For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரம் ஆடலரசனின் ஆருத்ரா தரிசனம்!!... ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிதம்பரம்/ திருநெல்வேலி: சிதம்பரம் நடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.

Chidambaram Natarajar Temple Aruthra Dharsan celebrates on Jan.5

சிதம்பரம் நடராஜரை நினைத்தவுடன் நினைவுக்கு வருவது அவரது திருநடனமும், அந்த நடனத்தை காட்டி அருளிய திருவாதிரை திருநாளும்தான். மார்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜரின், ஆருத்ரா தரிசனத்தை காண்பது மிகப்பெரும் பேறு ஆகும்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை கீழவீதி தேர்நிலையை அடைந்தன.

இன்று ஜனவரி 5ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது.

அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2.00 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளிக்கின்றனர். ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலியில் தாமிரசபை

தமிழகத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசன தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபை தாமிரபரணி நதிக்கரையில் ராஜவல்லிபுரம் அருகே செப்பறையில் முதல் நடராஜமூர்த்தி கோயிலில் நடைபெற்ற திருவாதிரை தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாதிரை களியின் கதை

திருவாதிரை திருநாளில் ‘களி' என்பது முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ‘திருவாதிரையில் ஒரு வாய்க்களி' என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை உண்டாக்கும்.

திருவாதிரை தினத்தில் களிக்கும் தனி இடம் உண்டு

இந்த ‘களி' எப்படி வந்தது என்பது சுவாரஸ்யமான கதை. சிதம்பரத்தில் சேந்தனார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் பட்டினத்தாரிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். சேந்தனாரும், அவரது மனைவியும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கினர். தினமும் உணவு உட்கொள்ளும் முன்பாக சிவதொண்டர்களுக்கு உணவிட்ட பின்னரே அவர்கள் இருவரும் சாப்பிடுவார்கள்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை உணர்ந்திருந்தனர் இருவரும். தவிர இயல்பாகவே, அந்த தம்பதியரிடம் ஈகை குணம் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் பட்டினத்தார் அனைத்தையும் துறந்து துறவு வாழ்வுக்கு திரும்பி விட்டார். இதனால் அவரது சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார் சேந்தனார்.

ஆனால் தனக்கென்று எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. காலம் கழிக்க வேண்டுமே என்ன செய்வது?. விறகு வெட்டி அதனை விற்பனை செய்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தினர் சேந்தனார் தம்பதியர். அந்த ஏழ்மை நிலையிலும் சிவ தொண்டர்களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் நற்குணம் பெற்றவர்களாக அவர்கள் திகழ்ந்தனர்.

ஒருநாள் கடுமையான மழையின் காரணமாக சேந்தனார், விற்பனைக்காக கொண்டு சென்ற விறகுகள் ஒன்று கூட விற்பனையாகவில்லை. விறகுகளை விற்றால்தானே வீட்டில் சமையல் செய்ய இயலும்; சிவதொண்டர்களுக்கு உணவளிக்க முடியும் என்ற கவலையுடன் வீடு திரும்பினார் சேந்தனார்.

ஆனால் அவரது மனைவி வீட்டில் இருந்த உளுந்தை அரைத்து மாவாக்கி அதில் சுவையான களி சமைத்தார். பின்னர் தாங்கள் சமைத்த உணவுடன் சிவதொண்டர் யாராவது வருவார்களா? என்று காத்திருக்க தொடங்கினர். சேந்தனாருக்கு மனது ஒரு நிலையில் இல்லை. ‘இந்த மழைக்கு யார் வந்து உணவு கேட்கப்போகிறார்கள்?, அப்படியே உணவுக்காக ஏதாவது ஒரு அடியார் வந்தாலும் கூட, அவருக்கு இந்த களி பிடிக்குமா? அவர்கள் இதனை சாப்பிடுவார்களா? என்ற கவலையோடு காத்திருந்தார்.

அப்போது ஒரு சிவ தொண்டர், சேந்தனாரின் வீட்டு வாசலில் மழைக்காக ஒதுங்கினார். பின்னர் அந்த அடியார், சேந்தனாரிடம், ‘ஐயா! உங்கள் வீட்டில் உண்பதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா? எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது' என்று கேட்டார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சேந்தனார், அந்த அடியாரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மனைவியிடம் களியை எடுத்து பரிமாறும்படி கூறினார். களியை சாப்பிட்ட அடியார் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க தொடங்கி விட்டார். ‘அருமையான சுவை! இதே போல் சுவையுடன் நான் எந்த உணவும் சாப்பிட்டதில்லை.

இந்த களி, அமிர்தத்தையும் மிஞ்சிடும் சுவையில் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது' என்று கூறினார். இதனை கேட்டதும் மனவருத்தத்தில் இருந்த சேந்தனாருக்கும், அவரது மனைவிக்கும் ஆனந்தம் தாளவில்லை. அந்த அடியார் மேலும் பேசத் தொடங்கினார். ‘நீங்கள் சமைத்துள்ள இந்த களி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இன்னும் இருந்தால் கொடுங்கள்.

நான் அடுத்த வேளைக்கு வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்று கூறினார். ‘சமைத்ததே கொஞ்சம்தான். நாம் சாப்பாட்டிற்கு என்ன செய்வது' என்று சேந்தனார் எண்ணவில்லை. அடியாரின் ஆனந்தமே முக்கியம் என்று நினைத்து இருந்த அனைத்து களியையும் எடுத்து கொடுக்கும்படி மனைவியிடம் கூறினார். கணவரின் சொல்படியே மீதமிருந்த களியை எடுத்து அடியாரிடம் கொடுத்து விட்டு அன்றைய தினம் பட்டினிக்கிடந்தனர் தம்பதியர்.

