For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி.க நடத்த திட்டமிட்டுள்ள தாலியகற்றும் போராட்டத்திற்கு சென்னை போலீஸ் அனுமதி மறுப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பெரியார் திடலில் வரும் 14ம் தேதி திராவிடர் கழகத்தில் சார்பில் நடத்தப்பட உள்ள அண்ணல் அம்பேத்கர் விழாவில், தாலியகற்றும் போராட்டம், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்தப்படும் என்று தி.க தலைவர் வீரமணி அறிவித்திருந்தார். இப்போராட்டத்துக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இதுகுறித்து உரிய முறையில் சட்டப் பரிகாரம் தேடப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

Chennai police denied Thali removing event

தாலி புனிதமானதா இல்லையா என்று தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்திய விவாத நிகழ்ச்சிக்கு, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க திராவிடர் கழகம், தாலியகற்றும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தது.

தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவான ஏப்ரல் 14ம்தேதி, இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாகவும், பசு மாடுகளை புனிதம் என்று கூறும் இந்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாட்டுக்கறியை சாப்பிட்டும் போராட்டம் நடத்துவது என்றும் தி.க முடிவு செய்தது. எனவே, இந்து அமைப்புகள் தி.கவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், திகவுக்கு வேப்பேரி சரக உதவி ஆணையர், திக துணை தலைவர் பூங்குன்றனுக்கு அனுப்பியுள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

இப்போராட்டத்தினால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்பதுடன், பொது அமைதி கெடவும், தாலியை தமிழ்நாட்டு பெண்கள் புனிதமாக கருதும் வழக்கம் உள்ள நிலையிலும், பசுவை தெய்வமாக கருதி வழிபடும் நிலையிலும், மேற்படி நிகழ்ச்சியை நடத்தினால், மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டு, மேற்படி நிகழ்ச்சியை தடை செய்யவும், திராவிட கழகத் தலைவர் திரு. கே. வீரமணியை கைது செய்யவும் கோரி, இந்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், தனி நபர்களும் மனு அளித்துள்ளனர்.

மேலும், அகில இந்திய இந்து மகாசபாவின் மாநில துணைத் தலைவர், பி.எஸ். தனசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி, 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில் மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து அவரை கைது செய்ய காவல் ஆணையாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் மனு கொடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருந்தால், லலிதாகுமாரி, வழக்கில் சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மனுதாரர் மேற்படி நிகழ்ச்சியை நடத்த காவல் ஆணையாளர் தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு நிலுவையில் உள்ளது.

மனுதாரர் அமைப்பினர் தங்களது நிகழ்ச்சிக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னை நகரில் அமலில் உள்ள தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன் படி இதுவரை அனுமதி பெறப்படவில்லை.

இத்தகைய சூழலில், மேற்படி நிகழ்ச்சி, இதர தரப்பினரின் வெறுப்புணர்வை தூண்டி, சட்டம், ஒழுங்கு, பொது அமைதி மற்றும் மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாலும், மேலும், இந்நிகழ்ச்சிக்கு முறைப்படி காவல் துறை அனுமதி பெறாததாலும், மனுதாரர் 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில், நடத்த உத்தேசித்துள்ள மாட்டு கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41 (2)-ன்படி சென்னை மாநகர காவல் ஆணையாளரின் ஆணைக்குட்பட்டு இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சட்டப்படி, இதற்கு தீர்வு காணப்படும் என்று வீரமணி கூறியுள்ளார்.

English summary
Chennai police denied Thali removing event which is planned by Dravidar Kazhagam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X