• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

மறுபடியும் சி.எஸ்.கே: ஒரு ரசிகனின் டைரி

By BBC News தமிழ்
|

(இந்தியாவில், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமானது. இந்தத் தொடரில் முன்னணி அணியாகக் கருதப்படும் சி.எஸ்.கே எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில், அந்த அணியின் தீவிர ரசிகர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை, அத்தகைய ரசிகர்களில் ஒருவரான குமரன் குமணன் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இவை பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல.)

2003-ம் ஆண்டின் மத்தியில் இங்கிலாந்தில் கவுன்டி போட்டிகள் நடப்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதே போன்ற வடிவத்தில் இந்தியாவிலும் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்யத் துவங்கினேன். ஆனால் அதனை தீவிரமாக நான் யோசிக்கத் துவங்கவில்லை.

காலம் உருண்டோடியது. அது 2008-ம் ஆண்டு. அன்று, சென்னையில் ஒரு மூலையில் ஒரு காஃபி கோப்பையுடன் ஜந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ரசிகன் அமர்ந்திருந்த போது அவனுள் தோன்றிய சிந்தனை போலவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் வந்ததன் விளைவு ஐபிஎல்.

முதல் முதலாக நடந்த ஐபிஎல் போட்டியிலேயே அதிரடி காட்டினார் பிரெண்டன் மெக்கல்லம். பெங்களூர் அணியை மிக எளிதாக வென்றது கொல்கத்தா அணி. 20 ஓவர் போட்டியில் ஒரு வீரர் 150 ரன்களுக்கும் மேல் எடுத்ததை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

ஆனால் எனக்கு அந்தப் போட்டியைவிட அதிகம் நினைவில் நிற்பது, மெக்குல்லம் சதமடித்த முதல் ஐபிஎல் போட்டிக்கு மறுநாள் நடந்த போட்டியே. காரணம், அன்றைய நாளான ஏப்ரல் 19 ஆம் தேதியின் இரவில் தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் விளையாடியது .

கிரிக்கெட்டை ரசித்துப் பார்க்கும் அனைவரும் விரும்பும் மைக்கேல் ஹஸ்ஸி, அன்றைக்கு ஓர் அருமையான சதத்தைப் பதிவு செய்தார். அந்தச் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 240 ரன்களைத் தொட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். பச்சை நிற புற்களுடன் மொகாலி மைதானம்; தலைக்கு மேல் மின்னொளியோடு மின்னும் கறுமை நிற வானம்; அதோடு மட்டுமின்றி, அன்று முதல் மஞ்சள் நிறமும் கிரிக்கெட் ரசிகனான எனக்கு மறக்க முடியாத ஒன்றானது.

சிஎஸ்கேவுடன் எனக்கு அன்று துவங்கிய பந்தம், அந்த ஆண்டின் இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடி அந்த அணி தோற்ற பின்னரும் அந்த அணியின் முயற்சிக்காக பலத்த கைத்தட்டல் எழுப்பிய வரை தொடர்ந்தது. அன்று முதல் இன்று வரை ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து வருகிறேன்.

மாற்றுத்திறனாளியாகிய நான், எனது ஊன்றுகோலை பிடித்தபடி எழுந்து நின்று மரியாதை செய்யும் வழக்கம் தான் அது. எந்த போட்டியில் எவர் நன்றாக விளையாடினாலும் நான் அப்படி மரியாதை செய்யத் தவறுவதில்லை.

ஐபிஎல் இரண்டாவது சீசன் தென்னாப்பிரிக்காவில் நடந்தது ஒரு வருத்தம். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் போனது மற்றொரு சோகமாக அமைந்தது எனக்கு மேலும் அந்த தொடரில் சென்னைக்கு கிடைத்தது நான்காம் இடமே. இதுவரையில் ஐபிஎல் தொடர்களில் சென்னை அணியின் மோசமான நிலையும் அதுவே. ஐபிஎல்லில் சென்னை அணியின் ஆதிக்கத்தை இந்த ஒரு விஷயமே சொல்லிவிடும்.

முதல் இரண்டு தொடர்களில் விட்டதை மூன்றாம் மற்றும் நான்காம் தொடர்களில் பிடித்தது சென்னை அணி. ஆம், அடுத்தடுத்த ஆண்டுகளில் மும்பை மற்றும் பெங்களூரூ அணிகளை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதில் 2011 ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டி சென்னையிலேயே நிகழ்ந்ததும் அதில் சிஎஸ்கே வென்றதும் பெருமகிழ்ச்சி அளித்தது.

தொடர்புடைய செய்தி:

மக்கள் பிரச்சனைக்காக மைதானத்தில் நடைபெற்ற 5 முக்கிய போராட்டங்கள்

இரண்டு தொடர் வெற்றிகள் என்றாலும் அவற்றில் 2010 வெற்றி சிறப்பானது என்பேன். 2010-ல் நடந்த இறுதிப்போட்டியில் சிஎஸ்கே வென்ற விதமும், அந்த போட்டியில் பொல்லார்டை சிஎஸ்கே ஆட்டமிழக்கச் செய்த விதமும் முக்கியமானவை.

