வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு... நாளை மிதமான மழை தான்!
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர் கூறியதாவது: நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வலுவான குறைந்த காற்றழத்தம் இன்றும் அதே இடத்தில் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். மேலும் காற்றழுத்தமானது டிசம்பர் 6ம் தேதி வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, வடதமிழக கடற்கரைப் பகுதியை நோக்கி நகரக்கூடும்.

மீனவர்கள் தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தேனி மாவட்டம் அரண்மனைப் புதூரில் 6 செ.மீ மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமாக மழை பெய்யக் கூடும். சென்னையை பொருத்த வரை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.