For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடரும் தமிழக அரசு அதிகாரிகள் தற்கொலை... ஏன்.. ஏன்.. ஏன்?

By Shankar
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்கொலைகளில் தமிழகம் இந்தியாவில் இரண்டாமிடம் வகித்து வரும் சூழ்நிலையில், மாநில அரசு அதிகாரிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

நான்கு நாட்களுக்கு முன்பு திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி ஆர்.விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தாண்டு துவக்கத்தில் திருநெல்வேலியில் தமிழக அரசின் வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம், அப்போதய மாநில வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவியைப் பறித்ததோடு அவரது கைதிலும் போய் முடிந்தது. அந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார். இந்த அதிர்ச்சியிலிருந்து தமிழக அரசு அதிகாரிகள் சற்றே மீண்டிருந்த சூழ்நிலையில் விஷ்ணுபிரியாவின் மரணம் நேர்மையை நேசிக்கும் அதிகாரிகளுக்கு இடியாய் வந்திறங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

Jaya-Vishnupriya

விஷ்ணுப்பிரியா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அதிலும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டில் பணி வாய்ப்புப் பெற்ற முதல் போலீஸ் அதிகாரி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு பெண் பட்டதாரி, டிஎஸ்பி பதவியை தனது திறமையால் பெற்று வந்திருக்கிறார். அவரது தற்கொலையை மற்ற தற்கொலைகளுடன் நிச்சயம் நாம் ஒப்பிட முடியாது.

விஷ்ணுப்ரியாவின் தற்கொலை பல முக்கியமான பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது. கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்து கொண்ட ஒரு தலித் இளைஞனின் மரணத்தை விசாரிக்கையில்தான் இந்த கொடூரத்தை விஷ்ணுபிரியா சந்திக்க நேர்ந்திருக்கிறது. வேண்டுமென்றே குற்றவாளிகளை நெருங்காமல், நன்கு திட்டமிட்டு விஷ்ணுபிரியா திசைமாற்றி விடப்பட்டிருக்கிறார். அப்பாவிகளைக் கைது செய்யும் படியும், அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும்படியும் விஷ்ணுபிரியா நிர்ப்பந்தம் செய்யப் பட்டிருக்கிறார்.

இவையெல்லாம் ஏதோ அரசல், புரசல்களாக வந்த செய்திகள் அல்ல. மாறாக விஷ்ணுபிரியாவின் தோழியும், அவரது பேட்ச்மேட்டும், தற்போது கீழக்கரையில் டிஎஸ்பி யாக பணியாற்றி வருபவருமான மஹேஸ்வரி ஊடகங்களுக்குச் சொல்லும் தகவல்களாகும்.

நாம் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது இதைத்தான். வழக்கமாக போலீஸ் அதிகாரி யாராவது தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது அவர்களுக்கு எதிராக யாராவது செயல்பட்டாலோ, போலீஸ் துறையானது ஒரே குரலில் பேசும். ஆனால் மஹேஸ்வரி தனது உற்ற தோழியின் மரணத்துக்கு போலீஸ் டிபார்ட்மெண்டுதான் காரணமென்று வெளிப்படையாகவே கூறுகிறார். இதனை மேற்கு மண்டல ஐஜி சங்கர் மறுக்கிறார். உள்நோக்கத்துடன் மஹேஸ்வரி பேசுவதாக ஐஜி சொல்லுகிறார். ஆனால் அரசு நிர்வாகமும், குறிப்பாக போலீஸ் டிபார்ட்மெண்டும் எப்படி செயற்படுகிறதென்ற குறைந்த பட்ச அறிவுள்ளவர்களுக்குக் கூட யார் சொல்லுவது சரி என்று தெரியும்.

