9.13 நாளிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளபடியும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுனர் மதிப்பீட்டுக்குழுவின் 92-வது கூட்டத்தில் தெரிவித்துள்ள படியும்,

தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இசைவு இல்லாத நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக்குழு 96-வது கூட்டத்தில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கு நிலையான ஆய்வு வரம்புகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது என தமிழ்நாடு சட்டப்பேரவை மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றியது.

இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா அன்றைய தினமே பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றிய தீர்மானங்களை விரிவாக எடுத்துரைத்து, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் மத்திய நீர் ஆதார அமைச்சகம் ஆகியவற்றை இத்தீர்மானத்தின் அடிப்படையில் உடனடியாக மேல்நடவடிக்கை தொடர அறிவுறுத்தும்படி பிரதமரை கேட்டுக்கொண்டார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
TN government said in a statement that centre has stopped Kerala from building a dam across Siruvani river because of the efforts taken by CM Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X