தூக்கில் தொங்கிய மனைவியின் உடலை இறக்கி வைத்துவிட்டு தற்கொலை செய்த 'தீபம்' பொறுப்பாசிரியர்
சென்னை: தீபம் இதழின் பொறுப்பாசிரியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தனது மனைவியின் உடலை இறக்கி வைத்துவிட்டு தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கான மாத தவணையை செலுத்த முடியாமல் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
கல்கி குழுமத்தின் தீபம் ஆன்மீக இதழின் பொறுப்பாசிரியராக இருந்தவர் ஸ்ரீனிவாச ராகவன்(50). அவரது மனைவி ராஜலட்சுமி என்கிற ஜானகி(37). அவர்களின் மகன் அனிருத். அனிருத் 4ம் வகுப்பு படித்து வருகிறார். அவர்கள் அனிருதை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ராகவன் சென்னை ராமாபுரம், செந்தமிழ் நகரில் காமராஜர் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மனைவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். மாலை வேளையில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை டியூஷனுக்கு வந்த மாணவர்கள் ராகவனின் வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அழைப்பு மணியை அடித்தனர். பல முறை அழைப்பு மணியை அடித்தும் யாரும் கதவை திறக்கவில்லை. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது தரையில் ஜானகி பிணமாகக் கிடந்தார். ராகவன் மற்றொரு அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து கதவை உடைத்து அவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராகவன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதே குடுடியிருப்பில் வீடு வாங்கியுள்ளார். அதற்கான தவணை பணத்தை செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும் அவர்களுக்கு இடையே பண விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜானகி ஒரு அறைக்குள் சென்று தனது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகவன் மனைவியின் உடலை கீழே இறக்கி வைத்துவிட்டு வேறு அறைக்கு சென்று கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications