For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள வைகுண்டராஜன் ஜெ.வின் முக்கிய பினாமி!- ஆம் ஆத்மி கட்சி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள வைகுண்டராஜன் ஜெயலலிதாவின் முக்கிய பினாமி என்பதை சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பு நிரூபிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:

மைக்கேல் குன்ஹாவின் சொதுக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின் மூலமாக ஜெயலலிதாவின் ஒரு மிகப் பெரிய பினாமியாக தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள எஸ். வைகுண்டராஜன் உள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குன்ஹாவின் தீர்ப்பில் ஜெயலலிதா சொத்துக் குவிக்க 32 பினாமி நிறுவனங்களை உபயோகித்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமான நிறுவனமாக திகழ்வது ரிவர்வே அக்ரோ ப்ராடக்ஸ்ட் ப்ரைவேட் லிமிடெட் ஆகும்.

இந்த நிறுவனம் மூலம் ஜெயலலிதா 1,190 ஏக்கர் நிலம் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 1994ம் ஆண்டு வாங்கியுள்ளார். ஜெயலலிதா தனது ஊழல் பணத்தை இந்த நிறுவனத்திற்கு கொடுத்து அதன் மூலமாக வாங்கப்பட்டது என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.

இந்த 1190 ஏக்கர் நிலம் மற்றும் இப்படி சட்ட விரோதமாக வாங்கப்பட்ட அனைத்து நிலங்களையும் அரசுடமையாக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வெளியுலகத்துக்குத் தெரியாத உண்மை என்னவென்றால் இந்த ரிவர்வே அக்ரோ நிறுவனத்தின் இயக்குனராக 2003ம் ஆண்டு முதல் இன்று வரை இருப்பவர் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் எஸ்.வைகுண்டராஜன் தான் (ஆதாரம்- 1).

அவர் தான் இந்த 1190 ஏக்கர் நிலத்தை பாதுகாத்து வந்தவர். ஜெயலலிதா அவர்கள் வைகுண்டராஜனையும் அவரது நிறுவனமான விவி.மினரல்ஸையும் காப்பாற்ற கடந்த 1 வருடமாக போராடி வருகிறார்.

sasi

ஆகஸ்ட் 6, 2013 அன்று, தூத்துக்குடி ஆட்சியர் ஆஷிஷ் குமார் வைப்பார் பகுதியில் வி.வி.மினரல்ஸ் தாது மணல் அள்ளும் இடத்தைப் பார்வையிட்டார். அதில், வைகுண்டராடன் பெரிய அளவில் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது வெளிச்சமானது (தொடர்பான விவரம்- 2).

4 ஹெட்டேரில் மணல் அள்ள அனுமதி வாங்கிய இடத்தில் 30 ஹெக்டேரில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்காக ஆட்சியர் ஆஷிஷ் குமாரை உடனே ஆகஸ்ட் 8ம் தேதி இடமாற்றம் செய்தார் ஜெயலலிதா.

வைகுண்டராஜன் காப்பாற்றுவதற்காக மட்டும் ஜெயலலிதா இதைச் செய்யவில்லை என்பது குன்ஹாவின் தீர்பிபின் பிறகு தெளிவாகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் ஜெயலலிதா. ஆனால், அவரது அறிக்கையை வெளியிடாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார்.

20 நாட்களுக்கு முன் சகாயம் என்ற நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியை சட்ட விரோதமாக நடக்கும் மைனிங் பற்றி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. ஆனால், மீண்டும் வைகுண்டராஜனை காப்பாற்ற, சகாயத்தின் நியமனத்தை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்றம் இந்த மனுவை ஏற்கவில்லை.

இதையெல்லாம் பார்க்கும்போது ஜெயலலிதா இந்த அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்து வைகுண்டராஜனை காப்பாற்ற நினைப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அவர் தனக்கு ரிவர்வே போன்ற நிறுவனங்களில் பினாமியாக செயல்படுவதனால் தான் அவரை இந்த அளவுக்குக் காப்பாற்ற நினைக்கிறாரா அல்லது தாது மனல் கொள்ளையில் ஜெயலலிதாவுக்கும் பங்கு உண்டா?.

sagayam

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள தாது மணலின் மதிப்பு 2ஜி ஊழலைவிட 720 மடங்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி கடந்த ஏப்ரல் மாதமே ஜெயலலிதாவுக்கும் வைகுண்டராஜனுக்கும் உள்ள பணப் பரிமாற்றங்களை வெளிக்கொண்டு வந்தது.

சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனத்தில் 2009ம் வரை 87% பங்குகளை வைகுண்டராஜனும் அவரது குடும்பத்தினரும் வைத்திருந்தனர் (ஆதாரம் 3).

இளவரசிக்கு சொந்தமான ஜெயா பைனான்ஸ் அண்ட் இன்வஸ்ட்மெண்ட்டின் 2006ம் ஆண்டு அறிக்கையின்படி குன்ஹா தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான நிறுவனங்களான டாக்டர் நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் இருந்து தலா ரூ. 2.67 கோடியும் ரூ. 4.78 கோடியும் ஜெயா பைனான்ஸ் அண்ட் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ளது (ஆதாரம்-4).

மேலும் ஜெயா பைனான்ஸ் அண்ட் இன்வஸ்ட்மெண்ட் வைகுண்டராஜனுக்கு சொந்தமான பேன்சி டிரான்ஸ்போர்ட் மற்றும் மாருதி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ. 3.07 கோடியும் ரூ. 35.5 லட்சமும் அட்வான்ஸ் தந்துள்ளது (ஆதாரம்-5, ஆதாரம்-5 A).

மேலும் நீதிபதி குன்ஹா தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 32 பினாமி நிறுவனங்களைத் தவிர ஜெயலலிதா அதிகாரப் பிடியில் உள்ள ஜெயா பைனான்ஸ் அண்ட் இன்வஸ்ட்மெண்ட் போன்ற மேலும் 11 நிறுவனங்களையும் கடந்த ஏப்ரல் மாதம் ஆம் ஆத்மி கட்சி வெளிக் கொண்டுவந்தது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா மற்றும் அவரது பினாமிகள் நம் ஜனாநாயகத்தின் நான்கு தூண்களாகிய சட்டம், செயலாட்சித்துறை, நீதிமன்றம் மற்றும் ஊடகங்களைத் தொடர்ந்து சீர்குலைத்து வருகின்றனர். இது போன்ற அதிகார பலத்தை உபயோகித்து தனது நிறுவனங்களுக்கும் பினாமி நிறுவனங்களுக்கும் பெரியளவு சொத்து சேர்க்கும் மோசமான கூட்டுச்சதி முதலாளித்துவத்தை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து எதிர்த்து போராடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Judge Michael Cunha’s Judgement on the Disproportionate Assets case has brought to light very clearly that S.Vaikundarajan who is involved in large scale illegal mining in the southern districts of TamilNadu is Jayalalitha’s Benami. Cunha’s Judgement has established 32 benami companies through which Jayalalit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X