For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியிடம் நாலு வார்த்தை மனம் விட்டுப் பேசுங்கள்... திருச்சி சிவா எம்.பியின் உருக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: மனைவியை இழந்த துக்கத்திலிருந்து இன்னும் திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா விடுபடவில்லை. விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.. மனைவி உயிருடன் இருந்தவரை அவருடன் அமர்ந்து நாலு வார்த்தை பாசமாக பேசாமல் போய் விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தத் தவிப்பையும், குற்ற உணர்ச்சியையும் தன்னைச் சந்திக்க வருகிறவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தனது உள்ளக்குமுறலை ஒரு ஊடகம் மூலமாக சிவா வெளியிட்டுள்ளார்.

சிவாவின் அந்தக் குமுறல்...

17 வயதில் மணம் முடித்து

17 வயதில் மணம் முடித்து

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.

நோய் தோற்கடித்து விட்டது

நோய் தோற்கடித்து விட்டது

அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுப்படாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய் விட்டது.

இதுவரை வருந்தாத நான்

இதுவரை வருந்தாத நான்

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள்.

புன்னகையோடு வலம் வந்தவர்

புன்னகையோடு வலம் வந்தவர்

பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள்.

எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள்.

முகம் சுளிக்காதவர்

முகம் சுளிக்காதவர்

மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பனி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றி கொண்டுஇருந்தபொது சிறிதும் முகம் சுளிக்காதவள்.

குணம் கொண்ட குலமகள்

குணம் கொண்ட குலமகள்

1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுளிக்காமல் ஒருமணி நேரத்திலேயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள்.

போலீஸ் நிலையம் வந்து குழந்தையைக் காட்டியவர்

போலீஸ் நிலையம் வந்து குழந்தையைக் காட்டியவர்

இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த என்னிடம் வந்து, பிள்ளையைக் காட்டி விட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.

அன்னபூரணி

அன்னபூரணி

விருந்தோம்பல், உபசரிப்பு, இன்முகம், என்னை காண வருவோர் அத்தனை பேருக்கும் உணவு படைத்த அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம். தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி; பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.

அளவிடற்கரிய பாசம்

அளவிடற்கரிய பாசம்

பண்டிகைகளும், திருநாள்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை. இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்தும், ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்திருக்காது.

நேரம் இல்லை என்பது பொய்

நேரம் இல்லை என்பது பொய்

நேரம் இல்லை என்பார்கள், பொய். 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்த்துவதற்குத்தானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.

சரியான நேரத்தில் வெளிப்படுத்தாவிட்டால்

சரியான நேரத்தில் வெளிப்படுத்தாவிட்டால்

காலம் கடந்து பயன்படுத்தினால் பயனற்றுப் போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிப்படுத்தாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி', 'காதல்' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது. விலையும் இருக்காது.

கடமை தவறியவன் நான்

கடமை தவறியவன் நான்

இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன். ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாயே.

உள்ளத்தைத் திறந்து கொட்ட வந்தபோது

உள்ளத்தைத் திறந்து கொட்ட வந்தபோது

ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைந்ததாக செய்தி கிடைத்தது. வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்து இருந்ததை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தால் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.

மும்தாஜை ஷாஜகான் அழைத்தது போல...

மும்தாஜை ஷாஜகான் அழைத்தது போல...

நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் இரண்டும் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.

படம் முன் உட்கார்ந்து கதறுகிறேன்

படம் முன் உட்கார்ந்து கதறுகிறேன்

பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிறவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசி இருந்தால்...........

நாளும் துடிக்கிறேன்

நாளும் துடிக்கிறேன்

இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன். எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருத்தப்படாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப்படுத்தினார். நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குறிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கணவர் பேசினால் மகிழ்வார்கள் மனைவியர்

கணவர் பேசினால் மகிழ்வார்கள் மனைவியர்

ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிப்பவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக, கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமே இல்லையே என சொன்னேன்.

காலங் கடந்து உணர்கிறேன்

காலங் கடந்து உணர்கிறேன்

ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோ ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது. காலங்கடந்து நான் உணர்கிறேன்.

தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள்

தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள்

தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள். என் மனைவிக்கு என்னை உணர்த்தாமலே, என் உள்ளத்தை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழ வைக்காமலேயே அனுப்பி வைத்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன்

காவல் தெய்வங்கள்

காவல் தெய்வங்கள்

உங்களுக்காகவே, உங்கள் பிள்ளைகளை, உங்கள் பிரச்சனைகளை, உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிறபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கீகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!

சில வீடுகளாவது மகிழ்ச்சியில் திளைக்கட்டும்

சில வீடுகளாவது மகிழ்ச்சியில் திளைக்கட்டும்

நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.

யாருக்கும் வேண்டாம் என் வேதனை

யாருக்கும் வேண்டாம் என் வேதனை

என் வேதனை, நான்படும் துயரம், வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம். அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின் நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.............

வெட்கப்படுகிறேன்

வெட்கப்படுகிறேன்

இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.என்று எழுதியுள்ளார் என்று உருக்கமாக எழுதியுள்ளார் சிவா.

English summary
DMK MP Trichy Shiva is still looming in the memories of his wife. Here he writes on his late wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X