For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்களின் மனதில் வன்முறை வளர சினிமாதான் காரணம்- வைகோ

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: வல்லநாட்டில் கல்லூரி முதல்வரை மாணவர்கள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் மனதில் வன்முறை வளர்வதற்கு சினிமாவே காரணம் என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

Vaiko

இதயத்தை உறைய வைக்கும் கொடூரமான துன்பச் செய்தி, அறிந்த மாத்திரத்தில் அனைவரையும் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்குச் செல்லுகின்ற வழியில், வல்லநாட்டுக்கு அருகில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் அதே பொறியியல் கல்லூரியின் 3 மாணவர்களால், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

பேருந்துகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளில் இந்த மாணவர்கள் நடந்து கொண்ட விதம் கல்லூரியின் ஒழுங்குக்குக் கேடு ஏற்படுத்தும் என்று எண்ணி, இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக நீக்கம் செய்து உள்ளார். அதனால், இந்த மாணவர்கள், அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் லட்சோப லட்சம் மாணவர்கள், கல்வியில் முனைப்போடு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு, பெற்றோரின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்கின்ற குறிக்கோளோடு பயின்று வருகிறார்கள், அமைதி காத்து வருகிறார்கள். ஆனால், அண்மைக் காலமாக, ஒரு சில மாணவர்கள், கல்லூரிகளுக்குள் மோதிக் கொள்வதும், ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் வன்முறையில் ஈடுபடுவதும், மிகவும் விபரீதமான நிலையை ஏற்படுத்துகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரிகளில் மாணவர்கள் இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, வேறு விதமான குறுகிய உணர்வுகளோ, எண்ணங்களோ ஏற்பட்டது கிடையாது. ஆகக் கூடுதலாக சத்தம் போட்டுப் பேசி சண்டை போட்டுப் பின்னர் சேர்ந்து கொள்வார்களே தவிர, கத்தி, அரிவாள் கொண்டு தாக்குவது போன்ற நிகழ்வுகள் கிடையாது.

கடிதோச்சி மெல்ல எறிக என்பது போல, ஆசிரியர்கள் கண்டிப்பது, மாணவர்களின் நன்மைக்காகத்தான்; ஒரு தந்தை பிள்ளையைக் கண்டிப்பதைப் போலத்தான். ஆனால், மாணவர்கள், கொடிய ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது, விதைநெல்லே அழியும் பெருங்கேடு ஆகும். பள்ளி ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களை, கல்லூரி முதல்வரை, பேராசிரியர்களை, மாணவர்கள் தாக்குகின்ற ஒரு நிலை ஏற்படுமானால், பயிரே வேலியை அழிக்கின்ற கேடாக முடியும்.

இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் மாணவர்களின் மனதில் வளர்வதற்கு, அண்மையில் வருகின்ற திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும் ஒரு காரணம் ஆகும். பல இடங்களில் மதுவும் ஒரு காரணம் ஆகும்.

இந்தப் படுகொலைக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இதைச் செய்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உயர்ந்த இலட்சியங்களுக்காக, தமிழகத்தின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டிய மாணவர் சமுதாயம், நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு வாய்ந்த மாணவர் சமுதாயம், வள்ளுவப் பெருந்தகை உள்ளிட்ட நமது முன்னோர்கள் வகுத்த அறநெறிகளை மனதில் கொண்டு, வன்முறைகளுக்கு இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK General secretary Vaiko condemned the students who murdered College Principal and alleged that Cinema is the main reason for that kind of violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X