நடராஜன் வாயில் களி

மறுதினம் காலை வழக்கம் போல், தில்லை நடராஜப் பெருமான் கோவில் சன்னிதியை திறக்க வந்த அர்ச்சகருக்கு, அங்கு கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் நடராஜரின் வாயில் களி ஒட்டிக் கொண்டிருந்த களிதான்.

கருவறையில் கொஞ்சம் சிதறியும் கிடந்தது. ‘யார் கருவறைக்குள் புகுந்தது. களியை யார் நடராஜரின் வாயில் வைத்தது' என்று தெரியாமல் பதற்றம் அடைந்தார். இது பற்றி ஊர் முழுவதும் தெரியவந்தது. பின்னர் இந்த பிரச்சினையை அரசரிடம் கொண்டு சென்றனர். அவர்கள் கூறியதை கேட்ட அரசருக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை, மாறாக ஆச்சரியம் ஏற்பட்டது.

ஏனெனில் முன்தினம் இரவு அரசனின் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘நீ தினமும் எனக்கு படைக்கும் உணவை விட, இன்று சேந்தனார் என்ற தொண்டன் கொடுத்த களி, அமிர்தம் போல் இருந்தது' என்று கூறியது அரசனுக்கு நினைவுக்கு வந்தது. அதுவரை ஏதோ கனவு என்று நினைத்திருந்த அரசன் இப்போது, அது நிஜம் என்பதை உணர்ந்து கொண்டான். உடனடியாக சேந்தனார் யார் என்றும், அவரை தேடி கண்டுபிடிக்கும்படியும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டான். ராஜாங்க பணியாளர்கள், சேந்தனாரை தேடிக் கொண்டிருந்தனர்.

நடராஜர் கோவில் தேர்

அந்த நேரத்தில் சிதம்பர நடராஜ பெருமானுக்கு தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில் அரசரும், மக்களும் கலந்துகொண்டனர்.

சேந்தனாரும் அந்த விழாவில் கலந்துகொண்டிருந்தார் மக்களோடு மக்களாக. ஆனால் அவர்தான் சேந்தனார் என்பது யாருக்கும் தெரியாது. அப்போது முன்தினம் பெய்திருந்த மழையின் காரணமாக தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து கொண்டது. அனைவருக்கும் இது அபசகுனமாக தென்பட்டது. ஆனால் இறைவன் நடத்தும் விளையாட்டு யாருக்கும் புரியாது.

எவ்வளவு முயன்றும் தேர் சக்கரத்தை மண்ணில் இருந்து விடுவிக்க இயலவில்லை. யானைகள் முட்டித் தள்ளிய போதும், தேரானது கடுகளவும் முன்னேறவில்லை. இதனால் அரசரும், மக்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்த நேரத்தில், ‘சேந்தனாரே! நீ பல்லாண்டு பாடு' என்று ஒரு அசரீரி கேட்டது.

அது இறைவனின் ஒலி என்று அனைவரும் அறிந்து கொண்டனர்.

அருள் புரிந்த இறைவன்

அந்த குரலைக் கேட்ட சேந்தனாரோ, ‘இறைவா! அடியேன் என்ன பாடுவது? எனக்கு பதிகம் பாடத் தெரியாதே!' என்ற பொருளில் தன்னை அறியாமலே பாடலை பாடிக் கொண்டிருந்தார். மேலும், ‘மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல' என்று தொடங்கி, ‘பல்லாண்டு கூறுதுமே' என்று பதிமூன்று பாடல்களை பாடி முடித்தார்.

அந்த பாடல்களை கேட்டு மனமகிழ்ந்த இறைவன், மண்ணில் புதைந்திருந்த தேர் சக்கரத்தை விடுவித்தார். தேர் நகரத் தொடங்கியது; வெகு சுலபமாக நகரத் தொடங்கியது. தேரை பஞ்சு மூட்டையை இழுத்துச் செல்வது போல் இழுத்துச் சென்றனர் பக்தர்கள். அதுவரை நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மன்னன், சேந்தனாரிடம் நேராக சென்று, ‘தங்கள் வீட்டில் விருந்துண்டது அந்த ஈசன்தான்.

என் கனவில் தோன்றிய இறைவன், நீங்கள் கொடுத்த களி அமிர்தத்தை விட சுவையாக இருந்ததாக கூறினார். நீங்கள் தான் சேந்தனார் என்பதையும் இறைவன் எனக்கு காண்பித்து கொடுத்து விட்டார்' என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இறைவனே தன் வீட்டிற்கு வந்து களியை உண்டது கேட்டு சேந்தனார் மகிழ்ந்தார்.

சேந்தனாரின் வீட்டிற்கு சிவதொண்டராக சென்று சிவபெருமான் முதன் முதலில் களி சாப்பிட்ட தினம் ‘திருவாதிரை திருநாள்' ஆகும். ஆகையால் தான் திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

English summary
Thousands of devotees took part in the car processions taken out at Chidambaram in connection with Arudhra Darshanam of the Nataraja temple on Monday. In Thillai Chidambaram,10 days brahmotsavam festival will be held during arudhra dharsan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X