For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழையால் மாணவர்கள் பாதிப்பு... அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய சொல்கிறார் கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள மாணவச் சமுதாயத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி 11ம் தேதி முதல் 27ம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாந்தி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கை:

Chennai floods: Karunanidhi urges TN govt. to cancel exam

கேள்வி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களை இழந்து, பல நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்ட நிலையில், தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அறிவித்திருக்கிறார்களே?

பதில்: இந்த ஆண்டு மாணவர்கள் தேர்வுக்கே தயாராகாத நிலையில் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரண உதவித் தொகை பெரியவர்களுக்கு உதவியாக இருக்கலாம். ஆனால், மாணவர்களைப் பொறுத்தவரை தேர்வுகள் முக்கியமானது. மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள மாணவச் சமுதாயத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு பெற்றதாக அறிவிப்பதுதான் முறையாக இருக்கும். எனவே அரசு ஆவன செய்ய வேண்டும்.

கேள்வி: மழை, வெள்ளம் காரணமாக 14 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறாரே?

பதில்: தமிழகத்தில் பாதிக்கப்பட்ட தொழில்கள் குறித்து நான் முன்பே குறிப்பிட்டேன். மத்திய அமைச்சரும் அதைத்தான் கூறியிருக்கிறார். "மழை வெள்ளம் காரணமாக தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் குறுதொழில் நிறுவனங்கள், 3 ஆயிரம் சிறு தொழில் நிறுவனங்கள், ஆயிரம் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என 14 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; அதனால் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்; இந்த நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் என்னிடம் பல்வேறு விதமான கோரிக்கைகளை வைத்துள்ளனர்" என்றெல்லாம் மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார்.

ஆனால் தமிழகத்தில் உள்ள முதலமைச்சரோ, தொழில் துறை அமைச்சரோ இதுவரை வாய் திறக்கவே இல்லை. முதலமைச்சர் பல தொழிலதிபர்களை நிவாரண நிதி வாங்குவதற்காகச் சந்திக்கிறாரே தவிர, அவர்களின் தொழில்கள் என்ன ஆயிற்று என்று கேட்டதாகத் தெரியவில்லை.

கேள்வி: மத்திய அரசிடம் கூடுதலாக அரிசி, மண்ணெண்ணெய் கேட்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறாரே?

பதில்: எல்லாமே கடிதம்தான்! மத்திய அரசிடம் நிவாரண உதவித் தொகை கேட்கும் மற்ற மாநிலங்கள் எல்லாம் நேரில் சென்று பிரதமரையோ, தொடர்புடைய அமைச்சர்களையோ சந்தித்து உதவிகளைப் பெற்று வருகிறார்கள். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை இவ்வளவு பெரிய நாசம் ஏற்பட்ட பிறகும், தமிழக அரசின் சார்பில் முதல் அமைச்சரோ, நிதித்துறை அமைச்சரோ டெல்லி சென்று நிவாரணத் தொகை கேட்டதாகச் செய்தியில்லை.

எல்லாம் கடிதம்தான்! அல்லது பாதிப்பைப் பார்க்க வரும் மத்திய அமைச்சரிடமோ, பிரதமரிடமோ முறையீடுகளை நேரில் தெரிவிப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவே நேரில் வராதவர்கள், நிவாரண உதவித் தொகைக்காகவா டெல்லி செல்லப் போகிறார்கள்?

கேள்வி: காவிரி டெல்டாவை வெள்ளம் பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரி திருவாரூரில் 12 டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்களே?

பதில்: அ.தி.மு.க. ஆட்சிக்கு விவசாயிகள் கோரிக்கை என்றால் அலட்சியம்தான்! 2012-2013ஆம் ஆண்டு தமிழகத்தில் வறட்சி வாட்டியபோது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் என்று அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது விவசாயச் செலவு மிக அதிகமாகியுள்ள நிலையில், எக்டேருக்கு வெறும் 13,500 ரூபாய் மட்டுமே இழப்பீடு என்று தமிழக அரசு அறிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைத்தான் அளிக்கிறது.

அ.தி.மு.க. அரசு தனது அறிவிப்பினை மறு பரிசீலனை செய்து, காவிரி டெல்டா மாவட்டங்களை வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிப்பதோடு, ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும். ஏற்கனவே நான் தெரிவித்தவாறு, விவசாயிகள் வாங்கிய கூட்டுறவுக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் திருவாரூரில் டெல்டா மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட முன் வர வேண்டும்.

English summary
TamilNadu government announced that the half yearly exam from January 11 to 27, DMK chief M Karunanidhi on Saturday urged CM Minister Jayalalitha to cancel the all exams in view of heavy rain and floods in Chennai and nearby districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X