For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்னியர்களுக்கு எதிராக பகை உணர்வை தூண்டிவிடுகிறது மார்க்சிஸ்ட் கட்சி: ராமதாஸ் தாக்கு

By Siva
Google Oneindia Tamil News

CPM kindles hatred against Vanniyar community: Accuses Ramadoss
சென்னை: வன்னிய மக்களுக்கு எதிராக பகை உணர்வை தூண்டும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திண்டுக்கல் மாவட்டம், கரியாம்பட்டியில் நடந்த மோதல் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஆச்சிமுத்து உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நிலக்கோட்டை வட்டம் கரியாம்பட்டியில் வன்னிய சமுதாயத்தினரும், அதற்கடுத்த நடுப்பட்டியில் அருந்ததியர்களும் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் போதிலும் அவர்களுக்கிடையே எந்த மோதலும் ஏற்பட்டதில்லை. ஆனால், கடந்த ஜூலை மாதம் நடுப்பட்டியில் நடந்த கோயில் திருவிழாவில் வன்னியர்களை அருந்ததியினர் தாக்கினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலை காவல்துறை தலையிட்டு முடிவுக்குக் கொண்டு வந்தது. அதன்பின் 4 மாதங்களாக அப்பகுதியில் அமைதி நிலவியது.

கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கரியாம்பட்டி வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் வெளியில் சென்று திரும்பும்போது நடுப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் கிண்டல் செய்துள்ளனர். உடனடியாக அப்பெண் கொடுத்த தகவலின்படி அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் நடுப்பட்டி பகுதி மக்கள் திரண்டு வந்து கைது செய்யப்பட்டோரில் 3 பேரை மீட்டுச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கரியாம்பட்டி மக்கள் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது அவர்கள் மீது அருந்ததியர்கள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து தான் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வீடுகளை தாக்கிக் கொண்டு, வன்னியர்கள் சேதப்படுத்தியதாகக் கூறினால் அதிக அளவில் இழப்பீடு வழங்கப்படும் என்று சில சக்திகள் தூண்டியதால், தருமபுரி மற்றும் மரக்காணத்தில் நடந்தது போலவே இங்கும் அருந்ததியர்கள் தங்களது வீடுகளுக்கு முன் போடப்பட்டிருந்த கூறைகளை தீயிட்டு எரித்தனர்.

இதைத் தொடர்ந்து கரியாம்பட்டி கிராமத்திற்குள் நுழைந்த காவல் துறையினர் வீடுவீடாக புகுந்து அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத அரசு போக்குவரத்துக்கழகத்தின் முன்னாள் ஊழியர் ஆச்சிமுத்து என்பவரையும் காவல் துறையினர் தாக்கி கைது செய்தனர். இதில் ஆச்சிமுத்துவின் காதில் ரத்தம் கொட்டத் தொடங்கியதைப் பார்த்த காவல் துறையினர் அவரை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு ஓடி விட்டனர். உடல் முழுவதும் படுகாயங்களுடன் துடித்த ஆச்சிமுத்துவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் உடல்நிலை மோசமடைந்த அவர் நேற்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆச்சிமுத்துவின் சாவுக்கு காரணமானவர்களை தண்டிப்பதுடன், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

எந்தத் தவறும் செய்யாத 61 வன்னியர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் வன்னியர்களின் வீடுகளுக்குள் புகுந்து சோதனை என்ற பெயரில் காவல் துறையினர் அத்துமீறுவதும் தொடர்கிறது. காவல்துறையினரின் இந்த அணுகுமுறைக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை நிறுத்திக் கொள்வதுடன், வன்னியர் மீதான வழக்குகளையும் காவல்துறை திரும்பப்பெற வேண்டும்.

கரியாம்பட்டி பகுதியில் வன்னியர்-அருந்ததியர்களிடையே மோதல் ஏற்படுவதற்கு சில அரசியல் கட்சிகளும், தலித் அமைப்புகளும் தான் காரணமாகும். தங்களின் சுய நலத்திற்காக அருந்ததிய மக்களை வன்முறையில் ஈடுபடும்படி இந்த அமைப்புகள் தூண்டுகின்றன. பள்ளி மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டது தான் மோதலுக்கு காரணம் என்பதை மறைத்து, வன்னியர்கள் தான் வன்முறையில் ஈடுபட்டனர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அந்த கட்சிகள் முயலுகின்றன.

காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த ஆச்சிமுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், அவரது சாவுக்கு காரணமான காவல் துறையினரை கண்டிக்கவோ அல்லது அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவோ மார்க்சிஸ்ட் கட்சி முன்வரவில்லை. மாறாக அருந்ததியர்களின் வாக்குகளை வாங்கும் மலிவான நோக்கத்துடன் வன்னிய மக்களுக்கு எதிராக பகை உணர்வை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப்போக்கு கண்டிக்கத்தக்கது. முற்போக்கு வாதம் பேசும் இத்தகைய கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காக மக்களிடையே மோதலை தூண்டுவதை விடுத்து சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss accused CPM of kindling hatred against Vanniyar community in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X