• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெர்சல், இரும்புத்திரையைவிட காரமாக பாஜகவை விமர்சித்தும்.. காலா மட்டும் தப்பியது எப்படி?

By S.d. Lakshmanan
|
  அவர்கள் கண்ணில் காலா படவில்லையா?- வீடியோ

  - மணா

  '’காலா’’ படத்தைப் பார்த்த பலருக்கும் ஒரு வியப்பு இருந்திருக்கும்.

  காவிமயத்தை வெளிப்படையாக எதிர்க்கும் காட்சிகளுக்கு, மக்கள் போராட்டத்தைக் காவல்துறை அடக்கி ஒடுக்கும் காட்சிகளுக்கு, ராமனை விமர்சித்து ராவணணை அரவணைக்கும் காட்சிகளுக்கு, உண்மையை அம்பலப்படுத்த நினைக்கும் ஊடகத்தைத் தாக்கும் காட்சிகளுக்கு எப்படி சென்ஸார் அனுமதி கொடுத்தது?

   Columnist Manaas Manaas Article on Kaala Movie

  அதைவிடத் தற்போது சென்ஸாரை விடப் பலம் பொருந்தியதாக இருக்கிற மத,சாதீய ரீதியான அமைப்புகளின் சென்ஸாரின் கெடுபிடியிலிருந்து 'காலா’’ எப்படித் தப்பித்தது என்கிற கேள்வியும் இயல்பாக எழலாம்.

  ஏன் இந்தக் கேள்வி வருகிறது?

  விஜய் நடித்த '’ மெர்ஸல்’’ படத்தில் ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கும், இலவசத் தூண்டில்களுக்கும், பண மதிப்பிழப்புக்கும் எதிரான வசனங்கள் இருந்தன்.

  '’ ஏழு சதவிகித் ஜி.எஸ்.டி வாங்குற சிங்கப்பூரில் மக்களுக்கு இலவசமா மருத்துவம் தர்றப்போ, 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி.வாங்குற நம்ம அரசாங்கத்தால் ஏன் மருத்துவத்தை இலவசமாகத் தர முடியவில்லை?’’

  '’ ஜனங்க நோயைப் பார்த்துப் பயப்படுவது இல்லை. ஆனால் கவர்மென்ட் ஆஸ்பிட்டலைப் பார்த்துப் பயப்படுறாங்க..’’

  இது படத்தில் கதாநாயகனான விஜய் கேட்கும் கேள்விகள்.

  '’ நியூ இந்தியா ஒன்லி டிஜிட்டல் மண். இந்தியாவில் யார் கிட்டேயும் பணம் கிடையாது. பூராவுமே க்யூ தான்’’ என்று வெறுங்கையை வாயருகில் கொண்டு போவார் வடிவேலு.

  தியேட்டரில் அந்தக் காட்சிகளில் விசில் பறக்கும்.

   Columnist Manaas Manaas Article on Kaala Movie

  ஆனால் மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிற பா.ஜ.க.வினர் மெர்சலுக்கு மகா குடைச்சல் கொடுத்தார்கள். விஜயின் அசல் பெயரை எல்லாம் மோப்பம் பிடித்து ஆராய்ந்து எச்சரிக்கை விடுத்தார்கள்.

  அதை விடுங்கள். சமீபத்தில் விஷால் நடித்து வெளியாகி இருக்கும் '’ இரும்புத்திரை’’ படத்தில் மத்திய அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் '’பணமில்லா பரிவர்த்தனை’’ எந்த லட்சணத்தில் யாரோ '’கொள்ளை’யடித்து, வங்கியில் பணம் இருந்தும் அதைப்பறிகொடுத்துப் பரிதவிக்கிற சராசரி மக்களின் தவிப்பைக் காட்சிப்படுத்தியிருந்தது.

