For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குளச்சல் துறைமுக விவகாரம்: குமரி மாவட்டத்தில் மற்றொரு மத கலவரத்திற்கு தூபம்.. தடுக்குமா தமிழக அரசு?

By Veera Kumar
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு கரும்புள்ளியாக மாறிவிட்ட மண்டைக்காட்டு கலவரத்தை போல மற்றொரு மதக் கலவரம் அதே குமரி மாவட்டத்தில் நடைபெற தேவையான தூபங்கள் போடப்பட்டு வருகின்றன. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்த நீருபூத்த நெருப்பு சூழ்நிலையை தடுக்க வேண்டியது அவசியம்.

தமிழகத்தின் பிற மாவட்ட உணவு, மொழி, கலாசாரம் போன்ற பழக்க வழக்கங்களிலிருந்து மட்டுமல்ல, மதரீதியான உணர்வுகளிலும் கன்னியாகுமரி மாவட்டம் தனித்துவம் கொண்டது.

இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஏறத்தாழ சரிசமமாக வாழும் மாவட்டம் கன்னியாகுமரி. இம்மாவட்டத்தில் நாடார்களும், மீனவர்களும் பெரும்பான்மை ஜாதிகள்.

Colachel harbour issue turn toward religious clash as hindus and Christians locks horns

மீனவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகவும், நாடார்களில் சரி பாதி இந்துக்களாகவும், மற்றவர்கள் சிஎஸ்ஐ கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். சமீபகாலமாக பெந்தேகோஸ்தே கிறிஸ்தவமும் பரவி வருகிறது.

நீருபூத்த நெருப்பு

முன்பிருந்தே குமரி மாவட்டத்தில், இரு தரப்புமே தங்களுடைய மத உணர்வுகளில் கொஞ்சம் அதீத அக்கறை காட்டிவருகிறார்கள். கன்னியாகுமரி பெயரை கன்னிமேரி எனவும், நாகர்கோயில் பெயரை நாதர் கோயில் எனவும், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் புனித சவேரியார் தியானம் செய்தார் என அறிவிக்கவும் அம்மாவட்ட கிறிஸ்தவர்கள் கோரிக்கைவிடுக்க தொடங்கினர். அப்போது முதல் இந்து-கிறிஸ்தவர் மோதல் நீருபூத்த நெருப்பாக இருந்தது.

மண்டைக்காட்டு கலவரம்

இந்நிலையில், 1982ம் ஆண்டு மண்டைக்காடு நகரிலுள்ள பகவதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்த இந்து பெண்களை, கிறிஸ்தவ மீனவர்கள் பலாத்காரம் செய்ய முயன்றதாக தகவல் பரவியதால், இரு பிரிவினரும் மோதிக்கொண்டனர்.

8 பேர் கொலை

எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற அந்த கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பிலும் பொருள் சேதம் மட்டுமின்றி, உயிர் சேதமும் ஏற்பட்டது. மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். அமைதி பூங்கா என்று வர்ணிக்கப்படும் தமிழகத்தில் நடந்த இந்த மத மோதல் இன்னமும் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத கருப்பு மையாக உள்ளது.

குளச்சல் துறைமுகம்

இந்த நிலையில், குளச்சல் துறைமுகத்தை முன்வைத்து மீண்டும் அங்கு இந்து-கிறிஸ்தவர் நடுவே மோதல் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது. குளச்சல் அருகே வர்த்தக துறைமுகம் அமைந்தால், அது மீனவர்களை பாதிக்கும் என்று ஒரு வதந்தி தீவிரமாக பரப்பப்பட்டு வருகிறது. இதனால், மீனவர்கள் திடீரென திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

இரு பிரிவிடையே அதிருப்தி

இந்த துறைமுகம் வந்தால், தொழில்துறையில் பின்தங்கியுள்ள குமரி மாவட்டத்தில் ஏற்றுமதி தொழில் வளரும், 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணியிருந்த அம்மாவட்டத்தின் பிற பகுதி மக்கள், மீனவர்கள் போராட்டத்தால் அதிருப்தியிலுள்ளனர்.

மத சாயம்

கத்தோலிக்க மதத்தை சேர்ந்த மீனவர்களுக்கு, பிற ஜாதியை சேர்ந்த சிஎஸ்ஐ மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட சர்ச்சுகளிலுள்ள பாதிரியார்கள் மூலம், கோரிக்கைவிடுக்கப்பட்டு வருவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மடைமாற்றம்

அதேநேரம், துறைமுகம் தேவை என கருத்து கூறுவோரில் பெரும்பான்மையினர் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களாகும். துறைமுகத்தால் பாதிக்கப்படுவது மீனவர்கள், நன்மையடையப்போவது பிற மக்கள். விஷயம் இவ்வளவுதான் என்றபோதிலும், இது பாதிக்கப்படுவோரின் மதம் மற்றும் நன்மையடைவோரின் மதம் ஆகியவற்றுக்கு நடுவேயான மோதலாக உருமாற்றப்பட்டுக்கொண்டுள்ளது.

கூட்டு சதி

பாஜகவின் வானதி சீனிவாசன் இதுகுறித்து கூறுகையில், பாஜக செல்வாக்கு மிக்க குமரி மாவட்டத்தில், துறைமுகம் அமைக்கப்பட்டால், அது பாஜகவுக்கு மேலும் செல்வாக்கை அதிகரித்துவிடும் என்ற அச்சத்தில் திமுக-காங்கிரஸ் இணைந்து இதை தடுக்க நினைக்கிறது. கொழும்பு துறைமுகத்திற்கு மதிப்பு குறைந்துவிடும் என்பதாலும், காங்கிரசும், திமுகவும் இலங்கை ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

நேரடி குற்றச்சாட்டு

தேர்தல் நேரத்தில், குமரி மாவட்ட பாதிரியார்கள், காங்கிரஸ்-திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர். அதற்கு நன்றிக்கடனை இவ்விரு கட்சிகளும் இப்போது தீர்க்க தொடங்கியுள்ளன. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சூடு கிளம்பியுள்ளது

துறைமுகம் அமைக்கப்படுவது, மீனவர் பிரச்சினை என்பதை தாண்டி, மதமோதலாக உருமாறும் திசையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. பதவியை தூக்கி எறிந்துவிட்டாவது, துறைமுகத்தை அமைத்தே தீருவேன் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது, சூட்டை மேலும் ஏற்றியுள்ளது. கிறிஸ்தவ சபைகளின் நடவடிக்கையையும், பாஜகவின் நடவடிக்கையும் உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னெச்சரிக்கை

உடனடியாக இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து, மற்றொரு மண்டைக்காட்டு பாணி கலவரம் வெடிக்காமல் தடுக்க வேண்டும் என்பதே சமூக நலம் விரும்பிகள் கோரிக்கையாக உள்ளது.

English summary
Colachel harbour issue turn toward religious clash as hindus and Christians locks horns with each other.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X