For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணத்தை கொடு.. பிணத்தை எடு.. கோவை அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்

பிரேத பரிசோதனை செய்த உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்கப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்-வீடியோ

    கோவை: செத்த பிணமே ஆனாலும் பணத்தை பிடுங்கி கொண்டுதான் புதைக்குழிக்கே அனுப்புவார்கள் போலிருக்கு. மனசாட்சியை அடகுவைத்து மனிதம் இழந்தவனின் செய்தி இது.

    கோவை அரசு மருத்துவமனை. ஈரோடு, உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் இறந்த உடல்கள் இங்கு கொண்டு வரப்படும். இந்த உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் வைத்து உடற்கூறு ஆய்வு செய்யப்படும். பின்னர் அவை குடும்பத்தார்களிடம் ஒப்படைக்கப்படும். இதுபோல உடற்கூறு ஆய்வுக்கூடத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 10 முதல் 20 பிரேதங்கள் வரை பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம்.

    ஆனால் உடற்கூறாய்வு செய்தபின்பு உறவினர்களிடம் ரூபாய் 2000, 3000 என நபர்களுக்கு ஏற்றார்போல பிணவறையில் ஊழியர்கள் பணத்தை வாங்குவதாக இந்த மருத்துவமனை மீது தொடர்ந்து தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. கேட்ட தொகையை கொடுக்கவில்லை என்றாலோ, அல்லது பணத்தை குறைவாக கொடுத்தாலோ, குடும்ப உறவினர்களை தரக்குறைவாகப் பேசி கீழ்த்தரமாக நடத்துவது கடைமட்ட பணியாளர்களுக்கு சர்வசாதாரணமாக போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் பணத்தைக் கொடுத்தால்தான், பிணத்தைக் கொடுப்போம் என அடாவடித்தனமும் நடைபெற்று வருகிறது.

    மிரட்டலுடன் வசூல்வேட்டை

    மிரட்டலுடன் வசூல்வேட்டை

    இந்நிலையில், மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக இருக்கும் பரமசிவம் என்பவர் பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு உறவினர்கள் மறுத்துள்ளனர். ஆனால் பரமசிவமோ வசூல்வேட்டையிலேயே குறியாக இருந்து, உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பணம் தந்தால்தான் பிணத்தை வெளியே எடுத்து கையெழுத்து போடுவேன், பிறகுதான் பிணத்தை தருவேன் என்று முரட்டுத்தனமாக கத்த ஆரம்பித்துவிட்டார். மேலும் 50, 100 வாங்க நான் என்ன பிச்சைக்காரனா? எனவும் ஆவேசமாக பேசியுள்ளார். இதையடுத்து, பரமசிவம் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு, உறவினர்கள் சடலத்தை வாங்கி சென்றுவிட்டார்கள்.

    ஆடின காலும் பாடின வாயும்..

    ஆடின காலும் பாடின வாயும்..

    இந்த அவல சம்பவம் அரங்கேறும்போது அருகில் இருந்து ஒரு காவலர் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றிருக்கிறார். இந்த கண்றாவி காட்சிகள் அனைத்தும் வீடியோவாக வாட்ஸ்அப்பில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பரமசிவம் குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரிக்கும்போது, இவர், ஏற்கனவே லஞ்சப்புகாரில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டவராம். தற்போது மீண்டும் பணிக்கு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்குமா என்ன? திரும்பவும் பரமசிவம் அதே பாணியிலேயே இறங்கிவிட்டார்.

    நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகனிடம் கேட்டபோது, "யாரிடமும் லஞ்சம் கேட்க கூடாது என நான் ஒவ்வொருமுறையும் ஊழியர்களிடம் சொல்லி வருகிறேன். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கத்தான், பிணவறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறோம். இருந்தாலும் இதுபோல சில நிகழ்வுகள் நடந்துவிடுகின்றன. எனினும் பரமசிவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்.

    ஈனப்பிறவிகளை எதில் சேர்ப்பது?

    ஈனப்பிறவிகளை எதில் சேர்ப்பது?

    வாழ்ந்து மறைந்து மனித உயிருக்கு மதிப்பீடுகளின் தரம் தாழ்ந்து வருவது வருத்தமாக இருக்கிறது. கண்முன்னே பிணமாக கிடப்பது நம் காலத்துடனேயே பிறந்து வளர்ந்து இறந்த ஒரு சக மனிதனின் உடல் என்று கூட தெரியாமல் பண வெறி அடிமட்ட ஊழியர்களை பிடித்து ஆட்டு ஆட்டு என ஆட்டுகிறது. அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் ஆயாக்கள் அராஜகம் நடக்குது என்றால், பிணவறைகளில் இதுபோன்ற பணப்பேய்களின் ராஜாங்கம் நடக்குது. இறந்த சோகத்தில் உள்ளவர்களிடம் வாய்ச்சவடாலை காட்டும் இந்த ஈனபிறவிகளை எந்த வரிசையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.

    பிணத்தை தோண்டி திம்பீங்க

    பிணத்தை தோண்டி திம்பீங்க

    பிணத்தை வைத்துகொண்டு வியாபாரம் பேசும் மனிதர்களை நம்நாட்டில்தான் காண முடியும். இதில் தயவு தாட்சண்யமே பார்க்காமல் அனைத்து நிலை அதிகாரிகளும் தண்டிக்கப்பட அரசு முன் வரவேண்டும். லஞ்சப்புகார்கள் அதிகரித்து வரும் மருத்துவமனைகளை கண்காணிக்கவும், தரம் உயர்த்தவும் அரசு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். காணாமல் போய் கொண்டிருக்கும் மனிதத்தை நினைத்தால், இந்தியன் படத்தில் ஒரு வசனம் வருமே அது என் நினைவுக்கு வந்து போகிறது, "காசுக்காக பிணத்த கூட தோண்டி தோண்டி திம்பீங்க"-ன்னு.

    English summary
    Coimbatore government hospitals mortuary staff asking bribe. The hospital employee has been requested to take action.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X