  நவீனத் தொழில்நுட்பத்தைத் துல்லியமாக அறிந்தவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதைக் காட்சிமொழியில் சொன்னபோது அந்தப் படத்திற்கும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு. அவரவர் கையில் உரிமையுடன் வைத்திருக்கிற செல்பேசியை வைத்து அவர்களுடைய நடமாட்டத்தையும், அந்தரங்க உரையாடலைக்கூட எப்படிப்பதிவு செய்ய முடியும் என்பதைக் காட்டி எச்சரிக்கை விடுத்த அந்தப் படம் வெளிவந்தபோதும் சென்னையில் இந்துமதவாத அமைப்புகள் அந்தப் படத்தை எதிர்த்தார்கள். அதனால் '’இரும்புத்திரை’’ வெளியிட்ட திரையரங்குகளின் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

  '’விஸ்வரூபம்’’ படத்தின் முதல்பாகம் வெளியிட்டப்பட்டபோது கமல்ஹாசனுக்கு எதிராகச் சில மதவாத அமைப்புகள் எதிர்ப்புக்குரல் எழுப்பியதும், கமல் அப்போதைய பேட்டிகளின் போது கமல் அளித்த பதற்றமான பதில்களும் நினைவுக்கு வரலாம். அவருடைய இன்னொரு படத்தின் தலைப்புக்கு எதிராக உருவான சர்ச்சைக்குப் பிறகு மனத்தாங்கலுடன் படத்தின் பெயரை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் கமலுக்கு ஏற்பட்டது.படம் வெளிவருவதற்கு முன்பு சென்ஸாருக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதைப் போலவே மதரீதியான அமைப்புகளிடம் படத்தைக் காண்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

  கமலின் பல படங்களுக்கு இத்தகைய கண்டனங்கள் எழுவது கூட வாடிக்கையான ஒன்றைப் போல ஆகிவிட்டது.

  மணிரத்தினம் தான் இயக்கிய படமான '’பம்பாய்’’ படத்தை இந்துமத அடிப்படைவாதிகளிடம் திரையிட்டுக் காண்பித்து அனுமதி வாங்க வேண்டியிருந்தது. தமிழகத்தில் குறிப்பிட்ட சாதீய அமைப்புகளின் நெருக்கடியை சினிமாவை இயக்குகிற பலரும் சந்திக்க வேண்டியிருந்தது. தமிழ்த் தேசிய அமைப்புகளின் ஒப்புதலைப் பெற வேண்டியிருந்தது.

  ஆக- வெளிப்படையான சென்ஸார் போர்டில் – மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும், மற்றவர்களும் இருப்பார்கள். சென்ஸார் போர்டின் விதிமுறைகள் காலத்திற்கேற்றபடி சில மாறுதல்களைக் கொண்டிருந்தாலும், எதை அனுமதிப்பது என்பதை விட, எதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவே எப்போதும் இருந்திருக்கிறது சென்ஸார் என்கிற தணிக்கைக்குழு.

  பல சமயங்களில் தணிக்கைக்குழு அனுமதித்த ஒரு படத்திற்கு எதிர்ப்பு வரும்பட்சத்தில் மீண்டும் அரசு தலையிட்டு அந்தப் படத்தை மறுபரிசீலனை செய்த சம்பவங்களும் இங்கு நடந்திருக்கின்றன. அதனால் சில படங்கள் திரைக்கு வராமலேயே போயிருக்கின்றன.

  இவை நமக்கு முன்னால் இதே திரைத்துறையில் நடந்தவை தான்.

  இந்தக் கோணத்தில் பார்த்தால்- '’காலா’’ என்கிற தன்னுடைய மருமகன் தனுஷ் தயாரித்த படத்தில் இடம் பெற்றிருக்கும் சில காட்சிகள் அரசியல் சர்ச்சைகளை எழுப்பும் என்பது இவ்வளவு நீண்ட திரையுலக அனுபவத்தில் ரஜினிக்குத் தெரிந்திருக்காதா? யாரிடம் இருந்து குறிப்பாக எதிர்ப்பு வரும் என்பதையும் அவர் அறிந்திருக்க மாட்டாரா?

  படம் வெளிவருவதற்கு முன்னால் அவருடைய திடீர் தூத்துக்குடி வருகையும், பேச்சும் அதில் தொனித்த சிலருக்கான ஆதரவு நிலைப்பாடும் காலா- படத்திற்கு வந்திருக்க வேண்டிய எதிர்ப்பை இன்னொரு விதத்தில் தவிர்த்திருக்கின்றன. தமிழக பா.ஜ.க. தலைவர் காலா படத்தைப் பார்த்துவிட்டு சமூகப்பிரச்சினைகளைச் சொல்லும் படம் என்று நற்சான்றிதழ் கொடுக்கிறார்.

