• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிஸ்டம் சரியாகி விட்டதா ரஜினி ?

By S.d. Lakshmanan
|

- மணா

'' தமிழ்நாட்டில் 'சிஸ்டம்' சரியில்லை''

-என்று ரஜினி சொன்னதை அவ்வளவு சுலபத்தில் இங்குள்ள ஊடகங்களும் மறந்திருக்காது. பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளத் தடுமாறுகிறவர்கள் கூட மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் நமக்கு வரும் நியாயமான சந்தேகம். தான் அன்றைக்குச் சொன்னதை ரஜினியே மறந்துவிட்டாரா என்பது தான்.

சரி, அதை விடுங்கள்.

அண்மையில் தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு தானே பேசி விஷூவலாகப் பகிர்ந்து கொண்டபோது ரஜினி சொன்னதையாவது பார்ப்போம்.

 Columnist Manaas Article on Rajinikanth

அதில் துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தார். காவல்துறையைக் கடுமையாகக் கண்டித்தார். மிருகத்தனமான செயல் என்றார். தமிழக அரசையும் இறுதியில் கண்டித்திருந்தார்.

இதையும் அவருடைய ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

காவிரிப்பிரச்சினை குறித்து மக்கள்நீதி மய்யத் தலைவரான கமல்ஹாசன் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பற்றி ரஜினியிடம் ஊடகம் சார்ந்தவர்கள் கேள்வி கேட்டபோது '' நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவே இல்லையே'' என்று சொல்லிச் சிரித்துத் தான் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை விளக்கினார்.

சில நாட்களில் 'காலா'' படத்திற்கான வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. படத்திற்கான ட்ரெய்லர்கள் ஏகப்பட்ட அளவில் பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தன.

இந்த நிலையில் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல ரஜினி போகிறார் என்று ஃப்ளாஷ் செய்திகள் வெளிவந்தன.

 Columnist Manaas Article on Rajinikanth

தூத்துக்குடிக்குப் போனார். மக்கள் திரளுக்கிடையில் திணறிப் பாதிக்கப்பட்ட சிலரைச் சந்தித்தார். சிலருக்கு நிவாரண நிதியைக் கொடுத்தார். சுற்றிலும் வெப்பம் தகித்த நிலையில் மனப் பாரத்துடன் அதைவிடச் சூடாகப் பேட்டியும் கொடுத்தார்.

நல்ல காரியத்திற்க்காக நூறுநாட்கள் போராடியதாகச் சொன்னார். விஷக்கிருமிகளும், சமூக விரோதிகளும் போராட்டத்தில் நுழைந்துவிட்டதாகச் சொன்னார். பொதுமக்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார். அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டினார். அவரைப் பின்பற்றி இப்போது ஆட்சி செய்கிறவர்கள் அடக்க வேண்டும் என்றார். ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்காது என்கிற உறுதியைக் கொடுத்தார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயிருக்கிறது. இருந்தும் தமிழக முதல்வர் ராஜினாமா செய்யக் கோருவது சரியில்லை. அரசு நியமித்திருக்கிற விசாரணைக் கமிஷனின் மீது நம்பிக்கை இல்லை என்றவர் சென்னைக்கு வந்திறங்கிய பிறகு விமான நிலையத்தில் பேசியது தான் இன்னும் உச்சம்.

சமூக விரோதிகள் யார் என்பது தனக்குத் தெரியும் என்றவர் காவல்துறைக்கு முழுமையாகப் பரிந்து வாதாடினார். தமிழகத்தில் எடுத்த்தற்கெல்லாம் போராடினால் நாடே சுடுகாடாகிவிடும் என்றார் ஆவேசத்துடன்.

 Columnist Manaas Article on Rajinikanth

சில நாட்களுக்கு முன்பு இதே காவல்துறையைத் தானே கண்டித்தார். பல மாதங்களுக்கு முன்பு இதே அரசைத் தானே '' சிஸ்டம் சரியில்லை'' என்றவர் அதே அரசு ''ராஜினாமா செய்யக்கூடாது'' என்று சொல்கிறாரே என்கிற குழப்பத்தில் ஊடகத்தினரும், பார்த்துக் கொண்டிருந்த பொது மக்களும் சற்று அதிர்ந்திருக்க வேண்டும்.

எது ரஜினியின் அசலான முகம்? எது அவருடைய நிஜமான குரல்?- என்கிற கேள்விகளும் பலருக்கு எழுந்திருக்கலாம். யாருக்கு ஆறுதல் சொல்ல தூத்துக்குடிக்கு ரஜினி போனார் என்கிற மங்கலான கேள்வியும் ஒருவேளை மனதில் எதிரொலித்திருக்கலாம்.

தூத்துக்குடியில் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட இளைஞர் கேட்ட எளிமையான கேள்விகள் :

'' நீங்கள் யார்?''

'' 108 நாட்களாக சென்னையிலிருந்து ஏன் இங்கு வரவில்லை?''

இந்தக் கேள்விகளுக்கான பதில் ரஜினியிடம் இல்லை.

