For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிபிசிஐடி இயக்குநரை மாற்றி இருப்பதன் மூலம் நிர்மலா தேவி வழக்கை நீர்த்துப் போக முயற்சி : ராமதாஸ்

சிபிசிஐடி இயக்குநரை மாற்றி இருப்பதன் மூலம் நிர்மலா தேவி வழக்கை நீர்த்துப் போக முயற்சி நடப்பதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : சிபிசிஐடி தலைமை இயக்குநரை அவசர அவசரமாக மாற்றி இருப்பதன் மூலம் பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கை புதைக்க அரசும், ஆளுநர் மாளிகையும் சதி செய்கின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிர்மலா தேவி குறித்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அப்பிரிவின் தலைவரும், கூடுதல் தலைமை இயக்குனருமான ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பாலியல் வலை வழக்கின் குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆளுநர் மாளிகையுடன் இணைந்து அரசும் சதி செய்வது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

 நடவடிக்கை தாமதப்படுத்த முயற்சி

நடவடிக்கை தாமதப்படுத்த முயற்சி

பல்கலைக்கழக நிர்வாகத்திலுள்ள பெரிய மனிதர்களின் தேவைகளுக்காக கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதில், தமிழ்நாடு கமுக்கக் குற்றப்புலனாய்வுப் பிரிவின்(சி.பி.சி.ஐ.டி) கூடுதல் தலைமை இயக்குனராக இருந்த ஜெயந்த் முரளி ஒப்பீட்டளவில் நேர்மையான அதிகாரி ஆவார். அவரது மேற்பார்வையில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் தொடர்பாக மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் அவற்றைப் புறக்கணித்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுப்பது அவரது வழக்கமாகும்.

 குழி தோண்டி புதைக்க சதி

குழி தோண்டி புதைக்க சதி

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளுக்கு அதே கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் வலை வீசியது குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அப்பிரிவின் தலைவராக ஜெயந்த் முரளி நீடித்தால், பாலியல் வலையின் பின்னணியில் இருப்பவர்கள் அடையாளம் காணப்படலாம்; இந்த விவகாரத்தில் ஆளுனர் மாளிகைக்கு உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்கப்படலாம் என்பதாலேயே சி.பி.சி.ஐ.டி பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் பதவியிலிருந்து ஜெயந்த் முரளி நீக்கப்பட்டுள்ளார். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் பாலியல் வலை வழக்கை குழி தோண்டி புதைக்க சதி நடக்கிறது.

 சிபிசிஐடி புதிய தலைவர்

சிபிசிஐடி புதிய தலைவர்

சி.பி.சி.ஐ.டியின் புதிய கூடுதல் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள அம்ரேஷ் பூஜாரியின் கடந்த காலம் சர்ச்சைகள் நிறைந்ததாகும். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் உளவுத்துறை தலைவராக இருந்த அம்ரேஷ் பூஜாரி, அவர் மீது புகார்கள் எழுந்ததை அடுத்து அப்பதவியிலிருந்து 2015ஆம் ஆண்டு மாற்றப்பட்டார். பேராசிரியை மீதான பாலியல் வலை வழக்கிற்கு முடிவு கட்ட இவர் தான் சிறந்தவராக இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் சி.பி.சி.ஐ.டி.யின் தலைவராக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 சிபிசிஐடி தலைவர் மாற்றம்

சிபிசிஐடி தலைவர் மாற்றம்

பெரிய மனிதர்களின் தேவைக்காக ஏழை மாணவிகளை பலி கொடுக்க முயன்ற வழக்கு அருப்புக்கோட்டைக் காவல் நிலையத்திலிருந்து சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட போதே அந்த வழக்கை கிடப்பில் போட முயற்சிகள் நடப்பதாக குற்றஞ்சாற்றியிருந்தேன். ஆனால், இப்போது அந்த வழக்கிற்கு நிரந்தரமாக முடிவு கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு கட்டமாகவே சி.பி.சி.ஐ.டியின் தலைவர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். பாலியல் வலை வழக்கில் இப்போது பல்வேறு புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

 மாணவிகளிடம் பேச்சு

மாணவிகளிடம் பேச்சு

நான்கு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசியதாக நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கல்லூரி மாணவிகளுடன் வாட்ஸ் ஆப்பில் பேசி பாலியல் அழைப்பு விடுத்ததற்கான புதிய ஆடியோ பதிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவர் கூறியுள்ள தகவல்களும், வழிநடத்தல்களும் சீரழிவின் உச்சம் ஆகும். பாலியல் உலகின் பிரதிநிதியைப் போன்று பேசும் நிர்மலா தேவியை மாணவிகள் கடுமையாக எச்சரிக்கும் போதிலும், அவர் தளராமல் முயற்சியை தொடர்கிறார்.

 வெளியாகும் ஆதாரங்கள்

வெளியாகும் ஆதாரங்கள்

அந்த அளவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலுள்ள தனது எஜமானர்களிடம் எதையோ சாதித்துக் கொள்வதற்காக மாணவிகளை பலிகொடுப்பதில் நிர்மலா தேவி தீவிரம் காட்டியுள்ளார். நிர்மலா தேவி பாலியல் வலை வீசியதன் பின்னணியில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்ட பெரிய மனிதர்கள் உள்ளனர் என்பதைத் தான் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. இந்த வி‌ஷயத்தில் காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் மீது அப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் நாகரிகம் கருதி வெளியில் சொல்ல முடியாதவை.

 ஆளுநர் மீது ஐயம்

ஆளுநர் மீது ஐயம்

பல்கலைக்கழகங்கள் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் தமக்கே என்று கூறிக்கொள்ளும் ஆளுனர், இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு கேவலமான செயல்களில் ஈடுபட்ட காமராசர் பல்கலைக்கழக உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அவரது அதிகாரத்திற்கு ஒரு மரியாதை இருந்திருக்கும். ஆனால், சம்பந்தப்பட்டவர்களை தமக்கு அருகில் அமர்த்திக்கொண்டு ஆளுனர் செய்தியாளர்களை சந்தித்தது தான் ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தீர்க்கப்பட வேண்டும்.

 பாலியல் வலை

பாலியல் வலை

அதற்கு சி.பி.சி.ஐ.டி விசாரணை எந்த வகையிலும் உதவாது. மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணை மூலமாகவே பாலியல் வலை அத்தியாயத்தின் பின்னணியில் உள்ள அத்தனை பெரிய மனிதர்களையும் அம்பலப்படுத்த முடியும். தமிழகத்திலுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அச்சமின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க இது மிகவும் அவசியமாகும். எனவே, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Change of CBCID Director brings Doubts says Ramadoss. PMK Founder Ramadoss says that, the Change of CBCID director is to wash out the Nirmala Devi issue and keep safe of some higher officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X