For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்ணாசையால் நிகழ்ந்த கொலை… பெண் ஆசையால் உயிரை விட்ட ஜமால்முகம்மது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு பின்னணி பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்தான். மண்ணாசை கொலை செய்யத் தூண்டியது என்றால் பெண்ணாசையால் ஜமால்முகம்மது கொல்லப்பட்டுள்ளார் என்கின்றனர்.

கே.எம்.அலாவுதீன் ராவுத்தர் டிரஸ்டிற்குச் சொந்தமான 1.64 ஏக்கர் காலியிடம் மதுரை புது ஜெயில் ரோட்டில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.50 கோடி. இந்த சொத்துதான் ஜமால் முகம்மதுவின் உயிர் போக காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த டிரஸ்ட் நிர்வாகியாக ஜமால்முகம்மது சின்ன சொக்கிக்குளம் பகுதியில் வசித்து வந்தார். அவருக்கும் பலகோடிரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

புது ஜெயில் ரோடு நிலத்தை பராமரித்து வந்த மொக்கைச் சாமி தேவரின் வாரிசுகளில் ஒருவரான பரமேஸ்வரியின் கணவர் கணேசன் உள்ளிட்ட ஒருசிலர் சில ஆண்டுகளுக்கு முன்பு போலி ஆவணம் தயாரித்து பட்டா வாங்கினார்கள். கணேசன் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் உறவினர். அதை எதிர்த்து ஜமால் முகம்மது வழக்கு போட்டு பட்டாவை ரத்து செய்ய வைத்தார்.

ஜமாலின் எதிர்தரப்பிற்காக ஆஜராகிய வாலாந்தூர் மகேந்திரவர்மனுக்கு இந்த டிரஸ்ட் சொத்து விபரம் எல்லாம் அத்துப்படியாம். எனவே அவரை வைத்தே சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகிறார் கணேசன். பலகோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்ட கணேசன், மகேந்திரவர்மனை கூட்டணி சேர்த்த கையோடு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித்தலைவரான சித்திக்கின் உதவியை நாடுகிறார். ஏனெனில் இந்த சித்திக்கை ஏற்கனவே நன்கு தெரிந்தவர் வழக்கறிஞர் மகேந்திரவர்மன்.

ஜமாலிடம் புரோக்க ராக இருந்த முனிச்சாலை சங்கர் அவருடன் மனஸ்தாபம் கொண்டிருந்ததை அறிந்திருந்தான் சித்திக். சங்கரை வீட்டுக்கே போய் சந்தித்திருக்கிறான். பணத்தாசை காட்டி சங்கரை வளைத்த சித்திக், இதே ரீதியில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ‘புரோக்கர்' பூங்கொடியிடமும் பேசுகிறான். 60 வயது ஜமாலிடம் பூங்கொடியை அறிமுகம் செய்து வைக்கிறான் சங்கர். வயது 39 என்றாலும் பூங்கொடி, இளமைத் துள்ளலுடன் பேசுவாள். நில விற்பனை விஷயமாக இருவரும் அடிக்கடி சந்திக்கிறார்கள். தனது பேச்சு வசியத்தால் ஜமாலை மூளைச் சலவை செய்து விடுகிறாள். ஜமாலும் அவள் விரித்த வலையில் எளிதில் விழுந்து விடுகிறார்.

கடத்தப்பட்ட ஜமால் முகம்மது

கடத்தப்பட்ட ஜமால் முகம்மது

அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கட் டங்குடியில் ஜோதிடர் ஒருவரைப் பார்க்க வேண்டும் என்று ஜமாலை அவள் அழைக்கிறாள். கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சின்ன சொக்கி குளத்தில் உள்ள தனது அபார்ட் மென்ட் வீட்டிலிருந்து தனது வோக்ஸ் வேகன் போலோ சிகப்பு நிற காரை ஜமாலே ஓட்டிச் செல்கிறார். அந்தக் காரில் பூங்கொடி மட்டுமே இருக்கிறார். விருதுநகர், கட்டங்குடிக்கெல்லாம் போய்விட்டுத் திரும்பும்போதுதான் இந்த கடத்தல் அரங்கேறியுள்ளது.

மிரட்டல் பத்திரப்பதிவு

மிரட்டல் பத்திரப்பதிவு

அன்றிரவு, சித்திக் மதுரை ஆனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜமால் முகம்மதுவை அடைத்து வைத்து , செப்டம்பர் 1ஆம்தேதி திண்டுக்கல் சென்று மீண்டும் மதுரைக்கு அழைத்து வந்து பத்திரம் போட்டுள்ளனர்.

அப்போது, ஜமாலிடம், பத்திரப்பதிவுக்கு சம்மதிக்கா விட்டால், மனைவியையும், 2 வயது குழந்தையை கொன்றுவிடுவோம் என்று மிரட்டியே சொத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

20 சென்ட் நிலம் இந்திராவுக்கு

20 சென்ட் நிலம் இந்திராவுக்கு

இந்த சொத்தில் 20 சென்ட் நிலத்தை மட்டும் பெரியசாமியின் மகள் இந்திராவிற்கும், சகலை பழனிவேலு, கொளுந்தியாள் உமாராணிக்கு பதிவு செய்து கொடுத்துள்ளனர். மீதமுள்ள இடத்தை கணேசன் பெயருக்கு பவர் வாங்கியுள்ளனர்.இதற்கு ஈடாக பழனிவேலு பணம் கொடுத்தராம்.

