For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காட்டாற்று வெள்ளமான கரன்சி நோட்டுக்களும்… கேலிக்கூத்தான தமிழகத் தேர்தலும்!

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர். மணி

அனேகமாக தமிழ் நாட்டு வரலாற்றில் முதன் முறையாக வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று கூறி ஒரு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவது இதுதான் முதன் முறையாகும். மே 14 ம் தேதி இரவு புதுதில்லியில் உள்ள இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ் நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல்களை ஒரு வாரம் தள்ளி வைப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரவக்குறிச்சியில் மே 23 ம் தேதி தேர்தல் நடக்கும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 25 ம் தேதி நடக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. காரணம் கட்டுப்பாடற்று வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பணம்தான். நாடு விடுதலை பெற்ற பின்னர் தமிழகம் சந்தித்த எத்தனையோ தேர்தல்களில் இந்த தேர்தலில் தான் தமிழகத்தில் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று வெளிப்படையாகவே தேர்தல் ஆணையம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டு ஒரு தொகுதியின் தேர்தலை தள்ளி வைத்துள்ளது.

இதற்கு முன்பு சரியாக 23 ஆண்டுகளுக்கு முன்பு டி.என். சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த போது ராணிப்பேட்டை மற்றும் பழனி இடைத் தேர்தல்களை தள்ளி வைத்தார். அப்போதும் ஜெயலலிதா தான் தமிழகத்தில் முதலமைச்சர். ராணிப்பேட்டையில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக முதலமைச்சர் நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் என்று கூறியும், பழனியில் சட்டம், ஒழுங்கு இடைத் தேர்தலை நடத்தும் அளவுக்கு ஒழுங்காக இல்லை என்று கூறியும் தேர்தலை சேஷன் தள்ளி வைத்தார். ஆனால் பணப் பட்டுவாடாவைத் தடுக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக தேர்தல்கள் தள்ளி வைக்கப்படுவது இது தான் முதல் தடவை.

அரவக்குறிச்சியில் அப்படி என்னதான் நடந்து விட்டது ... தமிழகம் முழுவதும் நடக்கும் அட்டூழியம் தான், அதாவது வாக்காளர்களுக்கு திமுக, அதிமுக இரண்டு பேரும் பணம் கொடுக்கும் கேவலமான காரியம்தான் அங்கும் நடந்தது ... பிறகு ஏன் அரவக்குறிச்சியில் மட்டும் தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்? மிகப் பெரிய அளவில் அதாவது இரண்டு பெரிய அரசியில் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அளவுகோள்களின் படியும் பார்த்தாலும் கூட மிகப் பெரியதோர் பணக் குவியல் ரெய்டில் சிக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Currency power halts polling in Aravakurichi

‘'உண்மைதான். எல்லா தொகுதியிலும் நடப்பதுதான் இங்கும் நடக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் கரூரில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி வீடுகள் மற்றும் இருவருக்கும் நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான வீடுகளில் நடைபெற்ற சோதனைகளில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. மேலும் எல்லா கெடுபிடிகளையும் மீறியும் பணப் பட்டுவாடா அரவக்குறிச்சியில் கனக் கச்சிதமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. நிலைமை கையை மீறி போனதால் தான் இந்திய தலைமை தேர்தல் ஆணையமே தலையிட்டு அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்திருக்கிறது. இது தமிழ் நாட்டு தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லகானிக்கு கூட தெரியாது'' என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர். ராஜேஷ் லகானியின் நம்பகத் தன்மை என்னவென்பதை நாம் இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இன்று தமிழ் நாட்டின் மானம், மரியாதை அகில இந்திய அளவிலும், சர்வ தேச அளவிலும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. தேசீய மற்றும் சர்வ தேச ஊடகங்கள் இன்று தமிழ் நாட்டு தேர்தல்களை காறி உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது அதிகப் படியான வார்த்தைகளாக, முகஞ் சுளிக்க வைக்கும் வார்த்தைகளாக வாசகர்களுக்கு தெரியலாம். ஆனால் இதுதான் நல்லோரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் கொடூரமான யதார்த்தம். தேர்தல் ஆணையம் தன்னால் ஆனதை எல்லாம் செய்து பார்த்தும் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

நேற்று உளுந்தூர் பேட்டைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பாலு கையுங் களவுமாக பணப் பட்டுவாடா செய்பவர்களை பிடித்திருக்கிறார். அவரும் சுமார் 200 பெண்களும் தொகுதியின் தேர்தல் அலுவலரை சந்தித்து புகார் கொடுக்கின்றனர். வழக்கம் போல தேர்தல் அலுவலர் விட்டேத்தியாகப் பேச கைப்பற்றிய பணத்தை அந்த அதிகாரியின் தலையிலேயே பாலு கொட்டி விடுகிறார். முதன் முறையாக 12 பெண் வாக்காளர்கள் தங்களுக்கு திமுக, அதிமுக இருவரும் தலா 500 ரூபாய் கொடுத்தார்கள் என்று எழுத்து பூர்வமான புகாரை தேர்தல் அலுவலரிடம் அளிக்கிறார்கள். ‘'இதுவரையில் கட்சிகள்தான் மாற்று கட்சியினர் பணப் பட்டுவாடா செய்வதாக புகார் அளிக்கும். ஆனால் முதன் முறையாக வாக்காளர்கள், அதுவும் பெண்கள் தங்களுக்கு கட்சிகள் பணம் கொடுத்ததாக புகார் கொடுத்தனர். ஒரு நடவடிக்கையும் இல்லை. மாறாக என் மீதே ஆறு பிரிவுகளில் வழக்குகள் போடப் பட்டிருக்கின்றனர். இது நேற்று நடந்தது. இன்று காலையும் பணப் பட்டுவாடா தொடருகிறது. இது என்ன தேர்தல்? எதற்காக இந்தத் தேர்தல்? ஒரு தொகுதியில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் நாட்டிலும் தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்?'' என்று ஒன் இந்தியாவிடம் தொலைபேசியில் பேசுகையில் கூறுகிறார் பாலு.

