For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு கட்டணம் செலுத்தும் மாணவருக்கு அரைநாள் வகுப்பு.. கறார் பள்ளிக்கு நோட்டீஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுத்தும் வகையில் இரு மாதிரியான கல்விக் கட்டணம் நிர்ணயித்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை பால வித்யா மந்திர் பள்ளிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர்கள் 11ம் தேதி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்துவோம் என்று அறிவித்துள்ள மாணவர்கள் அரைநாள் மட்டுமே பள்ளியில் அனுமதிக்கப்படுவர். பிற்பகல் நடைபெறும் வகுப்புகளுக்கு அவர்களை அனுமதிக்க முடியாது என்று அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி நிர்வாகத்தின் உத்தரவு குறித்து விளக்கம் கேட்டு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Chennai Bala Vidya Mandir fee issue: There will be a site inspection on June 11

சென்னை அடையாறு காந்திநகரில் பால வித்யா மந்திர் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1,400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பால பிருந்தாவன் சொசைட்டி, இந்த பள்ளியை நடத்தி வருகிறது. இந்த பள்ளியில், தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். தமிழக அரசு நியமித்த நீதிபதி சிங்காரவேலு கமிட்டியிடமும் புகார் செய்தனர். இதையடுத்து அந்த கமிட்டி விசாரணை நடத்தி, ‘கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, அப்படி வசூலித்து இருந்தால் கூடுதல் கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

இதனால் பள்ளி நிர்வாகம் ஆத்திரம் அடைந்து பெற்றோர்களை பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கியது. கடந்த வாரம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘நாங்கள் இரு விதியை கையாண்டுள்ளோம். அதில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே கட்ட முடியும் என்று கூறக்கூடிய பெற்றோர்கள் முதல் விதியை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த விதியின்படி அரசு நிர்ணயித்த கட்டணத்தில் பள்ளியில் உள்ள பல்வேறு வசதிகளை எங்களால் செய்து தர முடியாது.

அவர்கள், வகுப்பறை மற்றும் பெஞ்ச் உள்ளிட்ட வசதிகளை மட்டுமே பெற இயலும். நான்கரை மணி நேரம் (அரை நாள்) மட்டுமே வகுப்பு எடுக்க முடியும். நிர்வாகம் அறிவிக்கும் கட்டணத்தை கட்டக்கூடிய பெற்றோர்கள் 2வது விதியை தேர்வு செய்யலாம். அதில், மாணவர்களுக்கு பள்ளியில் உள்ள விளையாட்டு திடல், நூலகம், கேன்டீன், இன்ப சுற்றுலா, சிறப்பு வகுப்பு உள்ளிட்ட 59 வசதிகளை பெற முடியும்'' என கூறப்பட்டிருந்தது.

மிரட்டல் விடுக்கும்வகையில் வெளியான இந்த சுற்றறிக்கையை பார்த்ததும் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். பள்ளி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மாணவர்களை பிரித்தாளும் நிலையை உண்டு பண்ணும். பள்ளியில் ஏழை, பணக்கார மாணவர்கள் என ஏற்ற தாழ்வுடன் மாணவர்களை நடத்தினால் அவர்களது மனநிலையை பாதித்துவிடும். அதனால் 2 விதிகளையும் ஏற்று கொள்ள கூடாது என பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும் 400க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், சில நாட்கள் முன்பு பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஆசிரியர்களும் களம் இறங்கியுள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பள்ளி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பது குறித்து ஒருசில பெற்றோர் நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு கமிட்டியிடம் நேரில் சென்று புகார் அளித்தனர். சிபிஎஸ்இ பள்ளி என்பதால் சென்னை அண்ணா நகரில் உள்ள சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்திலும் பெற்றோர் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, நீதிபதி சிங்காரவேலு கமிட்டி, கூடுதல் கல்விக் கட்டணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் எஸ்.கார்மேகம், எம்.பழனிச்சாமி ஆகியோர் விசாரணை அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் அவர்கள் இருவரும் சென்னை அடையாறில் உள்ள பால வித்யா மந்திர் பள்ளிக்குச் சென்றனர். அங்கு பள்ளியின் புதிய முதல்வர் சுஜாதாவிடம் புகார் தொடர்பான விளக்க நோட்டீசை அளித்தனர். வருகிற 11ம் தேதி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த இருப்பதாக இணை இயக்குநர் கார்மேகம் தெரிவித்தார்

English summary
Following the preliminary enquiry, there will be a site inspection on June 11, following which a comprehensive report will be submitted to the fee fixation committee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X