 Columnist Manaas Article on Rajinikanth

ஏதோ தமிழகத்தில் தொழில் துவங்கவே இனி அச்சம் உருவாகும், பலருக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து போய்விடும் என்றெல்லாம் சொல்லியிருக்கிற ரஜினி பார்க்கத் தவறியிருக்கிற முக்கியமான விஷயம்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் சரி, திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்திலும் சரி, தமிழகத்தில் எத்தனையை தொழில்கள் துவக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. தங்கள் உயிருக்கே உலை வைக்கக் கூடிய அளவுக்கு சில தொழிற்சாலைகளை மாறிவருவதைத் தாங்கள் அனுபவப் பூர்வமாக உயிர்களை இழந்து, பாதிப்புகளை உணர்ந்த நிலையில் தான்- அவை உருவாகக் காரணமான தொழிற்சாலைகளை எதிர்க்கிறார்கள். ரஜினி சொல்கிற மாதிரி எந்த விஷமிகளின் தூண்டுதலினாலோ அவர்கள் போராட்டத்தைத் துவக்கவில்லை.

தூத்துக்குடி மக்கள் இதே ஸடெர்லைட் ஆலையை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டத்தை நடத்தியபோது பல அரசியல்கட்சித்தலைவர்கள் அங்கு போனார்கள். கமல், சீமான், சரத்குமார் உட்படப் பலர் போனார்கள். பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளைப் பார்த்தார்கள். மாசடைந்த கலங்கலான குடிநீரைக் குடித்துப் பார்த்தார்கள்.

பக்கத்தில் உள்ள சில கிராமங்களுக்குப் போன கமல் குழந்தைகளுக்கு வருகிற நோய்களைப் பட்டியலிட்டு '' மக்களின் உயிரைப் பாதிக்கும் எந்த்த் தொழிலும் தேவையில்லை.. இந்தப் போராட்டத்தை ஒடுக்க 600கோடி ரூபாய் வரை ஆலை நிர்வாகத்தால் பேரம் பேசப்பட்டிருக்கிறது'' என்று தோல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கையில் வைத்துக் கொண்டு ஊடகங்களுக்கு முன்னால் பேசினார் கமல்.

தூத்துக்குடி மக்களின் பிரதிநிதியாக ஒரு இளைஞன் கேள்வி கேட்டதைப் போல, அன்றைக்கே ரஜினி தூத்துக்குடிக்கு வந்திருந்து, மக்களிடம் பேசி, போராட்டத்திற்கான மூல காரணத்தை அறிய முற்பட்டிருந்தால்- இன்றைக்கு- போராட்டம் பற்றிய குழப்பமான வியாக்கியானம் சொல்லும் நிலைக்கு ரஜினி வந்திருக்க வேண்டியிருக்காது.

நெடுவாசலிலோ,போராட்டம் நடக்கும் இடங்களில் - தொழிற்சாலைகள் வெறுமனே இயங்குவதைத் தடுக்கவில்லை. அதன் பாதிப்பை உணர்ந்தே இன்னும் கொஞ்சம் பின்னகர்ந்து - ஒரு ஃபிளாஷ்பேக்- போனால் உங்கள் வார்த்தைகள் இன்னும் நினைவில் நிற்கின்றன.

''அரசியல் என்கிற விஷ ஆயுதம் உங்களையும், எங்களையும் பிரித்துவிடக்கூடாது''- இது ரசிகர்களைப் பார்த்து ஒரு காலத்தில் ரஜினி உருக்கமாக வைத்த வேண்டுகோள்.

கோவையில் குண்டு வெடிப்பு நடந்தபோது அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டபோது '' வெளிநாட்டுச் சதியே காரணம். அது எந்த நாடு என்று சொல்லத் தேவையில்லை'' என்றவர் '' குண்டு வெடிப்புகள் தொடர்ந்தால் கலைஞர் தன்மானத் தமிழர், அவரே ராஜினாமா செய்வார்'' என்றார் இதே ரஜினி.

அப்போது ரஜினி சொன்ன ஒரு வார்த்தை '' நான் ஆன்மீகவாதி. மதவாதி அல்ல''.

ஜெயலலிதாவின் துணிச்சலை இப்போது வியந்து பாராட்டும் ரஜினி இதே ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது பேசியதை மறந்துவிட முடியுமா?

ஜெயலலிதாவை மேடையில் அமர்ந்த நிலையில் '' தப்பு யார் பண்ணினாலும் தப்புன்னு சொல்வேன். அது குடிமகனோட உரிமை'' என்று பேசிய ரஜினி அவருடைய ஆட்சிக்காலத்திலும் ''வெடிகுண்டுக் கலாச்சாரத்திற்கு 'எதிராகக் குரல் கொடுத்து ஊடகங்களுக்குப் பரபரப்பான தீனியைக் கொடுத்தார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது ரஜினி பேசிய பஞ்ச் வசனம் . '' இந்தத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டைக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது''.

அதே ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வந்தபிறகு பாராட்டிப் பேசவும் செய்திருக்கிறார். அண்மையில் சென்னையில் நடந்த எம்..ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் '' எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தன்னால் தர முடியும்'' என்றும் பேசியிருக்கிறார்.

ரஜினியின் ரசிகர்கள் தங்கள் தலைவர் சொல்வதைக் கேட்டு அப்படியே தங்கள் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கிறார்களா? 2004 ல் தன்னைக் கடுமையாக விமர்சித்த பா.ம.க.வைத் தோற்கடிக்க வைக்க வேண்டும் என்று ரஜினி கேட்டுக் கொண்டார்.

ஆனால் அவருடைய வேண்டுகோள் பலிக்கவில்லை.

போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் பா.ம.க. வெற்றி பெற்றது.

இதற்கும் முன்னாலும் ஒரு ஃப்ளாஷ்பேக் போகலாம்.

(நாளையும் தொடரும்)

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Here is the Columnist Manaa's Article on Rajinikanth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X