For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொத்துவரி செலுத்தாமல் ஏமாற்றும் விஐபிக்கள்…: நிதிச்சிக்கலில் சென்னை மாநகராட்சி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அரசியல்வாதிகளும், விவிஐபிக்களும் கோடிக்கணக்கில் சொத்துவரி செலுத்தாமல் உள்ளதால் சென்னை மாநகராட்சி நிதி நெருக்கடியில் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கு ஒப்பந்தப்பணியில் பணியாற்றும் 6 ஆயிரம் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளத்தை குறித்த நேரத்தில் பட்டுவாடா செய்வதில் சிக்கல் உள்ளது.

Chennai Corporation struggles to collect taxes from VIPs

இதற்கு காரணம் சென்னை மாநகராட்சிக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய்கள் சொத்துவரி பாக்கியினால்தான் என்கின்றனர்.

எனவேதான் சொத்துவரி செலுத்தாத ஸ்டார் ஹோட்டல்கள், நிறுவனங்கள் முன்பு திருநங்கைகளை நடனமாடவைத்து சொத்துவரியை வசூலித்தனர். அதுவும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகவே என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள்.

விஐபி லிஸ்ட்

சொத்து வரியை செலுத்தாமல் சில அரசியல் வி.ஐ.பி.க்கள் இருக்கின்றனர். அவர்களின் பெயர், முகவரி, செலுத்த வேண்டிய தொகை என அனைத்து விவரங்களையும் சென்னை மாநகராட்சி இணைய தளத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டது.

அதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸும் விநியோகிக்கப்பட்டது. அனுப்பிய நோட்டீஸை குப்பைக்கூடைக்கு அனுப்பிவிட்டு ஹாயாக இருக்கின்றனர் விஐபிக்கள்.

முன்னாள் அமைச்சரின் மனைவி

இந்த பட்டியலில் முதலில் இடம் பிடித்து இருப்பவர் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசியா. இவருக்கு சொந்தமான ஹோட்டல் தியாகராய நகரில் உள்ளது. 4 கோடியே 21 லட்சத்து 75 ஆயிரத்து 19 ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது இந்த ஹோட்டல்.

மேல்முறையீடு

இந்த தொகையை செலுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததும் ஒரு கோடி ரூபாயை மட்டும் செலுத்தி விட்டு மீதமுள்ள தொகைக்கு மாநகராட்சியிடம் மேல்முறையீடு செய்திருக்கிறது ஓட்டல் நிர்வாகம்.

ஸ்டார் ஹோட்டல்கள்

தி.மு.க. பிரமுகரைப் போல மேலும் சில வி.ஐ.பி.க்களின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது. மாநகராட்சி வெளியிட்ட பட்டியலில் அடுத்த இடத்தில் 'கிவ்ராஜ் டெக் பார்க் பிரைவெட் லிமிடெட்' உள்ளது. இந்த நிறுவனம் 2 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 679 வரி பாக்கி வைத்துள்ளது.

பெரிய நிறுவனங்கள்

இதே போன்று ரமணி ஓட்டல் லிமிடெட் ராமி மாலுக்கு ஒரு கோடியே 15 லட்சத்து 55 ஆயிரத்து 811 ரூபாயும், ஆயிரம் விளக்கில் உள்ள டிஎம்பி அன்வர் அலி, 98 லட்சத்து 94 ஆயிரத்து 652 ரூபாயும், மீனம்பாக்கம், நியூ கார்கோ காம்பளக்ஸிக்கு 57 லட்சத்து 72 ஆயிரத்து 494 ரூபாயும் வரிபாக்கி உள்ளது.

வணிக வளாகங்கள்

மயிலாப்பூர் சென்னை சிட்டி சென்டர் 38 லட்சத்து 18 ஆயிரத்து 149 ரூபாயும், சி.எஸ்.ஐ. டயோசீசன் 23 லட்சத்து 60 ஆயிரத்து 492 ரூபாயும், தி.நகரில் உள்ள சைரன் வேளாங்கண்ணி சீனியர் மேல்நிலைப்பள்ளி 13 லட்சத்து 34 ஆயிரத்து 60 ரூபாயும், ஆயிரம் விளக்கில் உள்ள பார்க் ஓட்டல் லிமிடெட் 11 லட்சத்து 7 ஆயிரத்து 356 ரூபாயும் உள்பட 182 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 26 கோடியே 57 லட்சத்து 73 ஆயிரத்து 139 ரூபாய் வரி பாக்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியில்

கடந்த சில மாதங்களாக நிதி நெருக்கடியில் மாநகராட்சியில் திணறி வருகிறது. இங்கு ஒப்பந்தப்பணியில் பணியாற்றும் 6 ஆயிரம் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளத்தை குறித்த நேரத்தில் பட்டுவாடா செய்வதில் சிக்கல் உள்ளது. திட்டமிடாமல் அதிகளவில் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததே இதற்கு காரணம். இதனால் மாநகராட்சி முழுவதும் பல இடங்களில் வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாம்.

ஆணையர் எச்சரிக்கை

நிதி நெருக்கடியை சமாளிக்க சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம்கபூர் வரி பாக்கியை வசூலிக்க வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது அந்த துறையில் உள்ளவர்கள் ஊழியர்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி இருக்கின்றனர். இதனால் கல்வித்துறை, சுகாதாரத்துறை ஆகிய இரண்டு துறைகளில் உள்ள ஊழியர்களும் வரி வசூல் பணியை மேற்கொள்ள வேண்டும். வரும் நிதி ஆண்டுக்குள் வரிப்பாக்கியை வசூலிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளாராம். இதனால் வரி வசூலில் முழு முயற்சியில் ஊழியர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இருப்பினும் வரி பாக்கி தொகை முழுமையாக வசூலிக்கப்படவில்லை.

அம்மா உணவகங்கள்

அம்மா உணவகம் மூலம் மட்டுமே சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் வருவாய், வருவாய்துறையை மட்டுமே நம்பி இருக்கிறது. அதிலும் வரிப்பாக்கி பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இவற்றை இந்த நிதியாண்டுக்குள் வசூலிக்க ஒரே அடியாக ஆர்வம் காட்டப்பட்டுள்ளதாம்.

கடும் கண்டனம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு வரி பாக்கியை வசூலிக்க திருநங்கைகள் ஆட வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ஒரே நாளில் ஒருகோடி ரூபாய்க்கு மேல் வசூலானது. இது திருநங்கைகளை சேர்ந்த ஒரு தரப்பினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்தமுறையிலான வசூல் உடனடியாக நிறுத்தப்பட்டது.

கவர்ச்சித் திட்டங்கள்

அம்மாவை திருப்திப்படுத்தவே பல கவர்ச்சிகரமான திட்டங்கள் மாநகராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை முழுமையாக நிதி தேவை. ஆனால் அதையெல்லாம் திட்டமிடாமல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவைகள் பாதியில் நிற்கின்றன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

English summary
Chennai corporation officials are struggling to collect taxes from VIPs and politicians, say sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X