For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணமதிப்பு நீக்கம்... நவ.8ல் கறுப்பு சட்டையுடன் போராட ஸ்டாலின் அழைப்பு

மத்திய பாஜக அரசை கண்டித்து நவம்பர் 8ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்புச் சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சிங்க நடை போட்ட இந்திய பொருளாதாரம் இன்றைக்கு உலக அரங்கில் தன் சிம்மாசனத்தை இழந்து விடுமோ என்ற அச்சம் இந்த தேசத்தை தங்கள் உயிராக நினைக்கும் 125 கோடி மக்களின் இதயத்தையும் நெருடத் தொடங்கி விட்டது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நவம்பர் 8ம் தேதியன்று மத்திய பாஜக அரசை கண்டித்து அந்த நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்புச் சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Demonetisation: DMK to stage protest on November 8

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் எடுத்த தன்னிச்சையான பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள "பேரிடரை" கண்டித்து அனைத்து எதிர்கட்சிகளின் சார்பில் வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை குழுத் தலைவர் சகோதரி திருமதி கனிமொழி பங்கேற்றார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகள் குறித்து முதலில் குரல் கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வகையில், மத்திய பாஜக அரசின் இந்த எதேச் சதிகாரமான, தன்னிச்சையான நடவடிக்கையால் அமைப்பு சாரா தொழில்களும், கூலித் தொழிலாளிகளும், விவசாயத் தொழிலாளர்களும், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அடியோடு பாதிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், நாட்டின் பொருளாதாரமே இன்றைக்கு நலிவடைந்து நிற்கிறது.

கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 89 சதவிகித 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திடீரென்று செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கை இமாலய தவறு. விவசாயத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று கூறிய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், இது திட்டமிட்ட கொள்ளை என்று காட்டமாக விமர்சித்தார்.

இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பு வரும் என்று பன்னாட்டு நிதி நிறுவனம் அறிவித்தது. அமைப்புசாரா தொழில்களையும், பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும்" என்று உலக வங்கி சுட்டிக்காட்டியது. அனைத்து கட்சி தலைவர்களும் மக்களுக்கு ஏற்படப் போகும் இன்னல்கள் பற்றி எச்சரித்தார்கள். ஆனால் அவர்களை எல்லாம் ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தியை பிரதமர் மோடி,

50 நாட்கள் எனக்கு அவகாசம் கொடுங்கள். அதற்கு பிறகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரச்சினை தீரவில்லை என்றால் நாடு அளிக்கும் தண்டனையை ஏற்க தயாராக இருக்கிறேன் என்றார். ஆனால் முதல் 50 நாட்களுக்குள் 74 முறை பணமதிப்பிழப்பு தொடர்பாக மாற்றி மாற்றி அறிவுரைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

மக்கள் வங்கிகளின் ஏ.டி.எம். க்யூவில் கால் கடுக்க நின்று தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கினார்கள். ஏ.டி.எம். கார்டு இல்லாத கூலித் தொழிலாளிகள், அப்பாவி கிராம மக்கள் அல்லல்பட்டார்கள். க்யூவில் நின்று 100க்கும் மேற்பட்டோர் உயிரை பறிகொடுத்தார்கள். இவ்வளவுக்கும் பிறகு மட்டுமல்ல இப்போதும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு குறையவில்லை. உயிரிழந்தவர்களுக்கு ஒரு இரங்கல் கூட நாடாளுமன்றத்தில் தெரிவிக்க மத்திய பா.ஜ.க. அரசு முன்வராத கொடுமை அரங்கேறியது.

பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களான முன்னாள் நிதியமைச்சர் திரு.யஷ்வந்த் சின்கா, டாக்டர் சுப்பிரமணிய சுவாமி, திரு.அருண்சோரி போன்றவர்கள் எல்லாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் படும் பாட்டை கட்டுரைகள், பேட்டிகள் வாயிலாக சித்தரித்து வருகிறார்கள்.

