For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கால் பத்து பைசா பயன் கிடையாது : ராமதாஸ் காட்டம்

தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கால் பத்து பைசாக்கு கூட பயன் கிடையாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கால் தமிழகத்திற்கு பத்து பைசாக்கு கூட பயன் கிடையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கால், தமிழகத்துக்கு பத்து பைசாக்குக் கூட பயன் கிடைக்காது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு துரோகம்

தமிழ்நாட்டிற்கு துரோகம்

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தவறிவிட்ட நிலையில், அதற்கான தமிழக அரசின் எதிர்வினை மண்புழுவை விட மோசமாக அமைந்திருக்கிறது. மண்புழு கூட சீண்டும் போது சீறும் என்பார்கள். ஆனால், தமிழக அரசோ தமிழ்நாட்டிற்கு இவ்வளவு துரோகம் இழைக்கப்பட்ட பிறகும் சலனமின்றி அடிமை இராஜ்யத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முதுகெலும்பற்ற அரசு

முதுகெலும்பற்ற அரசு

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதற்கான கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிந்த பிறகும் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில், அனைத்துக் கட்சிகளையும் திரட்டி, மத்திய அரசை மிரட்டும் வகையில் ஒரு போராட்டத்தை அறிவித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதைத் தெரிவிப்பதற்கான துணிவு கூட இந்த முதுகெலும்பற்ற அரசுக்கு இல்லை.

விசாரணைக்கு கூட வராது

விசாரணைக்கு கூட வராது

நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவதால் தமிழகத்திற்கு ஏதேனும் பயன் கிடைக்குமா? என்றால் பத்து பைசாவுக்கு கூட பயன் கிடைக்காது என்பது தான் உண்மை. ஒரு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது தீர்ப்பு வாங்கியவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். மாறாக, தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறி மீண்டும் நீதிமன்றத்துக்கே சென்று அவமதிப்பு வழக்குத் தொடர்வது தோல்வியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படும். அதுமட்டுமின்றி, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் தந்திரமாக விளக்கம் கோரும் மனுவை தாக்கல் செய்து விட்டதால் அதன் மீதான விசாரணை முடியும் வரை தமிழக அரசின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது. இது தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்கு கிடைக்கும் மரியாதை ஆகும்.

அரசியல் ரீதியான ஆயுதம்

அரசியல் ரீதியான ஆயுதம்

இது ஒருபுறமிருக்க சட்டம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மட்டுமே சட்டப்படி தீர்வு காண முடியும். அரசியல் சார்ந்த சிக்கல்களுக்கு அரசியல்ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும். காவிரிப் பிரச்சினை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த சிக்கல் ஆகும். அரசியல் காரணங்களுக்காகத் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மத்திய அரசு மறுக்கிறது. இந்தப் பிரச்சினையை அரசியல்ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள முடியும் எனும் நிலையில், அதற்கான ஆயுதத்தை கையில் எடுக்க பினாமி ஆட்சியாளர்கள் தயங்குவது ஏன்? என்ற வினாவுக்கான விடை அனைவருக்கும் தெரிந்தது தான்.

தமிழக மக்களை ஏமாற்ற முடியாது

தமிழக மக்களை ஏமாற்ற முடியாது

இதையெல்லாம் மறைப்பதற்காகத் தான் வரும் 2ம் தேதி உண்ணாநிலைப் போராட்டத்தை பினாமி அதிமுக அறிவித்துள்ளது. சட்டத்தை மதிக்காத மத்திய அரசுக்கு இது எந்த நெருக்கடியையும் தராது. இது அதிமுகவுக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி ஏமாற்றுவதைப் போன்று தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகத் தான் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை அதிமுக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நாடகத்துக்கு மயங்கி தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.

அடிமை அரசு தயாரா ?

அடிமை அரசு தயாரா ?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்த கெடு தான் முடிந்திருக்கிறதே தவிர, காவிரி மேலாண்மை வாரியத்தின் தேவை இன்னும் முடிவடையவில்லை. எனவே, மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அரசியல் இயக்கங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இந்தப் பொறுப்பை தமிழக அரசே ஏற்றுக் கொண்டால் போராட்டத்தின் வேகம் இன்னும் தீவிரமாக இருக்கும். தமிழகத்தை ஆளும் அடிமை அரசு அதற்கெல்லாம் தயாராக இல்லை என்பது தான் உண்மை.

அரசுக்கு விரைவில் தண்டனை

அரசுக்கு விரைவில் தண்டனை

தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரிப் பிரச்சினைக்காக உண்மையாக போராடாமல் உண்ணாவிரத நாடகங்களின் மூலம் காவிரிப் பிரச்சினையில் இழைத்த துரோகங்களை பினாமி அரசு மறைக்க முடியாது. இதற்கான தண்டனையை மக்கள் விரைவில் அளிப்பர் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
Contempt plea will do nothing useful says Ramadoss. PMK Founder Ramadoss says that, Tamilnadu Government's Contempt case on Central Government is not a wise act .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X