ஓரு அணித்தலைவராக தோனி டி20 போட்டிகளின் ஆழமும் அடர்த்தியும் உணர்ந்து செயல்பட்டதால் அதே ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கோப்பையும் சென்னை வசமானது .இங்கிருந்து தான் மற்ற அணிகளின் ரசிகர்கள் சி.எஸ்.கே அணிக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க தொடங்கினர். 2015க்கு பின் அது இன்னும் அதிகமானது .

2012 முதல் 2015 வரை எத்தனையோ பிரம்மாண்ட தருணங்கள் சிஎஸ்கே ரசிகனுக்கு வாய்த்தது. ஆனால் மூன்று இறுதிப்போட்டிகளில் ஒன்றில் கூட வெல்ல முடியவில்லையே என்ற வருத்தம் வாட்டியது .

அதிலும் 2014ல் மும்பையில் இரண்டாம் தகுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக ரெய்னா அடித்த 87 ரன்களில் ஒவ்வொன்றும் பொன்னுக்கு நிகர் என்பேன். நான் எழுந்து நின்ற மற்றொரு தருணம் அது. ஆனால் அப்போட்டியில் ரெய்னா விக்கெட் விழுந்ததும் நடந்த அதிர்ச்சி சரிவை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 2015 ஐபிஎல்லிலும் மும்பை அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது சென்னை அணி.

2015 பிற்பகுதியில் சென்னை ,ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த அணிகளின் வீரர்கள் மற்ற அணிகளில் விளையாடலாம் எனும் விஷயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படும் நிலையில். அணிகளை கலைக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனத்துக்கு கை மாற்றியிருக்கலாமே என்று நினைத்தேன். ஏனெனில் சென்னை சார்பில் எந்த அணியும் அந்த ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை

2016ல் புனே அணியில் தோனியை பார்க்க வேண்டிய நிலையில் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை. 2017 தொடரில் தோனியிடமிருந்து தலைமை பொறுப்பும் பறிக்கப்பட்டது.

2018-ல் மீண்டும் சிஎஸ்கே

முன்பிருந்த அணியை விட வயதான வீரர்கள் அதிகம் மற்றும் பெரிய அளவிலும் உடனடியாகவும் அதிரடி காட்டக்கூடிய வீரர்கள் இல்லை என்பதை தவிர பெரிய குறை ஏதும் காண முடியாத அணியாக இப்போதைய சென்னை அணி உள்ளது. முரளி விஜய் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி தந்துள்ளது. தென் ஆப்ரிக்க வீரரான லுங்கிடி சென்னை அணியில் விளையாட உள்ளார். அவரது பந்து வீச்சை காண காத்திருக்கிறேன்.

அணி கட்டமைப்பில் என்ன தான் மாற்றங்கள் இருந்தாலும் சரிவில் இருந்து மீளும் போர் குணத்தை களத்திலும் காட்டி அபாரமாக தொடரை தொடங்கி விட்டது சிஎஸ்கே. பிராவோ மற்றும் ஜாதவ் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் வாழ்க்கையை அமர்க்களமாக துவக்கி வைத்துள்ளனர்.

2016 ஆண்டு முதல் ஒரு ஐபிஎல் போட்டி கூட சென்னையில் நடைபெறவே இல்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். ரசிகர்கள் ஆரவாரத்துடன் காணப்படும் சேப்பாக்கம் மைதானம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆள் அரவமற்று இருந்தது.

இந்த ஆண்டு சென்னையில் போட்டி நடத்த அத்தனை ஏற்பாடுகளும் முடிந்த பின்னரும் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேறு சில காரணங்களை முன்வைத்து கோரிக்கை எழுப்பப்படுவதும், கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் சமூக அக்கறை இல்லாதவர்கள் போன்ற தோற்றம் கட்டமைக்கப்பட்டு வருவதும் என்னைப் போன்ற சிஎஸ்கே ரசிகர்களை மனமுடைய வைக்கும் செயல்கள்.

எனக்கு சில நல்ல நண்பர்களை தந்தது கிரிக்கெட்தான் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. டி20 கிரிக்கெட்டில் சி.எஸ்.கே உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்று. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆண்டாண்டு காலமாக ரசிகராக இருந்து வருவது ஓர் உணர்வும் கூட. அந்த உணர்வை கொண்டாடவும் சி.எஸ்.கே இம்முறை தொடரை வென்றால் மரியாதை செய்ய கம்பீரமாக எழுந்து நின்று பாராட்டவும் காத்திருக்கிறேன்.

பிற செய்திகள்:


BBC Tamil
English summary
அணி கட்டமைப்பில் என்ன தான் மாற்றங்கள் இருந்தாலும் சரிவில் இருந்து மீளும் போர் குணத்தை களத்திலும் காட்டி அபாரமாக தொடரை தொடங்கி விட்டது சிஎஸ்கே. பிராவோ மற்றும் ஜாதவ் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் வாழ்க்கையை அமர்க்களமாக துவக்கி வைத்துள்ளனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X