For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வயிறு முட்ட விருந்து.. அப்புறம் கொஞ்சம் மருந்து.. உஷாரய்யா.. உஷாரு…!

Google Oneindia Tamil News

காலையில் ஒரு நண்பர் மழையில் குடை பிடிச்சுகிட்டே வாக்கிங் போயிகிட்டு இருந்தாரு... என்ன சார், அடாத மழையிலும் விடாது வாங்கிங் போறீங்க என்று கேட்டேன். என்ன பண்றது சார்.. டாக்டர் டெய்லி வாக்கிங் போங்க, இல்லேன்னா அவ்ளோதான்னு சொல்லிட்டாரு... தீபாவளி பண்டிகைனால இரண்டு மூணு நாளா வாக்கிங் போகல.. இரண்டு நாளா தடபுடல் சாப்பாடு வேற.. அதான் இன்னைக்கு காலையிலேயே வாக்கிங் கிளம்பிட்டேன் என்றார்.

பலரும் இப்படித்தான் பண்டிகைகளின் போது தங்களின் வழக்கமான உடற்பயிற்சி, சாப்பாட்டு கட்டுபாடு எல்லாத்தையும் தூக்கி தூர போட்டுவிட்டு, காஞ்ச மாடு கம்பக் காட்டுல பாய்ஞ்ச மாதிரி ஜமாய்ச்சிடுறாங்க. அப்புறம் அந்த இரண்டு நாளில் உடம்பில் சேர்ந்த சர்க்கரையையும், கொழுப்பையும் கரைக்க படாதபாடு பட வேண்டியிருக்கு. பல பேர் இதுக்காகவெல்லாம் அலட்டிக்கிறதே இல்லைன்றது தனிக்கதை.

diwali feast and its side effects

ஒரு புது மாப்பிள்ளை தலைதீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு வந்திருக்காரு. நம்ம ஆளு பாத்தி கட்டி சாப்பிடுற பார்ட்டி. அதனால் அவர் புது மனைவி, சமையல் ரூம்ல போய் அம்மா காதை கடிச்சிருக்கு. என் புருஷன் நல்லா ஹெவியா சாப்பிடுவாரு, கூச்சப்பட்டு இன்னும் வேணும்னு கேட்க மாட்டாரு, அதனால இலையில வைக்கும் போதே நிறைய வையுங்கன்னு சொல்லியிருக்கா. அவங்க அம்மாவும் மாப்பிள்ளைக்கு நல்ல நீளமான தலைவாழை இலை போட்டு, அதில் ஆவிபறக்க 21 இட்லியை அப்படியே குவிச்சு, சுத்தி சுடச்சுட கோழிக்கறி குழம்பை ஊத்தியிருக்காங்க.

இதைப்பார்த்த மாப்பிள்ளைக்கு சுர்ருன்னு கோவம் வந்திருச்சாம். என்னங்க, என்னைப் பார்த்தா மனுசன் மாதிரி இருக்கா... இல்லே ராட்சசன் மாதிரி இருக்கா.. இத்தனை இட்லியை கொண்டு வந்து கொட்டுறீங்க என்று கத்தியிருக்காப்புல. மாமியார் மிரண்டு போயிட்டாங்க. இப்ப என்ன பண்ணட்டும் மாப்பிள்ளைன்னு பவ்யமா கேட்டிருக்காங்க. மரியாதையா ஒரு இட்லியை எடுங்கன்னாராம் நம்ம சூப்பர் மாப்பிள்ளை. அட இத்துப்போற பயலே, 20 இட்லி சாப்பிடுறவன் எதுக்குடா இவ்ளோ சவுண்டு கொடுத்தேன்னு தலையில அடிச்சிகிச்சாம் அந்த அம்மா.

இப்படித்தான் பல பேர் வயிறை வகைதொகையில்லாமல் வளர்த்து வெச்சிருக்காங்க. அதிலும் குறிப்பா பண்டிகைகள் வந்துட்டா கேட்கவே வேணாம். சாப்பிடுறதையே முழுநேர வேலையா செய்றவங்க எல்லாம் இருக்காங்க. இனி வரும் நாட்களில் இன்னும் நிறைய பண்டிகைகள் வரிசையா வரப்போகுது. அதனாலதான் இப்போ இந்த கட்டுரையை எழுதுறேன். சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்னு ஒரு பழமொழி இருக்கு. அதாவது உடம்பை நல்லா ஆரோக்கியமா வெச்சிகிட்டாதான் இதுமாதிரி இன்னும் நிறைய பண்டிகைகளை சந்தோஷமா கொண்டாட முடியும். ஆனா, நம்மில் பலருக்கும் உடம்போட முக்கியத்துவமே தெரியுறதில்லை.

