For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்புக்கு நீதி விசாரணை தேவை: மதிமுக தீர்மானம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் சீர்குலைந்ததற்கும், இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதற்கும் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பு ஏற்க வேண்டும். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது குறித்து, பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் மதிமுக உயர்நிலை குழு கூட்டம் இன்று காலை 9 மணிக்கும், மாவட்ட செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் குழு கூட்டம் காலை 10 மணிக்கும், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

Chembarambakkam water release: MDMK presses for probe

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சென்னை மாநகரில் பெய்த பெருமழையாலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீராலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சென்னை முழுவதும் மூழ்கிப்போனது.வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால், இலட்சக்கணக்கான மக்கள் உடலில் ஒட்டியிருந்த உயிரைத் தவிர அனைத்தையும் துறந்துவிட்டு, வீடு வாசல்கள், உடைமைகளை இழந்து விட்டு வெளியேறி, உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் இன்றி, வீதிகளில் அலைந்த கொடுமை நூற்றாண்டு காணாத துயரம் ஆகும்.

நீதி விசாரணை

வழக்கத்தைவிட மிக அதிகமாக மழையின் அளவு இருந்தது என்று கூறப்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டதுதான் இத்தகைய பேரழிவுக்குக் காரணம் ஆகும். நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவில் தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முன்னுக்குப்பின் முரணாகக் கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டு இருக்கின்றார். மழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் சீர்குலைந்ததற்கும், இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதற்கும் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பு ஏற்க வேண்டும். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது குறித்து, பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும்.

Chembarambakkam water release: MDMK presses for probe

ரூ.50000 கோடி

மழை வெள்ளத்தால் சென்னை மட்டும் அன்றி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அரசுக் கணக்கின்படி மொத்தம் 347 பேர் உயிர் இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடரால் தமிழகம் வரலாறு காணாத பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ஒட்டுமொத்தச் சேத மதிப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. ஆனால், தமிழக முதல்வர் மத்திய அரசிடம் 10,560 கோடி ரூபாய் மட்டும் உதவி நிதியாக ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக அரசு முறையான கணக்கெடுப்பு நடத்தாமல், அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து வெள்ளச் சேதங்களை மதிப்பீடு செய்துள்ளது. எனவே மத்திய அரசு தமிழகத்தை இயற்கை பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வெள்ள நிவாரணத் தொகை ஒதுக்கித் தர வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுக

மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் பெரும் சீரழிவுக்கு உள்ளானதற்கு ஏரிகள், குளங்கள், நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பும், பல ஆண்டுகளாகத் தூர் வாரப்படாமல் ஆட்சியாளர்கள் காட்டிய அலட்சியப் போக்குமே காரணம் ஆகும்.

தமிழகம் முழுவதும் ஏரிகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கும், தூர் வாராமல் சீர்குலைந்து கிடப்பதற்கும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே காரணம். தி.மு.க. அரசு 2006 டிசம்பர் 30 இல் நீர்வழி புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளுக்குப் பட்டா வழங்கிட அரசு ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளவாறு தமிழகம் முழுவதும் நீர் ஆதாரப் பகுதிகளிலும் நீர்வழிப்பாதைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.

நிவாரண உதவித் தொகை

தமிழக முதல்வர் அறிவித்துள்ள வெள்ள நிவாரண உதவித்தொகை எவ்விதத்திலும் போதுமானது அல்ல. முழுமையாகச் சேதடைந்த குடிசை வீடுகளுக்குக் குறைந்தது ரூ.25 ஆயிரம், பகுதி சேதம் அடந்த குடிசை வீடுகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், மின் சாதனங்கள் இழப்புக்கு ஏற்ப நிவாரணத் தொகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் வழங்கிட வேண்டும். விவசாய நிலங்களில் சேதம் அடைந்த நெல் உள்ளிட்ட நீர்ப்பாசனப் பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள ஏக்கருக்கு ரூ.5400 என்பது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. நெல், மரவள்ளி, மக்காச்சோளம் போன்ற விவசாயப் பயிர் இழப்புக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம், கரும்பு, வாழை, பருத்தி, சவுக்கு உள்ளிட்டவற்றுக்கு ஏக்கருக்கு ரூபாய் ஒன்றரை இலட்சம் தோட்டப் பயிர்கள் சேதத்திற்கு ஏற்ப முழு இழப்பீட்டுத் தொகை அளித்திட தமிழக அரசு முன்வர வேண்டும். வெள்ள நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாகச் சென்றடைய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவை அமைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

வெள்ள மீட்பர்களுக்கு பாராட்டு

தலைநகர் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிர்க்கதியாக வேதனையின் விளிம்பில் நின்ற மக்களுக்கு உடனடி மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், ஆறுதல் கூறவும், தேவையான உதவிகள் செய்யவும் ஆளும் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பொறுப்பாளர்கள் முன்வராதது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சியினரின் இத்தகைய அலட்சியப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டு மக்களிடம் மனிதநேயப் பற்று குறைந்து விடவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நிராதரவாக நின்ற சென்னை மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு ஆயிரக்கணக்கானோர் ஓடோடி வந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும், உணவு, குடிநீர் அளிக்கவும், மருத்துவ உதவி வழங்கவும் மனிதாபிமான உணர்வுடன் துடிப்புமிக்க இளைஞர்கள் களம் இறங்கியதும், பேருதவி புரிந்ததும் வரலாற்றில் இடம் பெற்று விட்டது.

வெள்ளப் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவிடத் தமிழகம் முழுவதிலிருந்து வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மனிதநேய அமைப்புகள், சமூக அரசியல் இயக்கங்கள் ஆகியவை காலத்தே செய்த பணி மக்கள் துயர் துடைக்க உதவியது. இவர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம். சென்னை, கடலூர் உள்ளிட்ட வெள்ளப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவிட வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து உதவிய மறுமலர்ச்சி தி.மு.க. நிர்வாகிகளுக்கும் இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஜல்லிக்கட்டு தடையாணை

காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஜல்லிக்கட்டுக்கு 11.7.2011 அன்று தடை விதித்து அரசு ஆணை பிறப்பித்தார். அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த தி.மு.க., ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை ஆணையை நீக்க முயற்சிக்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மே 7, 2014 இல் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.

ஸ்பெயின் நாட்டில் பிரமாண்டமான மைதானங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மாடுகளை ஈட்டிகளால் குத்திக் கொல்லுவதைப் போல அல்லாமல் தமிழக ஜல்லிக்கட்டுகளில் துள்ளி வரும் காளைகள் மீது எவ்வித வன்முறையும் நிகழ்த்தப்படுவது இல்லை. கட்டிளம் காளையர்கள் வெறும் கைகளால் ஒரு சில நொடிகளே திமிலைப் பிடித்துக் கட்டுப்படுத்துகின்றார்களே தவிர, வேறு எந்தவிதமான கருவிகளையும் பயன்படுத்துவது இல்லை. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்றுதொட்டுத் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்ற வீர விளையாட்டு ஆகும். அதற்கான கல்வெட்டுச் சான்றுகள் நிரம்ப உள்ளன.

எனவே, தமிழர்களின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துவிட்ட ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிட மத்திய -மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அர்ச்சகர் நியமனம்

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2006 இல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருப்பதுடன், ஆகம விதிகளின் படிதான் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று டிசம்பர் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்தத் தீர்ப்பு, அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அனைவரும் சமம் என்ற சமூக சமத்துவ உரிமையைப் பறிப்பது மட்டும் அன்றி, தகுதி திறமையைக் கணக்கில் கொள்ளாமல் பிறப்பின் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் சமூக நீதிக் கோட்பாட்டையும் தகர்த்து உள்ளது. மதத்தின் பெயராலும், ஆகம நெறிகள் பெயராலும் மனிதர்களிடையே வேறுபாட்டை வளர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்து, தந்தை பெரியாரின் கனவை நனவாக்க வேண்டும்.

பயிர் காப்பீடு பிரிமியம்

மழை வெள்ளத்தால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த நீர்ப்பாசனப் பயிர்கள் முழுமையாக அழிந்து விட்டதால், விவசாயிகள் தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்துள்ளனர். எனவே வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் கூட்டுறவு வங்கி, தேசிய வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து விதமான கடன்களையும் மத்திய - மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரிமியம் தொகையை அரசே செலுத்துவதுடன், இத்திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாகப் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி வருமானத்தை இழந்துவிட்டனர். தொழிலாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு இவர்களுக்கும் வெள்ள நிவாரண உதவித் தொகையாக ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கிட ஏதுவாக வட்டி இல்லாக் கடன் வழங்கி உதவ வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

கனிம வளக்கொள்ளை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழகத்தில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட விரோத கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து இருக்கின்றது. சட்ட ஆணையர் சகாயம் குழுவின் விசாரணை அறிக்கையில் கிரானைட் கனிம வளக் கொள்ளை மூலம் தமிழக அரசின் கருவூலத்துக்கு ஒரு இலட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த இழப்புக்குக் காரணமான தி.மு.க., மற்றும் அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் பதவியில் இருந்தவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆற்று மணல், தாது மணல், பாக்சைட், சுண்ணாம்புக் கல் போன்ற கனிமவளக் கொள்ளைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

22 மொழிகளில் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி) நடத்தும் நுழைவுத் தேர்வை இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுடன் குஜராத்தி மொழியிலும் எழுதலாம் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகளிலும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முன்வரவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

அமைப்புத் தேர்தல்

தொடர் மழையின் காரணமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கழகத்தின் 5ஆவது அமைப்புத் தேர்தல் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்பட மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

English summary
The MDMK on Monday District secretary meeting resulution the Tamil Nadu government’s response on the matter and asked it to recommend a judicial probe if there were no wrongdoings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X