For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் குடிநீர் பஞ்சம்: மலிவு விலை கேன் குடிநீர் விற்பனை செய்ய மாநகராட்சி திட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில், நடுத்தர மக்களை கவர, சட்டசபை தேர்தலுக்கு முன், மலிவு விலை குடிநீர் விற்பனையை, மாநகராட்சி துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ‘அம்மா குடிநீர் பாட்டில் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பேருந்து மற்றும் ரயில் பயணிகளுக்கு ரூ.10 விலையில் சுத்தமான மினரல் வாட்டர் கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அடுத்தகட்டமாக 20 லிட்டர் கேன் குடிநீர் திட்டத்தை தொடங்க சென்னை மாநகராட்சி ஆலோசனை செய்து வருகிறது.

Chennai Corporation to introduce 20 lt water cans

குடிநீர் பிரச்சினை

சென்னையில் குடிநீர் பிரச்சினை அதிகரித்துள்ளது. ஒருநாள் விட்டு ஒருநாள் விநியோகம் செய்யப்பட்டாலும் அரைமணிநேரம் மட்டுமே அதுவும் கலங்கலாக உபயோகிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது என்பது பொதுமக்களின் புகாராகும்.

தனியார் தண்ணீர் விற்பனை

இதனைப் பயன்படுத்தி தற்போது தனியார் நிறுவனங்கள் 20லிட்டர் கேன் தண்ணீரை ரூ.40 வரை விற்பனை செய்கின்றன. இந்த நிலையில் மலிவு விலையில் "அம்மா' 20 லிட்டர் கேன் குடிநீர் திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்துவருகிறது.

8 லட்சம் கேன்கள்

சென்னையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக, தினசரி, எட்டு லட்சம் எண்ணிக்கையில், 20லிட்டர் கேன் குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, தனியார் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.

மலிவு விலை குடிநீர் திட்டம்

கடந்த, 2014-15ம் ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டில், சென்னை மாநகராட்சி மக்களுக்கு, மாநகராட்சி சார்பில் மலிவு விலையில், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படும் என, மேயர் சைதை துரைசாமி சிறப்பு அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இதற்கு ஆகும் செலவு, பராமரிப்பு செலவு, பணியாளர்கள் சம்பளம் போன்றவற்றை கணக்கிட்டு, மாநகராட்சிக்கு அதிக செலவு ஏற்படும் என்பதால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.

குடிநீர் பஞ்சத்திற்கு தீர்வு

தற்போது சென்னையில், குடிநீர் பிரச்னை அதிகமாக இருப்பதால், பாதுகாக்கப்பட்ட குடிநீரை மாநகராட்சி சார்பில், வினியோகம் செய்யும் வகையில், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீர் விற்பனையை துவங்க, மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது.

தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள்

இதற்கு, தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரிப்பன் மாளிகையில், மேயர் சைதை துரைசாமி, தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களுடன், ஆலோசனை நடத்தினார்.

மேயர் சைதை துரைசாமி ஆலோசனை

அப்போது தினசரி, 8 லட்சம் கேன் வரை, விற்பனை செய்ய இலக்கு வைத்திருப்பதாகவும், அதற்கு ஏற்ப, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, உற்பத்தி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒரு கேனில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நிரப்பி கொடுக்க, எவ்வளவு கட்டணம் என்பதை மேயர் கேட்க, நிறுவன உரிமையாளர்கள் அனைவரிடமும் பேசி, தொகை விவரங்களை தெரிவிப்பதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஒரு கேன் 5 ரூபாய்

தனியார் டீலர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிரப்பிய, 20 லிட்டர் கேன் ஒன்றுக்கு, 7 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். கேன் வாங்குவதற்கான முதலீடு, உற்பத்தி நிலையத்தில் இருந்து விற்பனை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு, டீலர்களை சாரும்.
சென்னை மாநகராட்சிக்கு கேன் வழங்கினாலும், இந்த செலவுகள் மாநகராட்சியுடையது தான். மாநகராட்சி மொத்த கொள்முதல் என்பதால், தண்ணீர் நிரப்பி கொடுக்க ஒரு கேனுக்கு, 5 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கலாம். அதற்கும் குறைந்தால், எங்களுக்கு லாபம் இருக்காது என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி முடிவு

அதேநேரத்தில் இதுகுறித்து இன்னும் எந்த முடிவும் செய்யப்படவில்லை. தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் கேட்கும் தொகையை அடிப்படையாக கொண்டு, கேன் வாங்குவதற்கான செலவு, அதை வினியோகிக்கும் முறை, இதற்கு ஆகும் செலவு உள்ளிட்ட மற்ற விஷயங்களை உயர் அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்வோம்' என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் பிசினஸ்

லோக்கல் அரசியல்வாதிகள் தான். கவுன்சிலர், வார்டு மெம்பர், ஒன்றிய கவுன்சிலர், வட்ட செயலாளர், போன்றவர்கள்தான் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப்போது இயற்கையாக கிடைக்கும் தண்ணீரை சுத்தமாக மக்களுக்கு விநியோகம் செய்யவேண்டிய அரசும், மாநகராட்சியும் இவர்களை நாடிச் செல்கிறது என்பதுதான் கொடுமை. அரசாலேயே கொடுக்க முடியாத தண்ணீர் இவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும்.

அரசின் கடமை

மக்களுக்கு தரமான குடிநீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. மக்களின் அடிப்படை உரிமையான குடிநீர் பெறும் உரிமையும் தனியார் முதலாளிகளின் கைகளில் கிட்டத்தட்ட ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதே போல அனைவரும் கேன் தண்ணீருக்கு அடிமையானால் நெருக்கடியான நேரங்களில் எல்லாம் ஒரு கேன் நூறு ரூபாய் என்றால் கூட இவர்கள் வாங்கத் தயங்குவதில்லை. தண்ணீரை முற்றிலும் தனியார்மயமாக்கிவிடும் என்பதுதான் வேதனை.

English summary
The Chennai Corporation's plan to introduce 20-litre bubble top cans at subsidize price has evoked a mixed response from the residents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X