இதே கருத்தைத் தான் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலர் கடந்த சில நாட்களாக கூறி வருகின்றனர். ‘'நாங்கள் ஏற்கனவே இதனைத் தான் வலியுறுத்தி வருகிறோம். தமிழ் நாட்டில் தற்போது ஜனநாயகம் தன்னுடைய இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது. குறைந்தது ஆறு மாதங்களுக்காவது தமிழ் நாட்டில் தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டும். மே 22 ம் தேதிக்குள் புதிய அரசு அமையா விட்டால் தானாகவே தமிழ் நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்து விடும். காரணம் இந்த அரசின் பதவிக் காலம் மே 22 ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் தற்போது பண பலத்தால் அடியோடு நாசமாகி கிடக்கிறது. இந்தச் சூழலில் ஒட்டு மொத்த தேர்தலையும் தள்ளி வைப்பது ஒன்றுதான் தமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பதற்கான ஒரே வழி'' என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், நேர்மையான தேர்தல்களுக்கான அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான எம்.ஜி. தெய்வசஹாயம்.

கடந்த பத்தாண்டுகளாக தமிழ் நாட்டில் நிலவும் சூழலில் நேர்மையான தேர்தல்களுக்கான ஒரே வழி குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மட்டுமே தேர்தல்களை நடத்துவதுதான் என்ற கருத்து பலரிடமும் தற்போது மேலோங்கி வருகிறது. ஆனால் அப்படி செய்தால் விவகாரம் நீதி மன்றத்துக்கு எடுத்துச் செல்லப் படும், ஏனெனில் தேர்தல் ஆணையத்தின் எல்லா நடவடிக்கைகளுமே நீதிமன்றத்தின் ஆளுகைக்கு உட்பட்டவைதான். ‘'நீதிமன்றத்துக்குப் போவதால் ஆபத்தில்லை. ஏனெனில் நன்றாக ஆராய்ந்து, தெளிவான தோர் உத்திரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் பட்சத்தில் இந்த உத்திரவில் நீதி மன்றங்கள் அவ்வளவு சுலபத்தில் தலையிட முடியாது'' என்று மேலும் கூறுகிறார் தேவசஹாயம்.

இதுவே இன்று தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் பலவற்றின் கோரிக்கையாகவும் இருக்கிறது. ‘'இந்த தேர்தல்கள் உடனடியாக பத்து நாட்களாவது தள்ளி வைக்கப் பட வேண்டும். நடந்து கொண்டிருப்பது ஒரு கேலிக்கூத்து. ஒரு தொகுதியில் மட்டும் தேர்தலை ஒத்தி வைத்து விட்டு ஆகப் போவது ஒன்றுமில்லை. கையுங் களவுமாக பணப் பட்டுவாடா செய்து பிடி பட்ட வேட்பாளர் உடனடியாக போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப் பட வேண்டும்'' என்று ஒன் இந்தியா விடம் கூறினார் அறப்போர் இயக்கத்தின் மூத்த நிருவாகி எம்.எஸ். சந்திரமோஹன்.

இதே கருத்தைத் தான் இலவசங்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் பாலாஜியும் வலியுறுத்துகிறார். ஒரு பக்கம் இலவசங்களும், இன்னோர் பக்கம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் இந்திய தேர்தல்களுக்கான அவசியத்தையே நாசம் செய்து விட்டதாக அவர் கூறுகிறார். ‘'உடனடியாக தமிழ் நாட்டில் தேர்தல்கள் ரத்து செய்யப் பட வேண்டும்,அல்லது குறைந்த பட்சம் தள்ளி வைக்கப் பட வேண்டும். மக்களாட்சியின் மாண்புகளும், அரசியல் அமைப்பு சாசனத்தின் அடித்தளமும் இன்று தாக்கி அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன'' என்று கூறுகிறார் சுப்பிரமணியம் பாலாஜி.

ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் தமிழகத்தில் இன்று ஆறாய் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் ஐந்து மாநில தேர்தல்கள் துவங்கிய போது ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், 60,000 கோடி ரூபாய் இந்திய பணச் சந்தையில் திடீரென்று புழக்கத்தில் வந்திருப்பதாக கூறினார். இதில் கணிசமான தொகை தமிழ் நாட்டில்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள நாம் விஞ்ஞானிகளாய் இருக்க வேண்டியதில்லை.

தமிழ் நாட்டில் இன்று பண பலம் ஜனநாயக்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. காட்டாற்று வெள்ளமாய் ஓடும் கரன்சி கட்டுகள் இந்திய ஜனநாயகத்தை கேலிக் கூத்தின் உச்சபட்ச காட்சிப் பொருளாய் இன்று உருமாற்றி விட்டன. இந்த கடைசி கட்டத்தில் தேர்தல்களை தள்ளி வைப்பது கிட்டத் தட்ட அறவே சாத்தியமற்றது தான். ஆனால் அதற்காக தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்களை தள்ளி வைக்க வேண்டும் என்ற சிவில் சமூகத்துப் பிரதிநிதி களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நாம் நிச்சயமாக, ஒரு போதும் புறந்தள்ளி விட முடியாது .........

English summary
Currency power has brought the shame to the state and has halted the polling in Aravakurichi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X