For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: ஒரே ரகுபதி தலைமையில், ஒன்பது விசாரணைகளா?- கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை போரூர் அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் நடந்த கட்டட விபத்தை விசாரிக்கும் ஒரு நபர் ஆணையத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து, இதுவரை 61 பேர் பலியான சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்திருக்கிறார். இதுபோல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற போது, ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால், அப்போது ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விட்டிருப்பார்!.

பத்து பேர் இறந்து விட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன், "மைனாரிட்டி ஆட்சியின் முதலமைச்சர், கருணாநிதி பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும்"" என்று கண்டன மழை பொழிந்திருப்பார். ஆர்ப்பாட்டம், மறியல் என்று ஊரையே நிலை குலையச் செய்திருப்பார். நாளேடுகளும் அவருக்கு "நாமாவளி" பாடியிருக்கும்! ஆனால் தற்போது சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நபர் கமிஷன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

karuna

அரசுக்கு ஆதரவான ஜூ.வி. (6-7-2014) இதழே "மாபெரும் மனிதப் பேரழிவு நடந்திருக்கிறது சென்னையில். மொத்த இடத்தையும் தூர்த்து வாரும்போது இறந்தவர் எண்ணிக்கை மலைக்க வைக்கக் கூடியதாக இருக்கலாம். பணத்தாசை பிடித்த அதிகாரிகள், பேராசை பிடித்த பில்டர்கள் சேர்க்கையால் விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. காற்று, மழை, இடி, மின்னல்... என்று இயற்கையைக் குறை சொல்லித் தப்பிக்கவே அதிகாரத்தில் உள்ளவர்கள் முயற்சிக்கிறார்கள். அதன் மூலமாக தங்களது சுயநலச் செய்கைகளை மறைக்கிறார்கள். ஆனால், பிணவாடையை மிஞ்சியதாக ஊழல் வாடையை வெளியில் கொண்டு வந்து விட்டது மவுலிவாக்கம் சம்பவம்"" என்று தொடங்கி நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறது.

நல்லவேளையாக அந்தக் கட்டிடம் கட்டப்பட்டு வருகின்ற நிலையிலேயே இடிந்துள்ளது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, அதை வாங்கியவர்கள் எல்லாம் அங்கே குடியேறிய பின்னர் இதே சம்பவம் நடைபெற்றிருக்குமேயானால் எத்தனை பேர் மாண்டு மடிந்திருப்பார்கள்? எண்ணிப் பார்க்கவே முடியவில்லை! அதைப் பற்றியெல்லாம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற அரசு எண்ணிப் பார்க்கிறதா? செயற்குழு நடத்தி முதலமைச்சரைப் பாராட்டி ஏழு பாராட்டுத் தீர்மானங்களை நிறை வேற்றி மகிழ்ந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியிலே 61 பேர் மடிந்து மண்ணாகியிருக்கிறார்களே, அதற்காக அந்த ஆட்சியின் முதல்வரைப் பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதுதானே?

சென்னையில், தரைத் தளத்துடன் கூடிய இரண்டு தளத்துக்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டுமானால் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) அப்ரூவலைப் பெற வேண்டும் என்பது விதி. இந்த விதியை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு துணை விதிகள் இருக்கின்றன. அந்த விதிகளை யெல்லாம் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் முறையாக நடைமுறைப் படுத்துகிறார்களா? இந்தக் கட்டிடத் திற்கு ஒப்புதல் கொடுத்தபோது, அந்தத் துறையின் அமைச்சர் யார்?

61 பேர் இறந்திருக்கிறார்களே, இதற்குள் அரசாங்கம் அந்த அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? வேறொரு ஆட்சி என்றால், முதலமைச்சரே பதவி விலக வேண்டு மென்று கூறியிருக்க மாட்டார்களா? இந்தக் கட்டிடத்திற்கு அனுமதி கொடுத்த கோப்பில் துறையின் அமைச்சர் கையெழுத்திட்டிருக்கிறாரா இல்லையா?

சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத்த பிறகுகூட, கட்டிடம் கட்டும்போது பிளானிங் பர்மிஷனில் கொடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் கட்டடம் கட்டப்படுகிறதா என்று ஒவ்வொரு ஸ்டேஜிலும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சென்று கவனிக்க வேண்டும். அப்படி கவனித்தார்களா? அல்லது ஒவ்வொரு முறையும் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வந்து விட்டார்களா?

Chennai building collapse: Karunanidhi demands CBI inquiry

இந்தக் கட்டிட அனுமதிக்காக தரப்பட்ட விண்ணப்பத்தில் நிலத்தின் மொத்த பரப்பளவு 1 லட்சத்து 11 ஆயிரத்து 684 சதுர அடி என்று கூறப்படுகிறது. அதாவது 10,375.7 சதுர மீட்டர். இதில், திறந்த வெளி இடம், பூங்கா, நீச்சல்குளம் போன்றவற்றுக்கான இடங்கள் போக, 3,986.17 சதுர மீட்டரில், 11 தளங்கள் கொண்ட இரண்டு கட்டிடங்களைக் கட்டுவதற்கு அனுமதி கோரப்பட்டிருக்கிறது. இதற்கான மனு முதலில் பிளானிங் பெர்மிஷன் செக்ஷனில் கொடுக்கப்பட்ட போதே, மண் வள ஆதார உறுதி சான்றிதழ் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் என்.ஓ.சி.க்கள் எதுவுமே இணைக்கப்படவில்லையாம். இந்தக் கட்டிடத்தைக் கட்டிய நிறுவனம், முதலில் துறையின் அமைச்சரைச் சந்தித்துப் பேசி விட்டுத்தான் இந்தப் பணியையே தொடங்கியதாகவும், அதனால்தான் விண்ணப்பிக்கும்போதே இணைக்கப்பட வேண்டிய முக்கியமான சான்றிதழ்களை இணைக்காமலே விண்ணப்பித்தார்கள் என்றும் சொல்லப்படுவது உண்மைதானா?

அதன் பிறகு மண்வள ஆதார உறுதிக்கான சான்றிதழை யாரோ ஒரு பொறியாளரிடம் பெற்று அதனைத் தாக்கல் செய்துள்ளார்கள். இந்தக் கட்டிடத்திற்கு ஒப்புதல் தருவது பற்றி குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்ற போது, வரை படத்தில் உள்ளதைப் போல சாலையின் அகலம் இல்லை, கட்டிடத்தின் பக்கவாட்டு பகுதியிலும் போதுமான காலி இடம் விடப்படவில்லை என்றெல்லாம் பேசப் பட்டபோதிலும், துறையின் அமைச்சர், அதற்கான விதிகளைத் தளர்த்தலாம் என்று தெரிவித்திருப்பதாகக் கூறி, அவ்வாறே முடிவெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மைதானா?

3-6-2013 அன்றுதான் இந்த நிறுவனத்திற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஓராண்டு காலமாக கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் யாராவது அந்த இடத்தை நேரில் சென்று பார்த்து ஆய்வு நடத்தினார்களா? இந்த இடத்தில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்ட போதே, அந்தப் பகுதியைச் சேர்ந்த சில சமூக சேவகர்கள், அந்த இடம் களி மண் பூமி, அங்கே பல அடுக்கு மாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்காதீர்கள், கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கள்"" என்று புகார் கடிதங்கள் எழுதியதாகச் சொல்லப்படுகிறதே, அது உண்மையா இல்லையா?
இதையெல்லாம் மீறி அரசு அனுமதி கொடுத்து விட்டு, அதை மறைக்க பிளானிங் அப்ரூவல்படி கட்டாமல் விதிகளை மீறி கட்டிடம் கட்டியதாக, அந்த நிறுவனத்தின் மீது பழியைப் போட்டு தாங்கள் தப்பிக்க நினைக்கிறார்கள் என்று சொல்லப்படுவது சரியா இல்லையா?

இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்த பிறகு, அந்தக் கட்டிடத்திற்கான அனுமதி கொடுத்தது பற்றிய முழு அறிக்கையும் வேண்டுமென்று முதலமைச்சர் அரசு ஆலோசகரிடம் கேட்டதாகவும், சி.எம்.டி.ஏ.வின் தற்போதைய உறுப்பினர் செயலாளர் கடந்த காலத்தில் எவ்வாறு விதிகள் தளர்த்தப்பட்டு அனுமதி கொடுக்கப்பட்டது என்பதை விளக்கியதாகவும், கடந்த காலத்தில் அங்கே அதிகாரியாக இருந்த வரைக் கூப்பிட்டு விசாரித்த நேரத்தில் அந்த அதிகாரி அமைச்சரின் அறிவுரைப்படிதான் நடந்து கொள்ள வேண்டியிருந்தது என்று விளக்கமளித்த தாகவும் செய்திகள் ஏடுகளில் வந்ததெல்லாம் உண்மையா இல்லையா?

இவைகள் எல்லாம் உண்மையா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்பாகவே, தற்போது நியமித்துள்ள ஒரு நபர் குழு ஆய்ந்தறிந்து முடிவெடுப் பதற்கு முன்பாகவே, முதலமைச்சர் அந்த இடத்தைப் பார்த்து விட்டு, "சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத்ததில் எவ்வித தவறும் இல்லை, முறையாக அனுமதி கொடுத்துள்ளனர், கட்டிடம் கட்டிய நிறுவனம், விதிகளை மீறி கட்டிடத்தைக் கட்டியுள்ளது"" என்றெல்லாம் செய்தியாளர்களிடம் கூறியது சரிதானா? முதலமைச்சர் இவ்வாறு கூறியிருக்கும்போது, அதை மீறி விசாரணை நீதிபதி எவ்வாறு வேறு கருத்தினைத் தெரிவிக்க முடியும்? விசாரணைக் கமிஷன் நீதிபதியை எவ்வாறு சொல்ல வேண்டுமென்று அறிவுறுத்துவதைப் போல ஆகாதா?

இடிந்த கட்டிடத்திற்காக விதிகளைத் தளர்த்தி இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது ஏன் என்று "தினமலர்" நாளிதழ் எழுதியிருந்தது. அவ்வாறு எழுதியதற்காக அந்த இதழ் மீது அவசர அவசரமாக அரசு வழக்கறிஞர் வழக்கு தொடுத்திருக்கிறார். அது உண்மையை எழுதும் பத்திரிகைகளை மிரட்டுவதாகாதா?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அந்த இடத்தைப் பார்க்க வருவதாகச் செய்தி தெரிவித்ததும் மீட்புப் பணிகள் சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டதாகவும் செய்தி வந்தது. அதைப் பற்றி செய்தியாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி கேட்ட போது, அந்தக் கேள்வி அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று பதில் கூற முதல்வர் மறுத்து விட்டார் என்ற செய்தியும் ஏடுகளில் வெளிவந்தது.

மண் பரிசோதனை வல்லுனர் ஒருவர், "தற்போது விபத்து ஏற்பட்ட மவுலிவாக்கத்தில் 25 மீட்டர் ஆழம் வரை களிமண்தான் உள்ளது. எனவே 26 மீட்டர் ஆழத்தில் "பைல் பவுண்டேஷன்" முறையில் அஸ்தி வாரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அமைத்திருந்தால் இதுபோன்று கட்டடம் சரிந்திருக்காது"" என்றெல்லாம் கூறியிருக்கிறாரே, இதையெல்லாம் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கவனித்தார்களா?

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீட்பு பணிகளைப் பார்வையிட்ட பின் "இந்தக் கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளது, எனவே சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்"" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து, தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து, விசாரணைக்கு எடுத்துக் கொண்டதோடு, இதைப் பற்றி விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட அந்த நோட்டீசில், "பத்திரிகைகள் மற்றும் தொலைக் காட்சிகளில் வந்த விபத்து குறித்த தகவல்கள் அடிப்படையிலும், முதல் அமைச்சர் அளித்த பேட்டியின் அடிப்படையிலும் இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் கையில் எடுத்துள்ளது. இது ஒரு மிகப் பெரிய மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆணையம் கருதுகிறது. விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் எனக் கருதி, விபத்து குறித்து இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு தனது விளக்கத்தை அளிக்க வேண்டும்"" என்று கூறப்பட்டுள்ளது.

