For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்னிப்பு என்பது உருது சொல்லா? சமூக வலைதளங்களில் வைரலாகும் விவாதம்

மன்னிப்பு உருது சொல்லா? தமிழா? என்பது தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மன்னிப்பு என்பது உருது சொல்லா? என்பது தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாளில் மன்னிப்பு என்பது எந்த மொழிச் சொல் என கேட்கப்பட்டிருந்தது. பாடப்புத்தகங்களில் மன்னிப்பு என்பது உருது மொழிச் சொல் என இடம் பெற்றுள்ளது.

இதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. உருது மொழியில் மாஃப் என்றுதான் சொல்வார்கள். மன்னிப்பு என்பது தமிழ்ச் சொல்தான் என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

 A controversy erupts over TNPSC Question

ஃபேஸ்புக்கில் நாக இளங்கோவன் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல்தான் என வலியுறுத்தியுள்ளார். அவரது பதிவு:

ன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது உருதுச்சொல் என்றும் கேலியொன்று, முகநூலிலும் வாட்சப்பிலும் வேகமாக உலவுகின்றது.

மன், மன்னு, மன்பதை, மன்னன் போன்ற உயர்ந்த சொற்கள் மன் என்ற சொல்லிலிருந்து கிளைப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். மன்றுதல், மன்றித்தல் என்ற சொற்களை ஊன்றிக்காண இருக்கிறது.

மன்றுதல் என்றால், கடுமையான தண்டனை தராமல், தண்டம் கட்டச்சொல்லி விடுதல்.

பார்க்க: http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.10:1:2813.tamillex

"மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்
கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினால்......"
(திருமுறை-4, பூந்துருத்தி பதிகம் - 88)

மன்றியுந் நின்ற மதிலர் என்றால் "போய்த்தொலை என்று கண்டித்து விடப்பட்ட மதிலர் போகாமல் நின்றார்" என்று பொருள்.

அப்படி போய்த்தொலைக என்று விட்டும் போகாமல், மல்லுக்கட்டிய மதிலரை, மாய்த்தே விடவேண்டும் என்று சினந்து மாய்த்த சிவபெருமான்" .... என்பது இங்கு பொருளாகும்.

அதேபோல,

"கன்றித்தன் கண் சிவந்து கயிலை நன்மலையை யோடி
வென்றித்தன் கைத்தலத்தாலெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்;
மன்றித்தான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை யன்றே"
(திருமுறை-4, கயிலாயம் - 47 - 5)

இராவணன், பேராசை கொண்டு கயிலை மலையை பெயர்க்க, உமை அஞ்ச, சிவபெருமான் தண்டிக்கிறார். எப்படியென்றால், தனது கால் விரலால் இராவணனை மெல்லியதாய் ஊன்றுகிறார். அதற்கே அவன் அலறி கதறுகிறான்.

அதோடு போய்த்தொலை என்று விட்டுவிடுகிறார் சிவன். அப்படியில்லாமல், கடுமையாக மன்றித்தே ஆகவேண்டும் என்று கருதியிருந்தால், இராவணன் பிழைத்தே இருக்கமாட்டான் என்பது பாடலின் பொருள். இங்கு கடுமையாக என்ற மறைவுப்பொருள், பதிகத்தின் பிற பாடல்களால் பெறப்படும்.

அதாவது, கடுமையாக வெறுத்து ஒதுக்காமல், அல்லது கடுமையான தண்டனையை தராமல், மன் (=பெருமையுடைய, வலிமை மிகுந்த) என்ற அந்த உயர்ந்த பண்புடைய பெரியோராய் நின்று குறைவான தண்டனை தருதல் என்பதற்கு மன்றுதல் என்று பொருள். "கடிது ஓச்சி, மெல்ல எறிக" என்ற வள்ளுவம் இங்கே ஒத்துப்பார்க்கத்தக்கது.

மன்றாடி கேட்டுக்கொள்ளுதல் என்றால், மன்றில் (மன்றத்தில்) பொதுவில் நின்று இறைஞ்சி கேட்டு மன்றி பெறுதல்.

10 ஆண்டு தண்டனை பெற்றவர்கள், 5 ஆண்டாக தண்டனை குறைக்கப்படுதலுக்கும் மன்றிப்பு, அல்லது பொதுமன்றிப்பு என்றுதானே பெயர்.

5 ஆண்டாக குறைக்கப்பட்டாலும் தண்டனை தண்டனைதானே. மன்னிப்பு கொடுத்தல் என்பது குற்றத்திற்கான குறைந்த தண்டனைதானே.

ஆகவே, மன்றிப்பு > மன்னிப்பு என திரிந்திருக்கிறது.

மன்றுதல் = மன்றித்தல் = மன்னித்தல்; மன்றிப்பு = மன்னிப்பு.

வழக்கில் றி-கரம் னி-கரமாக திரிவதுண்டு. காட்டாக பன்றி = பன்னி என்று பேச்சுவழக்கில் வருவதை சொல்லலாம்.

என்ன பன்றான் என்ற பேச்சு வழக்கு, என்ன பன்னான் என்று வருவதை ற-கரம் ன-கரமாக திரிவதற்கு சொல்லலாம்.

ஆகவே மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல்லே.

மீண்டும், மன் என்று தொடங்கும் பல உயர்ந்த சொற்களை வைத்துக்கொண்டு, மன்னிப்பு அயற்சொல் என்று சொல்லவே முடியாது.

இவ்வாறு நாக இளங்கோவன் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் இது தொடர்பாக பலரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

English summary
A debate on the word "Mannippu" is from Urdu or Tamil in Social Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X