அண்ணன் மீது கொலை வழக்கு... வழக்கை வாபஸ் பெறக் கோரி செல்போன் டவரில் ஏறிய தம்பிகள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அண்ணன் மீது போடப்பட்டுள்ள கொலை வழக்கை வாபஸ் பெறக் கோரி, இரண்டு தம்பிகள் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் டாஸ்மாக் கடையை மூடக்கோரி, காந்திவாதி சசிபெருமாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய போது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் சிலர் செல்போன் டவர்களில் ஏறி மதுவிலக்கை அமல் படுத்தக் கோரி தற்கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் அருகே இரண்டு இளைஞர்கள் செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால், இவர்கள் மதுவிலக்கிற்காகப் போராடவில்லை. தனது அண்ணனுக்காக இந்த தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
செம்பட்டி அருகே உள்ள கூத்தாம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் முத்துக்கருப்பன், வரதராஜன். இவர்களது அண்ணன் மீது கொலை வழக்கு உள்ளது. அண்ணனின் மனைவி கேணியில் விழுந்து இறந்து போனதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
எனவே, அண்ணன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, முத்துக்கருப்பனும், வரதராஜனும் திண்டுக்கல் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலணியில் 40 அடி ஏர்டெல் செல்போன் கோபுரத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு போராடினர்.
கையில் மண்ணெண்ணெய் கேன் கொண்டு சென்ற இந்த இளைஞர்கள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டினர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர், பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் கீழே இறங்கி வந்தனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.