For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு....

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: "என்னை மட்டும் ஏன் கருப்பா பெத்தே?" என் மூத்த மகன் எத்தனையோ முறை என்னை கேட்டிருக்கிறான். ஆனால் என்னால்தான் பதில் சொல்ல முடிவதில்லை. ஆரோக்கியமாக இருந்தாலும், நன்றாக படித்தாலும் கருப்பு நிறம் அவனை ஒருவித தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக்கியிருக்கிறதை நான் பல நேரங்களில் கண்டிருக்கிறேன்.

என் இளைய மகனின் இளமஞ்சள் கலந்த சந்தன நிறம், என் மூத்த மகனுக்கு சற்றே பொறாமையை தந்திருக்கக் கூடும் எனவேதான் என்னை மட்டும் ஏன் கருப்பாக பெத்தே? என்ற கேள்வியை அடிக்கடி என்னிடம் கேட்கிறான் அவன். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

என் இரண்டு மகன்களும் ஒரே பள்ளியில் அடுத்தடுத்த வகுப்புகளில் படிக்கின்றனர். சிறுவயதில் இருந்தே பள்ளிகளில் என் இளைய மகனுக்கு ஆசிரியர்கள் அதிகம் சலுகை காட்டுகின்றனர் என்றும் அடிக்கடி அவனது கன்னத்தை பிடித்து கொஞ்சுகின்றனர் என்றும் என் மூத்த மகன் சொல்லி கேட்டிருக்கிறேன்.
அவனது நிறம்தான் இந்த கொஞ்சலுக்கு காரணமாக இருக்கலாம். 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிற வேறுபாடு பள்ளிகளில் பார்த்திருக்கிறோம்.

ஆசிரியர்களின் சிறப்பு கவனம் நன்றாக படிக்கும் மாணவர்களின் மீது இருந்தாலும் சற்றே வெண்மை நிறமுடைய மாணவர்கள், மாணவிகள் மீது அதீத கவனம் செலுத்துவார்கள்.

இந்த நிற வேறுபாடு பள்ளி மாணவர்களிடையேயும், இளைஞர்களிடையேயும் ஒருவித தாழ்வு மனப்பான்மையைத் தருகிறது. உண்மையில் இன்றைய மாணவர்கள் நிறத்தினால் பல இடங்களில் உளவியல் ரீதியாக பலத்த மன அழுத்தத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.

நம் தோலின் நிறம் இறைவன் கொடுத்த வரம் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. நாம் பிறந்ததில் இருந்து நமது குணத்தை தீர்மானிப்பதில் இருந்து நமது இடத்தை அல்லது நிலையை தீர்மானிப்பது வரை இந்த நிறம் அதனது அதிகாரத்தை செலுத்துகிறது.

ரஜினி, விஜயகாந்த், பார்த்தீபன் தொடங்கி இன்றைய சிவகார்த்திக்கேயன் வரை சினிமாவில் கருப்பான ஹீரோக்கள் ஜெயித்தாலும், கலரான ஹீரோக்கள் மீதான கவர்ச்சி அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

சினிமாவில் கூட 'வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்' என்று வசனமும் படத்திற்கு தலைப்பும் வைக்கின்றனர். நிறத்தை வெள்ளையாக்க பேர் அன் லவ்லி தொடங்கி பேர் அன் ஹேன்ட்சம் வரை தேய்த்து காசை வீணாக்குகின்றனர்.

இன்றைக்கும் நிற வேறுபாடு என்பது சமூகத்தில் இயங்கிக் கொண்டு இருப்பது அதன் உண்மை நிலையை விளக்குகிறது. இந்த நிற வேறுபாடு என்பது சமூகத்தில் இருக்கும் ஒரு நோய். அந்நோய் இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை.

இதில் பெண்களின் நிலைதான் மிகவும் மோசம். வெள்ளையாக இருக்கும் பெண்ணுக்கு திருமணம் நடப்பது எளிதாக இருக்கிறது என்றால் சற்றே நிறம் குறைவான பெண்ணுக்கு அதிகமாக வரதட்சணை கேட்பது இன்றைக்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நவீன உலகத்தின் நிற வேறுபாட்டைப் பற்றிதான், விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளனர் சென்னை கிறித்துவக் கல்லூரி இதழியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள்.

இதற்காக விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கியுள்ள அவர்கள், அதனை யூ டியூபில் வெளியிட்டுள்ளனர். தங்களின் விழிப்புணர்வு பிரச்சார படத்திற்கு
திற அல்லது திரை நீக்கு என்று பொருள் படும் அன்வெய்ல் (Unveil) என்று இந்த நிகழ்விற்கு பெயர் வைத்துள்ளனர்.

இந்த குறும்படத்தில் கருப்பாக இருக்கும் மாணவி, இளைஞர்களின் தன்னம்பிக்கையை எப்படி அதிகரிக்கச் செய்வது என்று கூறியுள்ளனர். கான்ஃபிடன்ஸ் இன் அப்பியரன்ஸ் என்ற டேக் லைனுடன், டார்க் அண்ட் லவ்லி என்ற ஹாஷ் டேக்கையும் தீர்மானித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வில் பெசன்ட் நகர் கடற்கரையில் பேரணி, வீதி நாடகம் மற்றும் பிரபலங்களுடன் விவாதித்தல் என்று பல்வேறு நிகழ்வுகளை செய்ய உள்ளனராம்.

நம்முடைய தோற்றத்தின் மீது நமக்கே நம்பிக்கை இல்லாட்டி எப்படி? நிறத்தில என்ன இருக்க இனி எல்லோரும் 'கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...' என்று சந்தோசமாக பாடுங்களேன்.

English summary
Unveil 2016 Is A Social Awareness Campaign Organised By The Students Of The Department Of Journalism, Madras Christian College, Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X