"அடுக்கு மாடி கட்டடங்கள் தொடர்பான சட்ட விதி முறைகளில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும். அடுக்கு மாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தால் அதற்கு அதிகாரிகளே இனி பொறுப்பேற்க வேண்டி நேரிடும்"" என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு அவர்கள் நேற்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் தமிழக முதலமைச்சர் ஒரு நபர் விசாரணைக் குழுவினை அறிவித்திருக்கிறார். இந்தக் கட்டிடத்திற்கு அனுமதி அளித்தது தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே உள்ள சி.எம்.டி.ஏ. அதற்குப் பொறுப்பேற்றிருப்பவர் தமிழக அமைச்சரவையிலே உள்ள ஒருவர். அவர்கள் மீதே பல்வேறு குற்றச்சாட்டுகள், இந்தக் கட்டிடத்திற்கு அனுமதி கொடுத்த நிலையிலே இருக்கின்ற போது, தமிழக அரசே ஒரு நீதிபதியை நியமித்து இதைப் பற்றி விசாரணை நடத்துகிறேன் என்பது எந்த அளவுக்குப் பொருத்தமானது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தற்போது ஜெயலலிதா அமைத்துள்ள ஒரு நபர் குழுவினால் எந்தவிதமான உண்மையும் வெளி வராது என்ற கருத்து பரவலாகச் சொல்லப்படுகிறது. முதலமைச்சர் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அறிவித்திருக்கிறாரே தவிர, அந்தக் கமிஷன் எத்தனை நாட்களுக்குள் இதுபற்றி விசாரித்து அறிக்கை தர வேண்டுமென்று சொல்லாமல் விட்டிருப்பதிலிருந்தே, இது ஒரு கண் துடைப்பு கமிஷன், அரசினர் தப்பித்துக் கொள்வதற்காக நியமித்துள்ள கமிஷன் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.

2011ம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்டவுடன், கழக ஆட்சிக் காலத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டியதில் முறைகேடு இருப்பதாகக் கூறி, ஜெயலலிதா அதனை விசாரிக்க நீதிபதி தங்கராஜ் அவர்களை நியமித்தார். சில மாதங்களிலேயே அவர் அந்தப் பதவியிலிருந்து விலகியதால், நீதிபதி ரெகுபதி அவர்களைத்தான் அந்தப் பொறுப்பிலே நியமித்து, அந்தப் பணிகளையும் இவர் ஆற்றி வருகிறார். மேலும் இதே நீதிபதி ரெகுபதிதான், தற்போது குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் அமைப்பின் நீதிபதியாகவும் உள்ளார். அதுமாத்திரமல்ல; நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாகவும் இதே ரெகுபதிதான் இருக்கிறார். இத்தனை பொறுப்புகளையும் வகித்து வரும் நிலையில்தான் தற்போது இந்த மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்தது பற்றியும் அவரையே விசாரணை நீதிபதியாக நியமித்திருப்பதில் இருந்தே, இந்த விசாரணை என்பது உள்நோக்கத்தோடு, கண் துடைப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தக் கட்டிடம் இடிந்து, இதுவரை 61 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்றால் இதற்கு இந்த ஆட்சியினரும், முதல் அமைச்சரும், இந்தத் துறையின் அமைச்சரும்தான் பொறுப்பேற்க வேண்டும். இதிலே என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன, அதனால் பயன்பெற்றவர்கள் யார் யார் என்ற தகவல்கள் எல்லாம் வெளிவர வேண்டுமென்றால், சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்வதே பொருத்தமாக இருக்கும். இல்லாவிட்டால் இந்த அரசு கண் துடைப்புக் கமிஷனை நியமித்துள்ளது என்றே கருதப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

12ம் தேதி பேரணி

இதனிடையே, கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி, திமுக சார்பில் பேரணி நடைபெறும் என்று அக் கட்சி அறிவித்துள்ளது. இந்தப் பேரணி ஜூலை 12-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும்.

சென்னை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் இந்த பேரணி நடைபெற என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Terming as an "eyewash" the setting up of an inquiry commission by Tamil Nadu government to probe the 11-storeyed under construction building collapse which claimed 61 lives here, DMK President M Karunanidhi on Friday demanded a CBI investigatiom into the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X