For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாய் கிழிய பேசியவர்கள் எங்கே? வங்கக் கடலை வாளியில் அள்ளுகிறது 'டிஜிட்டல் இந்தியா'!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே கடலில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டு அதிலிருந்து கச்சா எண்ணை கடலில் கலந்து இன்றுடன் ஒரு வாரம் ஆகியுள்ள நிலையிலும், இன்னும் வாளியில்தான் எண்ணையை அள்ளிக்கொண்டுள்ளனர் அரசு பணியாளர்களும், தன்னார்வலர்களும்.

இன்று, நாளை என்று சொல்லி பார்த்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை எண்ணை. "தண்ணீரில் எண்ணெய் கலக்காது. மூழ்காது. மிதக்கும். அதையள்ள முடியாத அரசு விழிக்கும்" என்கிறார் கவிஞர் மகுடேஸ்வரன். ஆம்.. மிதக்கும் எண்ணையை கூட கண்டறிய தொழில்நுட்பம் இல்லாமல், விழிக்கும் அரசுதான் உள்ளது என்ற ஐயம் எல்லோருக்கும் எழுகிறது.

இந்த தருணத்தில்தான் மோடி அரசின் இரு முக்கிய கோஷங்கள் மக்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. அதில் ஒன்று, ஸ்வச்ச பாரத். இன்னொன்று டிஜிட்டல் இந்தியா.

பல் இழித்த திட்டங்கள்

பல் இழித்த திட்டங்கள்

இவ்விரு திட்டங்களுக்கும் கடலில் கவிழ்ந்த எண்ணைக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா. உண்டு. ஸ்வச் பாரத் என்பது நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருப்பொருளை தாங்கியது. டிஜிட்டல் இந்தியாவோ, தொழில்நுட்ப வளர்ச்சியை குறிப்பது. ஆனால் இந்த இரண்டுமே வங்கக் கடலில் பல் இழித்துவிட்டன.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

கடலை சுத்தம் செய்ய ஸ்வச் பாரத் திட்டத்தால் முடியவில்லை, துடைப்பத்தை கையில் வைத்து போஸ் கொடுத்த யாரும் காற்று வாங்க கூட இப்போதெல்லாம் கடல் பக்கம் செல்வதும் இல்லை. வங்க கடலை வாளியில் அள்ளிக்கொண்டிருப்பதை பார்த்து மொத்த இந்தியாவும் சிரிக்கும்போது, டிஜிட்டல் இந்தியா தலைகுனிகிறது.

அணு கதிரை தடுப்பார்களா?

அணு கதிரை தடுப்பார்களா?

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கும்போது அப்பகுதி மக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சி போராட்ட களம் புகுந்தனர். ஆனால் அரசு திரும்ப திரும்ப சொன்ன வார்த்தை, ஆபத்தை தடுக்கும் அதிநவீன தொழில்நுட்பம் எங்களிடம் இருப்பதால் அஞ்ச வேண்டாம் என்பதுதான். கண்ணுக்கு தெரியும் எண்ணையையே கடலில் இருந்து பிரித்தெடுக்க தொழில்நுட்பம் இல்லாத நாட்டில், காற்றில் நொடிப்பொழுதில் பரவும் அணு கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் மட்டும் எங்கே இருக்கும் என்பது இப்போது எல்லோருக்கும் அடி வயிறை கலக்கும் ஐயம்.

ராஜாவின் துவேஷம்

இது ஒருபக்கம் என்றால், எண்ணை விஷயத்தில் எனக்கென்ன வந்தது என்று ஹாயாக உட்கார்ந்திருக்கின்றன, ஆளும் அரசுகள். பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவோ எண்ணை விஷயம் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதில் இன்னும் கொஞ்சம் 'எண்ணை' ஊற்றுகிறார்.

பதிலடி

பதிலடி

"1500க்கும் மேற்பட்டோர் எண்ணை அகற்றும் பணியில் உள்ளனர். மெரினாவில் கூடியிருந்த கூட்டம் இப்போது எங்கே போனது. ஆக்கப்பூர்வ பணிகளுக்கு அவர்கள் வரமாட்டார்கள்" என்று டிவிட் போட்டுள்ளார். இதற்காக நெட்டிசன்களில் வண்ட வண்டயாக வாங்கியும் கட்டிக்கொண்டுள்ளார். அவரது டிவிட்டுக்கு வந்துள்ள ரிப்ளேக்கை பார்த்தால் தலை சுற்றிப்போகிறது. ஆனால் மனிதர் பம்மிக்கொண்டுள்ளார்.

வாளி கிடைக்கவில்லையா

வாளி கிடைக்கவில்லையா

எல்லாவற்றையும் மாணவர்களும், இளைஞர்களுமே செய்ய வேண்டுமென்றால் நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள். இளைஞர்களிடமே ஒப்படைத்துவிட்டு சன்யாசம் போகலாமே என்ற நெட்டிசன்கள் கேள்வியில் ஆயிரம் நியாயம் உள்ளது. டிவிட் போட்ட நேரத்தில், ராஜா ஏன் கடற்கரை பக்கம் போகவில்லை என்பது புரியவில்லை. ஒருவேளை 1500க்கும் மேற்பட்டோர் அள்ளிக்கொண்டிருப்பதால் இவருக்கு வாளி இன்னும் கிடைக்கவில்லை போலும், எண்ணையை அகற்ற.

திரும்ப திரும்ப

திரும்ப திரும்ப

இப்போதைக்கு எண்ணையை அள்ள முடியாது, இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதை கீறல் விழுந்த ரெக்கார்டாய் வாசித்துக்கொண்டுள்ளார்கள் அதிகாரிகள். எத்தனை நாள்தான் போகும் இந்த இழுபறி என்று தெரியவில்லை. மற்றொரு கடற்கரை புரட்சி வெடிக்கும் முன்பாக ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டால் நாட்டுக்கும், கடலுக்கும் நல்லது.

English summary
Digital India and Swach Bharat programs got failed when it comes to remove oil from the sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X