கொடைக்கானலில் கொலை

கொடைக்கானலில் கொலை

ஆனாலும், பெரும்கோடீஸ்வரரான ஜமாலை உயிரோடு விட்டுவைத்தால் ஆபத்து என்று கருதிய நிலையில் குற்றாலத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு பின்னர் 3ஆம் தேதி கொடைக்கானலுக்கு கடத்திச் செல்கிறான். போகும் வழியிலேயே கால்களை சங்கர் பிடிக்க... பெல்ட்டால் கழுத்தை சித்திக் நெரிக்க... உயிரை விடுகிறார் ஜமால். உடலை கொடைக்கானல் பள்ளத்தாக்கில் வீசிவிடுகிறார்கள். யாரிடமிருந்தோ மகேந்திர வர்மன் பெற்றுத் தந்த ரூ.36 லட்சத்தை, பிரித்துக்கொண்டதாக சரண்டரான சித்திக், தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

சரண்டர் ஆன குற்றவாளிகள்

சரண்டர் ஆன குற்றவாளிகள்

போலீஸ் நெருங்குவதை உணர்ந்த உடன் சங்கர், சித்திக், மாரிமுத்து என ஒவ்வொருவராக சரண்டராகியுள்ளனர். முதலில் பூங்கொடி, கணேசனை கைது செய்த போலீசார், இவர்களின் வாக்குமூலத்தை வைத்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா, உறவினர்கள் பழனிவேலு, உமாராணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மகேந்திரவர்மன் எங்கே

மகேந்திரவர்மன் எங்கே

இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட மகேந்திரவர்மன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். பணபலம், ஆள்பலம் சேரவே, வக்கீல் தொழிலை விட்டு விட்டு மிரட்டல், ஆள்கடத்தல் என பல தொழில்களையும் செய்யத்தொடங்கிவிட்டாராம் மகேந்திரவர்மன். ஏற்கனவே இவர்மீது ஆள் கடத்தல் வழக்கு ஒன்று இருக்கிறதாம்.

எம். நடராஜனுக்கு நெருக்கம்

எம். நடராஜனுக்கு நெருக்கம்

இவர் எம்.நடராஜனுக்கு மிகவும் நெருக்கமானவராம். சமீபத்தில் எம்.நடராஜன் குற்றாலத்தில் கைதானபோது மதுரையிலிருந்து போயிருக்கிறார். ஜமால் கொலை நடந்த பிறகு, கொடைக் கானலில் உள்ள எம்.நடராஜனின் பங்களாவுக்கு போயிருக்கிறார் மகேந்திரன். அப்போது வெளிநாட்டிலிருந்த எம்.நடராஜனுக்கு இந்தத் தகவல் போயிருக்கிறது. மகேந்திரனை அவர் கடுமையாக சத்தம் போட்டாராம்.

சி.பி.ஐ. விசாரணை

சி.பி.ஐ. விசாரணை

இதனிடையே இந்த கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரி ஜமால்முகம்மதுவின் குடும்பத்தினர் உயர்நீதிமன்றமதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

பலகோடி சொத்துக்கள்

பலகோடி சொத்துக்கள்

ஜமால்முகம்மதுவிற்கும் அவரது மனைவி ஜெய்னுபீவிக்கும் கடந்த 20 ஆண்டுகளாக குழந்தை இல்லையாம், வாரிசு இன்றி தவித்த இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் டெஸ்ட் டியூப் மூலம் பாத்திமா கனி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளதாம். அந்த குழந்தை மீது அலாதி பிரியம் கொண்டவராம் ஜமால்முகம்மது. இதை காரணம் காட்டித்தான் சொத்துக்களை மிரட்டி வாங்கிய கையோடு கொன்றும் விட்டனர் என்கின்றனர்.

நெஞ்சுவலிக்கு பிரியாணி

நெஞ்சுவலிக்கு பிரியாணி

கொலைக்கு காரணமாக மகேந்திரவர்மனை தப்ப விட்ட போலீசார், உறவினர்களின் நெருக்குதலால் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவைவும், பழனிவேலு, உமாராணியும் கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் போது செய்தியாளர்களை படமெடுக்க விடாமல் திமுகவினர் தடுத்த சம்பவம்தான் வேடிக்கையாக இருந்தது.

சிறைச்சாலைக்கு போகும் வழியிலேயே நெஞ்சுவலிப்பதாக கூறி மருத்துவமணையில் அட்மிட் ஆன இந்திரா, அடுத்த சில மணிநேரத்திலேயே ஹோட்டலில் இருந்து பிரியாணி வாங்கி சாப்பிட்டாராம்.

என் மகள் நிரபராதி

என் மகள் நிரபராதி

மகள் கைது சம்பவம் ஐ.பெரியசாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். இந்திராவுக்கு பலகோடி ரூபாய் சொத்துக்களை ஐ.பெரியசாமியே வாங்கிக் கொடுத்துள்ளாராம். உறவினர்கள்தான் தனது மகளை சிக்கவைத்துவிட்டனர் என்று கூறும் பெரியசாமி, தனது மகள் நிரபராதி என்று நீதிமன்றம் கூறும்போது உண்மை தெரியவரும் என்கிறார்.

English summary
The daughter of former DMK minister I Periyasamy and two of his other relatives were arrested on Tuesday in connection with the suspected kidnap and murder of a real estate dealer and managing trustee of the K M Allaudin Rowther Dharma Trust.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X