திரு யஷ்வந்த சின்ஹா அவர்கள், பணமதிப்பிழப்பு பொருளாதார பேரழிவை ஏற்படுத்தி விட்டது என்றே குற்றம் சாட்டி விட்டார். கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றவர்கள் 99 சதவீத கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கிய நிகழ்வுதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நடைபெற்றது. எதிர்கட்சிகளையும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் "பணமதிப்பிழப்பு நடவடிக்கையை" சாக்காக வைத்து பழிவாங்கல் ரெய்டுகள் நடந்ததே தவிர, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கருப்பு பணமே இல்லை என்ற செயற்கை தோற்றத்தை உருவாக்கி மகிழ்ந்தது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு.

இதையெல்லாம் எதிர்க்க வேண்டிய குதிரை பேர அதிமுக அரசோ பா.ஜ.க.விடம் மண்டியிட்டு மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை கண்டு ரசித்தது. தாய்மார்களின் சேமிப்பை தட்டிப் பறித்துக் கொண்டது. ஊழியர்கள் தங்களின் சம்பளத்தைக்கூட எடுத்துச் செலவிட முடியாத சோகத்தை, துயரத்தை பா.ஜ.க. அரசு வம்படியாக புகுத்தியதை எண்ணினால், நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற மகாகவி பாரதியின் வரிகள்தான் நினைக்கு வருகிறது.

தமிழகத்தின் பொருளாதாரம் மட்டுமல்ல- நாட்டின் பொருளாதாரம் இன்றைக்கு நிலைகுலைந்து நிற்பதற்கும், அனைத்து தரப்பட்ட மக்களும் சொல்லொனாத் துன்பத்திற்கு உள்ளாகியிருப்பதற்கும் மத்திய பா.ஜ.க. அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், இப்போது வந்திருக்கின்ற சரக்கு மற்றும் சேவை வரி சட்டமும் (ஜி.எஸ்.டி.) அடிப்படை காரணங்கள் என்பதை பா.ஜ.க.வினரே ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

திரும்பப் பெற முடியாத இழப்பை மக்கள் மட்டுமல்ல, நாடும் அடைந்திருப்பதுதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நினைவு மட்டுமல்ல- கண் முன் ஓடும் கொடூரக் காட்சியாக இருக்கிறது.

இமாலய தவறு செய்து விட்ட மத்திய பா.ஜ.க. அரசின் முன்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கடும் பாதிப்புகளுக்கு பரிகாரம் காணும் திறமை இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

வாக்குறுதி அளித்தபடி ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் பண்ணவும் முடியவில்லை. தேர்தலுக்கு முன்பு வைத்த வளர்ச்சி என்ற முழக்கத்தையும் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. ஊழல் ஒழிப்பு என்று கூறி விட்டு அடுத்தடுத்த ஊழல் புகார்களில் சிக்கியுள்ள பா.ஜ.க.வினருக்கு இப்போது இருக்கும் ஒரே ஆயுதம் மானநஷ்ட வழக்கு என்றாகி விட்டது.

சிங்க நடை போட்ட இந்திய பொருளாதாரம் இன்றைக்கு உலக அரங்கில் தன் சிம்மாசனத்தை இழந்து விடுமோ என்ற அச்சம் இந்த தேசத்தை தங்கள் உயிராக நினைக்கும் 125 கோடி மக்களின் இதயத்தையும் நெருடத் தொடங்கி விட்டது.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செயல்படுத்துவதில் பா.ஜ.க. அரசு சந்தித்த தோல்விகளையும், அவசர கோலத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களும் அடைந்த துயரத்தையும், வெளிப்படுத்த வேண்டும். நாடுமுழுவதும் உள்ள மக்களை நிம்மதியிழக்க வைத்த மத்திய பா.ஜ.க. அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒராண்டு முடிவுறும் நவம்பர் 8 ஆம் தேதியை "கருப்பு தினமாக" அணுசரிக்க வேண்டுமென டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கழக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வணிக பெருமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பெருமளவில் கலந்து கொண்டு இப்போராட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
DMK to stage protest all district headquarters on November 8 to condemn the Centre and the State government for their failure to make contingency measures to overcome demonetisation of Rs. 500 and Rs 1000 currency notes and to highlight the sufferings of people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X