விறுவிறுப்படையும் தென் மேற்குப் பருவ மழை.. உஷாராகும் தமிழக அரசு.. ஜெ. அதிரடி உத்தரவு
சென்னை: தென் மேற்குப் பருவ மழை விறுவிறுப்படைந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் மாவட்டங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த முறை அதிக அளவிலான மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழையின்போது சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கத் தவறியதால்தான் பெரும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது என்பதால் தமிழக அரசு தற்போது சுதாரித்துள்ளது.
தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 செ.மீ. மழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 20 மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. இதேபோல் புதன்கிழமையும் மழை பெய்தது. அன்று 6.5 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
எனவே இப்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் மழையால் சேதம் ஏற்படுவதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து, மழையினால் சேதம் ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சியில் நேற்று முன்தினத்தில் இருந்து 1913 என்ற ஹெல்ப் லைன் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் மாநகராட்சியில் நிரந்தர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து, பாதிப்பில் இருந்து நிவாரணத்தையும் தீர்வையும் பெற முடியும். மழைநீர் தேங்கினால் உடனடியாக அகற்றுவதற்காக 600 மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்து இருக்கிறோம்.
இரவு 10 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரையில் இரவு நேரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரவில் அவர்கள் ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்து, மரம் விழக்கூடிய இடங்கள், மழை நீர் தேங்கும் பகுதிகளை பார்வையிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பார்கள்.
மரம் விழுந்துவிட்டால் 2 மணி நேரத்துக்குள் அதை அப்புறப்படுத்தி, அனைத்தையும் சரி செய்யக்கூடிய அளவில் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்காக மண்டலத்துக்கு 10 முதல் 15 மரம் வெட்டும் எந்திரங்களை தயாராக வைத்து இருக்கிறோம். ஒரு மண்டலத்துக்கு 2 ஜே.சி.பி. எந்திரம் என்ற வீதத்தில் 15 மண்டலங்களுக்கும் 30 ஜே.சி.பி. எந்திரங்கள் உள்ளன.
அதுபோல ஒரு மண்டலத்துக்கு 4 படகுகள் என்ற வீதத்தில் 60 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இவை தவிர ஒரு கால்வாய்க்கு 2 படகுகள் வீதம் நிறுத்தப்பட்டு உள்ளன. வெள்ளம் வடியாமல் இருக்கும் இடங்கள், வெள்ள நீரோட்டம் சரியாக இல்லாத இடங்கள், அடைப்புக்கு உள்ளான பகுதிகளை அலுவலர்கள் அடையாளம் கண்டு அவற்றை சரி செய்து வருகிறார்கள். வெள்ளம் வடியாமல் தேங்கி நின்றால் அதை அப்புறப்படுத்த சூப்பர் சக்கர் என்ற நவீன எந்திரங்கள் தேவையான அளவில் நிறுத்தப்பட்டு உள்ளன. ஒரு மண்டலத்துக்கு 20 பேர் என்ற வீதத்தில் மாநகராட்சி அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, துப்புரவுத்துறை, பொறியியல் துறை உள்பட 8 துறைகள், இந்த பணியில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.