
நான் விளம்பரப் பிரியரா.. என்னோட அரசியல் வாழ்க்கை தெரியுமா..? சீறிய முதல்வர் ஸ்டாலின்!
ராணிப்பேட்டை: 55 ஆண்டுகளாக அரசியலில் உள்ள தனக்கு ஏன் விளம்பரம் தேவைப்பட போகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூருக்கு வருகை தந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலைய திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

தொடர்ந்து இன்று ராணிப்பேட்டை பாரதி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 13.40 ஏக்கர் பரப்பளவில் ரூ.118 கோடி மதிப்பீட்டில் மாவட்ட இந்த ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது
தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது திடீரென அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களை சந்தித்த முதலமைச்சர், பாடங்கள் சிறப்பாக நடத்தப்படுகிறதா என்று கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு, நன்றாக படிக்க வேண்டும், வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து அரசுப் பள்ளியில் நடைபெறும் விழாவில் சுமார் 60 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.267 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை என்பதைவிடவும் காந்திபேட்டை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு அமைச்சர் ஆர்.காந்தி செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் விளம்பரப் பிரியர் என்று விமர்சனத்திற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், நாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என்று கூறிக்கொண்டு எதிர்க்கட்சிகள் அலைகின்றனர். தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 80 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் மக்கள் முன் கம்பீரமாக நிற்கிறேன். 55 ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கிறேன். இனிமேல் ஏன் எனக்கு விளம்பரம் தேவைப்பட போகிறது என்று சாடினார்.
மேலும், பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்துள்ளார்.