தான் கூறும் வார்த்தைகளின் பார தூரமான விளைவுகள் பற்றி அறியாதவரல்ல மஹேஸ்வரி. ‘எவ்வளவுதான் துரத்தித் துரத்தி அடிப்பீர்கள்? முடியல சார், அவ என்ன சார் பாவம் பண்ணா? ஒரு சிங்கிள் டீ வாங்கி குடித்திருப்பாளா யாரிடமாவது? திருச்செங்கோட்டுக்கு போய் நீங்களே மக்களிடம் பேட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அவளது மரணத்துக்கு டிபார்ட்மெண்ட்தான் காரணம்... இதைச் சொல்லுவதனால் எனது வேலையே போனாலும் பரவாயில்லை. நாங்கள் என்ன வரி வசூல் செய்து தரும் ஏஜெண்டுகளா? முடியல சார்....' என்று தேம்பி தேம்பி அழுதுகொண்டே பேட்டிக் கொடுக்கிறார் மஹேஸ்வரி. இது எல்லா தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

பதவியிலிருக்கும் ஒரு பெண் டிஎஸ்பி இவ்வளவு தைரியமாக கூறுகிறாரென்றால், அது உண்மையைத் தவிர வேறெதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அப்பாவிகளை குண்டாஸில் போட நிர்ப்பந்தித்த எஸ்.பி., விஷ்ணுபிரியாவை ஒருமையிலும் திட்டியிருக்கிறார். இது போதாதென்று குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏடிஜிபி எச்சரித்திருக்கிறார். தூக்கில் தொங்குவதற்கு முன்பு அல்லது தூக்கில் தொங்கவிடப்படுவதற்கு முன்பு விஷ்ணுபிரியா கடைசியாக பேசியது மஹேஸ்வரியிடம்தான். முழு உண்மையும் மஹேஸ்வரிக்குத் தெரியும் என்பது யதார்த்தம்.

இந்த வழக்கு விசாரணையை தமிழக காவல்துறையின் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் ஜெயலலிதா உத்திரவிட்டிருக்கிறார். தமிழக காவல்துறையின் ஓரங்கமான சிபிசிஐடி உண்மையை வெளிக் கொணர முடியுமா என்பதுதான் கேள்வி. சிபிசிஐடிக்கு அந்த வல்லமை இப்போது உள்ளதா, இல்லையா என்பதல்ல விவகாரம். அதற்கான பரிபூரண சுதந்திரம் சிபிசிஐடி க்கு இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

ஏனெனில் விஷ்ணுப்ரியாவின் மரணத்துக்கு தமிழக காவல்துறைதான் காரணமென்று பதவியில் இருக்கும் ஒரு டிஎஸ்பி யே குற்றம் சாட்டியிருக்கும் சூழலில் யாரைக் காப்பாற்ற சிபிசிஐடி முயற்சிக்கும் என்பது குழந்தைக்கும் புரியக் கூடிய விஷயம்தான்.

அதனால்தான் எதிர்கட்சிகள் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது நீதி மன்ற விசாரணைக்கோ மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் கடந்த எட்டாண்டுகளில் 216 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் விஷ்ணுபிரியா விவகாரம் சற்றே வித்தியாசமானது. பணிச்சுமை அல்லது குடும்ப பிரச்சனைகள் காரணமாக போலீசார் தற்கொலை செய்து கொள்ளுவதென்பது வேறு, ஜாதி ரீதியிலான மரணங்களை விசாரிக்கும் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளுவதென்பது வேறு. விஷ்ணுபிரியாவின் மரணம், வெறும் பணிச்சுமையால் ஏற்பட்ட மரணம் மட்டுமல்ல. அவர் தலித் சமூகத்திலேயே, மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். ஒரு தலித் இளைஞனின் மரணத்தை - அது தற்கொலையா அல்லது கொலையா என்றே தெரியவில்லை - விசாரிக்கிறார். அப்போது ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் மரணமடைகிறார் என்றால் அதன் பரிமாணமே வேறு.

மேலும் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் மாநில அரசு அதிகாரிகள் சந்தித்து வரும் மன அழுத்தத்தை கணக்கில் கொண்டால்தான் விஷ்ணுபிரியாவின் மரணத்தின் உண்மையான கோணம் நமக்குப் புரியும்.

அமைச்சரின் நிர்ப்பந்ததுத்துக்கு அடிபணிய மறுத்து வேளாண்துறை உயரிதிகாரி தற்கொலை செய்து கொள்ளுகிறார். அந்த அமைச்சரே ராஜினாமா செய்து, பின்னர் கைதும் செய்யப்படுகிறார். மீடியாக்களுடன் பேசுவதற்கு எந்த அதிகாரியும் அனுமதிக்கப் படுவதில்லை. அரசுக்கென்று அதிகாரபூர்வ பேச்சாளர் (அஃபிஷியல் ஸ்போக்ஸ்மென்) இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். இந்த சூழ்நிலையில் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகும் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர்.

