For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை மழை.. அந்தப் பாடு பட்டும் கூட இன்னும் திருந்தலையே நாம்!

Google Oneindia Tamil News

சென்னை: எவ்வளவு வெயில் அடித்தாலும் தமிழகத்து மக்கள் அப்படியே தாங்கிக் கொள்வார்கள். கொஞ்சம் கூட அசர மாட்டார்கள். ஆனால் மழை மட்டும் வந்து விட்டால் ஆடிப் போய் விடுவார்கள். குறிப்பாக சென்னை மாநகர மக்கள். கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னையும், மக்களும் பட்ட பாட்டை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. ஆனால் அவ்வளவு கொடுமையை அனுபவித்தும் கூட எந்த மாற்றத்தையும் இன்னும் சென்னையும் சரி, சென்னை மக்களும் சரி பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

மழை என்பது இயற்கை நிகழ்வு. அது இல்லாமல் இந்த பூமி இல்லை, இந்த வாழ்க்கை இல்லை. ஆனால் இன்று மழையை சபிக்கும் அளவுக்கு பலர் போய் விட்டனர். காரணம், அந்த மழையால் அவர்கள் பட்ட பாடு. உண்மையில் மழைக்கு இடையூறாக இருப்பது மக்கள்தான். மக்களின் தவறுகள்தான் அவர்களின் கஷ்டத்திற்கு முதல் முக்கியக் காரணமே. ஆனால் அதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம்.

அதேபோல அரசு நிர்வாகங்களும், மக்களின் கஷ்டத்தைப் போக்கும் வகையில் துரிதமாகவும், முன் யோசனையுடனும், செயல்படுவது என்பது வரலாற்றிலேயே இல்லாத ஒன்றாகி விட்டது. பாதிப்பு வந்த பின்னர் அதில் "பாலிட்டிக்ஸ்" செய்யவே நமது அரசியல்வாதிகளுக்கு அதிக ஆர்வம் இருக்கிறதே ஒழிய, பிரச்சினை வரும் முன்பே அதை தடுத்து நிறுத்தும், தவிர்க்கும் புத்திசாலித்தனம் ஒருபோதும் இருந்ததில்லை.

சென்னை மழை

சென்னை மழை

கடந்த ஆண்டு நவம்பர் கடைசியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும் அடித்து வெளுத்த மழையால் சென்னை நகரமே சின்னாபின்னமாகிப் போனது. நீரில் மூழ்கித் தத்தளித்து தவித்துப் போய் விட்டது தலைநகர். மக்கள் பட்ட அவதிகளைச் சொல்லி மாள முடியாது.

வீடுகள், சொத்துக்கள் நாசம்

வீடுகள், சொத்துக்கள் நாசம்

எத்தனை எத்தனை வீடுகள் இதில் நாசமாகின. எத்தனை வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன, சேதமடைந்தன. பல சொத்துக்கள் சேதமடைந்தன. முக்கிய ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டது. குடிசைகளை இழந்த ஆயிரக்கணக்கானோர் இன்னும் கூட மீள முடியாத நிலையில்தான் வேறு இடத்தில் குடி பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

அரசியல் மற்றும் ஆக்கிரமிப்புகள்

அரசியல் மற்றும் ஆக்கிரமிப்புகள்

மக்களின் இந்தத் துயரத்திற்கு செம்பரம்பாக்கத்தைக் காரணம் காட்டி அரசியல்வாதிகள் ஒரு பக்கமாக போய் விட்டனர். ஆனால் உண்மையான பிரச்சினை சென்னை முழுக்க மண்டிப் போய்க் கிடக்கும் ஆக்கிரமிப்புகள்தான். அதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் துணிச்சலாகவும், பகிரங்கமாகவும் பேச முன்வருவதில்லை. காரணம், ஒவ்வொரு கட்சிக்கும் ஆதரவான ஆக்கிரமிப்புகள்தான இங்கு அதிகம். அத்தனை கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டுளளன. ஏரிகளை சூறையாடி விட்டனர். ஆற்றங்கரைகள் அழிக்கப்பட்டு விட்டன. பிறகு வெள்ளம் ஊருக்குள் வராமல் என்ன செய்யும்.?

