For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம்: ஜெ., ரம்ஜான் வாழ்த்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு இஸ்லாமியப் பெரு மக்களின் நல்வாழ்விற்காக எப்போதும் உழைக்கிறது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று இன்று அவர் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்துச் செய்தி:

ஈகைத் திருநாளான ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Chief Minister J Jayalalithaa extend Ramzan greetings

மனிதகுலத்திற்கு வழி காட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒரு நிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

இஸ்லாமியப் பெரு மக்களின் நல்வாழ்விற்காக என்றும் உழைத்திடும் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கி வருகிறது; உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியதோடு, தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியத்தை 1 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது.

வக்ப் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையிலுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பணிக்கொடைகளை வழங்கிட சிறப்பு ஒரு முறை மானியமாக 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளது; பள்ளி வாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ப் நிறுவனங்களில் தொடர்ந்து பழுது நீக்குதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 3 கோடி ரூபாயில் வக்ப் நிறுவன மேம்பாட்டு நிதியை உருவாக்கியுள்ளது.

எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு நிர்வாக மானியத்தை 10 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது; ஆதரவற்ற விதவை ஏழை மற்றும் வயதான இஸ்லாமியப் பெண்களுக்கு உதவிடும் பொருட்டு, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இஸ்லாமியப் பெண்கள் உதவிச் சங்கங்களை அமைத்து, ஒவ்வொரு சங்கத்திற்கும் 20 லட்சம் ரூபாய் வரை இணை மானியம் வழங்கி வருகிறது.

உருது மொழியை ஒரு மொழிப்பாடமாக பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தியுள்ளது; நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.

இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
Chief Minister J Jayalalithaa today extended Ramzan greetings. "Prophet Muhammad preached equality, self-control, good conduct, charity, and love.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X