தேசீய குற்றப் புலனாய்வு ஆணையம் (என்சிஆர்பி) 216 தமிழக காவல்துறையினர் கடந்த எட்டாண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறது. ஆனால் இதில் டிஎஸ்பி மட்டத்திலான அதிகாரிகள் யாரும் இல்லை. இதுதான் கவனிக்கப் பட வேண்டியது. உயரதிகாரி ஒருவரே தற்கொலை செய்து கொள்ளுகிறாரென்றால் நிலவரம் எந்தளவுக்கு மோசமாக போய்க் கொண்டிருக்கிறதென்பதை புரிந்து கொள்ள லாம்.

எல்லா மாநிலங்களிலும் போலீஸ் துறையை உள்ளடக்கிய உள்துறைக்கு தனியாக ஒரு உள்துறை அமைச்சர் இருப்பார். ஆனால் தமிழகத்தில் கடந்த 48 ஆண்டுகளாக, அதாவது அண்ணா காலத்திலிருந்து முதலமைச்சர் வசம்தான் போலீஸ் இலாகாவும் இருந்து கொண்டிருக்கிறது. தற்போது போலீஸ் அமைச்சர் முதல்வர் ஜெயலலிதாதான். ஒரு பெண் ஆளும் மாநிலத்தில் ஒரு பெண் டிஎஸ்பி தற்கொலை செய்து கொள்ளுவதென்பது, ஏற்கக் கூடியது தானா? கேலிக் கூத்தல்லவா?

அதுவும் அந்த பெண் டிஎஸ்பி யின் தற்கொலைக்கு போலீஸ் துறையே காரணம் என்று பதவியிலிருக்கும் மற்றோர் பெண் டிஎஸ்பி வெளிப்படையாகக் கூறிய பின்னர், முதலமைச்சர் மெளனம் காக்கலாமா?

ஸ்கார்ட் லாண்டு யார்டுக்கு அடுத்து தாங்கள் தான் உலகின் சிறந்த போலீஸ் என்று சதா சர்வ காலமும் மார் தட்டிக் கொண்டிருக்கும் தமிழக காவல்துறை, இன்று தனது சொந்த அதிகாரி, அதுவும், சமூகத்தின் அடித்தட்டிலிருந்து வந்த ஒரு பெண் அதிகாரியின் மரணத்தில் முகத்தில் கரியை அள்ளிப் பூசிக் கொண்டு நிற்கிறது. ஸ்கார்ட்லாண்டு யார்டு போலீசில் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளுவதில்லை. காரணம் அவர்கள் மேற்கத்திய நாகரிகத்தின் வார்ப்பு மட்டுமல்ல, அவர்கள் நிலப்பிரபுத்துவ மனப்பான்மையிலிருந்தும், பழக்க வழக்கங்களிலிருந்தும் என்றோ விடுபட்டு விட்டவர்கள். ஆனால் இன்று வரையில் தமிழக போலீசில் ஆர்டர்லி முறை இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடைசியாக வந்த செய்தி, பொட்டு சுரேஷ் கொலையில் மூன்றாண்டுகளாக தேடப் பட்ட அட்டாக் பாண்டி கைது செய்யப் பட்டு விட்டாரென்பது. இது விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்திலிருந்து மீடியாக்களின் கவனத்தை திசை திருப்பவா என்பது ஒதுக்கித் தள்ள முடியாத கோணம்தான்.

தமிழக சட்டமன்றத்தில் விஷ்ணுபிரியா விவகாரத்தை எழுப்ப எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்து பார்த்தால் விஷ்ணுப்ரியா விவகாரத்தில் மறைப்பதற்கும், உண்மையை புதைப்பதற்கும், உயர் அதிகார மையங்களில் உள்ளவர்களே பகீரதப் பிரயத்தனம் செய்வது தெளிவாகவே தெரிகிறது

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்பதை அதிகார (போதை) த்தில் உள்ளோர் உணர்வது காலத்தின் கட்டாயம்!

English summary
Columnist R Mani analyses the reasons behind the recent suicides of Tamil Nadu govt officials including DSP Vishnupriya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X