திருந்தினோமா!

திருந்தினோமா!

இவ்வளவு நடந்தும் கூட அந்த ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றினார்களா என்றால்.. இல்லை என்ற பதில்தான் வருகிறது. காரணம், ஒரு இடத்தில் கூட ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவில்லை அல்லது அகற்ற முடியவில்லை. காரணம், அரசியல். ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து வந்த பெரும் நெருக்கடியால் எந்த ஆக்கிரமிப்பையும் அதிகாரிகளால் அகற்ற முடியவில்லை. இதோ இன்று அதன் பாதிப்பை மீண்டும் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

மக்களும் அகலவில்லை

மக்களும் அகலவில்லை

கால்வாய்களை, ஆற்றங்கரைகளை ஆக்கிரமித்து அல்லது வேறு வழியில்லாமல் அங்கேயே குடியிருந்து வரும் மக்கள்தான் அந்த இடத்தை விட்டு அகன்றார்களா என்றால் அதுவும் நடக்கவில்லை. மாறாக வந்த வெள்ளம் போய் விட்டது, வழக்கம் போல வேலையைப் பார்ப்போம் என்று அத்தனை பேரும் ரொட்டீனுக்கு மாறி விட்டனர். இதோ இன்று அந்த அலட்சியம் மக்களை மறுபடியும் பாதித்துள்ளது.

சின்ன மழைதான்

சின்ன மழைதான்

நேற்று முதல் பெய்து வருவது மிகப் பெரிய மழை இல்லை. தொடர்ந்து பெய்கிறது அவ்வளவுதான். ஆனால் மிகப் பெரிய மழை இல்லை. ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பல இடங்களில் வெள்ளக்காடாகியுள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. காரணம், கால்வாய் ஆக்கிரமிப்புகள்.

பெரிய மழை வந்தால்

பெரிய மழை வந்தால்

மிகப் பெரிய மழை சென்னைக்கு வரும் என்று வெதர்மேன் பிளாக்கர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். ஆனால் தாங்கும் நிலையில், சமாளிக்கும் வலுவில் சென்னை உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியள்ளது. காரணம், பெரு மழை வந்தால் வெள்ள நீர் வடிந்தோடத் தேவையான கால்வாய்களை நாம் சரி செய்யவில்லை. ஏரிகளில் தண்ணீர வெளியேறி வரும்போது அவை சீராகப் போய் கடலில் கலக்கத் தேவையான வழிகளை நாம் சரி செய்யவில்லை. கடந்த மழைக் காலத்தின்போது ஏற்பட்ட அதே அவல நிலையில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம்.

தாழ்வான நகரம்

தாழ்வான நகரம்

சென்னை நகரம் அடிப்படையிலேயே கடல் மட்டத்தை விட தாழ்வான நகரம். ஆனால் அதை மேலும் மேலும் மோசமான நிலையிலையே நாம் வைத்துள்ளோம். இதனால்தான் ஒரு மழைக்கே நகரம் நாறிப் போய் விடுகிறது. அரசியல்வாதிகள், அரசு நிர்வாகம், பொதுமக்கள் என யாருமே இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மழை நீர்க் கால்வாய்களை பல்வேறு குப்பைகளைப் போட்டு இன்னும் பொறுப்பில்லாமல்தான் நடந்து கொள்கிறோம். காலி பிளாட்டுகளில் குப்பை போடுவதை யாரும் இன்னும் நிறுத்தவில்லை. குறைந்தபட்சம் நமது பகுதியைக் கூட காக்க யாரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

புதிய அரசுக்கு இந்த மழை நீர் வெள்ளப் பிரச்சினை மிகப் பெரிய சவால் என்பதில் சந்தேகமில்லை.. அதேசமயம், இதை அரசோடு இணைந்து மக்களும் ஒரு இயக்கமாக மாறி சரி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளோம் என்பதையும் மறந்து விடக் கூடாது.

English summary
Chennai is still not ready to face the heavy rains. Despite if struggled to face the fury of the severe floods and rains in last year, the city and the people have not learnt a lesson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X