For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செங்கத்தில் அப்பா, மகனை கொடூரமாக தாக்கிய 3 போலீஸாரை கைது செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அப்பா, மகனை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய 3 போலீசாரை உடனே பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர் ராஜா, அவரது மகன் சூர்யா ஆகிய இருவரையும் காட்டுமிராண்டித்தனமாக போலீஸார் தாக்கியுள்ளனர்.

Cops beat up father and son in public, Velmurugan contemns

செங்கம் நகர காவல் நிலையத்தின் தலைமைக் காவலர்கள் நம்மாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோர் அவர்களை தாக்கியுள்ள சம்பவம் நெஞ்சத்தை பதறவைக்கிறது. காவல்துறையினரின் இந்த கொடூரமான தாக்குதலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

செங்கம் தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோர் ஓட்டுநர் ராஜா, மனைவி உஷா, மகன் சூர்யாவுடன் செங்கத்துக்கு உறவினர் திருமணத்துக்கு நகை எடுப்பதற்காக வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செங்கம் நகர காவல் நிலையத்தின் தலைமைக் காவலர்கள் நம்மாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோர் ஆட்டோ ஓட்டுநர் ராஜாவிடம் விசாரித்து இருக்கின்றனர். அப்போது, நீங்க போங்க சார், நாங்க பார்த்துக் கொள்கிறோம் என ராஜா கூறியிருக்கிறார்.

உடனே எங்களையே எதிர்த்து பேசுகிறாயா? என ராஜாவை காட்டுமிராண்டித்தனமாக லத்தியால் காவலர்கள் மூவரும் தாக்கியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற ராஜாவின் மகன் சூர்யாவையும் காவலர்கள் தாக்கினர். காவல்துறையினரின் கால்களைப் பிடித்து ராஜாவின் மனைவி கெஞ்சியபோதும் அவரை எட்டி உதைத்துவிட்டு ஈவிரக்கமற்ற முறையில் கொடுந்தாக்கலை காவல்துறையினர் தொடர்ந்தனர்.

காவல்துறையினரின் இந்த அட்டூழிய காட்டுமிராண்டித்தனம் 20 நிமிடங்கள் நீடித்திருக்கிறது. நெஞ்சை பதற வைக்கும் இந்த கொடூர வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இந்த 3 காவலர்களும் பணியிடம் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த கொடுஞ்செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையினருக்கு 2 மடங்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது,

அதே நேரத்தில் காவல்துறையில் இருக்கும் இதுபோன்ற மாந்தநேயமற்றவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இந்த 3 காவலர்களை உடனே இடைநீக்கம் செய்து உரிய பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அத்துடன் பொதுமக்களிடம் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற மிகவும் அடிப்படையான பயிற்சியை அனைத்து காவலர்களுக்கும் அளிக்க வேண்டியது அவசியம் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilaga Valvurimai Katchi Chief Velmurugan urged TN Government that 3 cops would have to be suspended & arrested who beat up father and son in public at Chengam, Tiruvannamalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X