For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலத்தால் அழியாத புகழ் பெற்ற இசைக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.வி: ஜெயலலிதா இரங்கல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: எம்.எஸ்.வியின் இசையில், மனதைக் கவரும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளேன். அவரது இசையும் பாடல்களும் காலத்தால் அழியாக சாகா வரம் பெற்ற பாடல்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திரை இசை உலகின் முடிசூடா மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவிற்கு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

மெல்லிசை மன்னர் என்றும் ‘எம்.எஸ்.வி'என்றும் அன்புடன் அழைக்கப்படுபவரும் தமிழ்த் திரை உலகில் மாபெரும் சகாப்தமாக திகழும் பழம்பெரும் இசையமைப்பாளர், திரையுலக இசை மேதை திரு எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் இன்று (14.7.2015) உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனையும், பெரும் துயரமும் அடைந்தேன்.

அன்பும், அடக்கமும், எளிமையும், இறைப் பற்றும் மிகுந்த திரு எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசைப் பயணம் அவரது 13வது வயதிலேயே ஆரம்பித்து விட்டது. இசையமைப்பாளர் திரு. சி.ஆர். சுப்பராமன் இசைக் குழுவில் பணி புரிந்த திரு. எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள். திரு. டி.கே. இராமமூர்த்தியுடன் இணைந்து, திரு. சுப்பராமன் மறைவால் முழுமைப் பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி,மணமகள் போன்ற படங்களை முடித்துக் கொடுத்தார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த "ஜெனோவா" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிய திரு. எம்.எஸ். விஸ்வநாதன், "பணம்" திரைப்படம் முதல் "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் வரை திரு ராமூர்த்தி அவர்களுடன் இணைந்து 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனியாக இசை அமைத்துள்ளார்.

1200 திரைப்படங்கள்

1200 திரைப்படங்கள்

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1200க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்தவர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த பெருமைக்குரிய இசையமைப்பாளர் திரு. எம்.எஸ்.வி அவர்கள், ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் மிகப் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர்.

தனித்தன்மையான குரல்

தனித்தன்மையான குரல்

திரு எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்ததோடு மட்டுமல்லாமல், வேறு இசைமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் கூட பாடல் பாடியவர் ஆவார்.

எம்.எஸ்.வி இசையில் நான்

எம்.எஸ்.வி இசையில் நான்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலான " நீராருங் கடலுடுத்த" என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் திரு எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசையில், நான் "சூரியகாந்தி" என்ற திரைப்படத்தில், `ஓ மேரி தில்ரூப` "அன்பைத்தேடி" என்ற திரைப்படத்தில், சித்திர மண்டபத்தில்'; "திருமாங்கல்யம்" என்ற படத்தில், `உலகம் ஒரு நாள்`போன்ற மனதைக் கவரும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளேன்.

காலத்தால் அழியாதவை

காலத்தால் அழியாதவை

1965ம் ஆண்டு நான் நடித்து வெளி வந்த " வெண்ணிற ஆடை" திரைப்படத்தில் உள்ள "கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல" என்ற பாடல் பட்டிதொட்டிகளில் எல்லாம் பிரபலமடைந்தது. அதே ஆண்டில் வெளி வந்த, நான் புரட்சித் தலைவர் அவர்களுடன் இணைந்து நடித்த முதல் படமான " ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் காலத்தால் அழியாத புகழ் பெற்ற "நாணமோ" , "அதோ அந்த பறவை போல" பல பாடல்கள் சாகா வரம் பெற்ற பாடல்களாக அமைந்திருந்தன. இவர் இசையமைத்த பாடல்கள் அன்றும், இன்றும், என்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது.

மத்திய அரசு விருதுகள்

மத்திய அரசு விருதுகள்

பெரும் புகழுக்கும் பெருமைக்கும் உரிய திரு எம். எஸ் விஸ்வநாதன் அவர்கள் பல விருதுகள் பெற்றிருந்தாலும் அவருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படாதது எனக்கு என்றும் மனவருத்தத்தை அளித்து வந்தது. நான் 1991-ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றது முதல் திரு விஸ்வநாதன் அவர்களுக்கு பத்மவிபூஷன் விருது வழங்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்து வருகிறேன். ஆயினும், மாநில அரசுக்கு சாதகமாக எதையும் செய்யாத மத்திய அரசுகள் இதற்கும் செவிசாய்க்கவில்லை.

திரை இசைச் சக்கரவர்த்தி

திரை இசைச் சக்கரவர்த்தி

"கலைமாமணி விருது" பெற்ற திரு. எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் எண்ணற்ற விருதுகளுக்கு சொந்தக்காரர். தமிழ் இசை சங்கம் 2003-ம் ஆண்டு இவருக்கு " இசை பேரறிஞர்" பட்டம் வழங்கி பெருமை சேர்த்தது. `தென்னிந்திய பிலிம்பேர் விருது`, வாழ்நாள் சாதனையாளர் விருது," கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது என பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். திரு எம். எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு 2012-ஆம் ஆண்டு "திரை இசைச் சக்கரவர்த்தி" என்ற பட்டத்தை நான் வழங்கி அவரை கௌரவித்தேன். அன்றைய விழாவில் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே"என்ற பாடலை தனது குழுவினருடன் இணைந்து இசையமைத்து பாடியது இன்றும் என் மனக் கண் முன் உள்ளது.

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

தனது ஈடு இணையற்ற இசை வல்லமையால் தமிழ்த் திரைப்பட உலகுக்கும், குறிப்பாக தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த திரு எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் மறைவு திரைப்படத் துறைக்கும், கலை உலகிற்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரை உலக நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister J.Jayalalitha who has acted in many films which had music by the departed legend called MSV’s demise as "An irreparable loss to film industry & music world," in her condolence statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X