  காலா படத்தின் நாயகனான ரஜினியை விட, நிஜ வாழ்வில் ரஜினி தங்களுக்கு ஆதரவான நிலைப்பாடோடு இருக்கிறார் என்கிற எண்ணம் தான் '’காலா’’வுக்கு முன் மதவாத அமைப்புகள மௌனமாக்கி இருக்கிறது என்றும் சொல்லலாம்.

  இல்லை என்றால் மெர்ஸலுக்கும், இரும்புத்திரைக்கும் எதிராகக் குரல் கொடுத்தவர்கள் இப்போது ஏன் காவி அரசியல் விமர்சனத்திற்கு உள்ளான திரைப்படத்திற்குச் சத்தம் காட்டாமல் இருக்கிறார்கள்?

  இங்கு சில அமைப்புகள் எதிர்ப்புக்குரல் கொடுப்பதின் பின்னணியிலும் உள் அரசியல் இருக்கிறது.

  சில அமைப்புகள் சத்தம் கொடுக்காமல் – எந்த எதிர்வினையையும் வழக்கம் போல் ஆற்றாமல் இருக்கிறார்கள் என்பதிலும்- ஓர் உள் அரசியல் இருக்கத்தான் செய்கிறது.

  காலா-படம் வெளிப்படையாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் கருத்துக்களைச் சொல்லும் படமாக இருந்தாலும், இந்தப் படத்தில் ரஜினி நடிக்காமல் வேறு யாராவது நடித்திருந்தால் சர்ச்சைகளுக்கு ஆட்படாமல் படம் வெளியாகி இருக்குமா என்பது சந்தேகம் தான்.

  ரஜினி நடித்ததோடு, அவருடைய உறவினரின் சொந்தப்படமாகவும் '’காலா’’ இருப்பதால் தான் மேலிடத்தின் மேலான அனுமதியும் கிடைத்திருக்கிறது. பாராட்டும் கிடைத்திருக்கிறது.

  நாளைக்கு அரசியல்கட்சியைத்துவக்கி அது கிளைத்து அதிலிருந்து பழம் கிடைப்பதை விட, இன்றைக்கு வெளியாகிற '’காலா’’வுக்கு எந்தப் பிரச்சினையும் உருவாகி- தான் எதிர்பார்த்த வருமானம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்கிற எண்ணம் ரஜினிக்கு இருந்திருக்கலாம்.

  எது எப்படியிருந்தாலும்- வணிகரீதியான வெற்றியை ஓரளவு அடைந்திருப்பதன் மூலம்- இப்போதைக்கு ரஜினி படத்தில்- சமூகப் புரட்சியாளரைப் போன்ற முகமும், அசலாக மத்திய, மாநில அரசுகளுக்கு இணக்கம் காட்டுகிற ஒருவரைப் போன்ற முகமும் காட்டியிருப்பது- அவருக்குக் கிடைத்த வெற்றியாகக் கூடத் தற்காலிகமாகப் பார்க்கலாம்.

  எழுத்தாளரும், சில திரைப்படங்களை இயக்கியவருமான ஜெயகாந்தன் (கல்பனா-இதழ் –ஜூன் 1979) தணிக்கைக்குழுவைப் பற்றிச் சொல்லியிருப்பது பொருத்தம்.

  '’சினிமா என்பது வெறும் கதை சொல்லிக் கருவியல்ல. ஓர் இலக்கியம் போலவே சர்வாம்சம் பொருந்தியது சினிமா. அரசியல் பிரச்சாரத்திற்காகவும், கருத்துரீதியான சமுதாயப் போராட்டங்களுக்காகவும் இந்தக்கருவியைப் பயன்படுத்துவதற்குத் தணிக்கைக்குழுச் சட்டங்கள் தடையாக இருக்கின்றன.நேரடி அரசியல் கருத்துக்கள்,காட்சிகள் வெட்டப்படுகின்றன அல்லவா?’’

  ( நாளையும் தொடரும்)

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Columnist Manaa's Article on Rajinikanth's Kaala Movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more