diwali feast and its side effects

நாம பக்கத்துல ஒரு இடத்துக்கு போகணும்னா என்ன செய்வோம், சைக்கிள் இல்லேன்னா டூ வீலர்ல போவோம். அதுவே சில நூறு கிலோமீட்டர்கள் போக வேண்டியிருந்தா, கார் இல்லேன்னா பஸ்ல போவோம். வெளிநாடுகள் மாதிரி தூரமா போறதா இருந்தா விமானத்துல போவோம். இந்த உலகத்திற்கு வெளியில விண்வெளியில பயணிக்க வேண்டியிருந்தா ராக்கெட்ல போவோம். அதாவது, நம்மகிட்ட எவ்வளவு சக்திவாய்ந்த வாகனம் இருக்கோ, அவ்வளவு தூரம் நம்மால பயணம் செய்ய முடியும்.

குறிப்பிட்ட இடத்தை அடைஞ்சதும், நாம இந்த வாகனங்களை விட்டு இறங்கிடுவோம். ஆனா கடைசி வரைக்கும் நம்ம சுமந்துகிட்டு போகப் போற வாகனம் நம்ம உடம்புதான். அதை நீங்க கழட்டி வைக்கவே முடியாது. அதனாலதான் அதை முறையா பராமரிச்சு வையுங்கன்னு சொல்றாங்க. அப்பதான் அந்த வாகனத்தை வெச்சி நீண்ட வருஷம் பிரச்னை இல்லாம வாழ்க்கைப் பயணம் போக முடியும். இதை இன்னைக்கு உங்க டாக்டர் மட்டும் சொல்லல. ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த சித்தர்களும் இதையேதான் சொல்றாங்க. "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்று ஆரம்பித்த திருமூலர் "உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே" என்று முடிக்கிறார்.

ஏம்பா, பயமுறுத்துற. பண்டிகையாச்சேன்னு ஆசையா ரெண்டு ஸ்வீட்டை தூக்கி வாயில போட்டது ஒரு தப்பாய்யா, அப்படியே கடை பக்கம் போய் ஒரு குவார்ட்டர் விட்டது ஒரு குத்தமாய்யான்னு நீங்க கேட்கிறது புரியுது. பண்டிகைன்றது சந்தோஷமா ஆரம்பிச்சு, சந்தோஷமா முடிய வேண்டியது. சரக்கு, முறுக்குன்னு... அடிபின்னிட்டு, அடுத்தநாள் பேப்பரை பார்த்து, பார்த்தியாலே இந்த வருஷம் டாஸ்மாக் சேல்ஸ் போன வருஷத்தை தாண்டிருச்சு. இதுல நம்ம பங்கும் இருக்குலே என கெத்தா மீசையை தடவுவது ஒரு பெருமையா? எல்லா அலப்பறையையும் இந்த வருஷமே பண்ணிட்டு அடுத்த தீபாவளிக்கு ஆளே இல்லாம அல்பாயுசுல போறது நல்லாவா இருக்கும்? எது செஞ்சாலும் இன்னும் பல வருஷம் உயிரோட இருந்து பலப்பல தீபாவளிகளை பார்க்கணும்னு நினைச்சு செய்யுங்க. அதுவே பாதி பிரச்னையை தீர்த்துடும்.

diwali feast and its side effects

வயிறுக்கும் உயிருக்கும் நிறைய தொடர்பு இருக்கு. உடல் எடை அதிகமா இருக்கிறவங்களுக்கு உடலில் பிரச்னைகளும் அதிகமாவே இருக்குமாம். அதனால் சாப்பிட்டுல கவனம் செலுத்தினாலே பல வியாதிகள் வர்ரதை தடுத்துற முடியும்னு சொல்றாங்க. அதெல்லாம் சரிங்க, எதை சாப்பிடுறது, எப்படி சாப்பிடுறது, எவ்வளவு சாப்பிடுறதுன்னு அடுக்கடுக்கா நிறைய கேள்வி வருவதா? எதை வேணா சாப்பிடுங்க.. அது உங்களுக்கு ஒத்து வருதா, இல்லையான்றதை உங்க உடம்பே சொல்லிடும்.

நம்ம கிட்ட பெரிய பிரச்னை என்னென்னா, நாம நம்ம உடம்பு சொல்ல வர்ர விஷயங்களை கவனிக்கிறதே இல்லை. ஆமாங்க, உடம்பு நம்ம கூட பேசும். நமக்கு எது நல்லது, எது கெட்டதுன்றது உடம்புக்கு தெரியும். வாந்தி, வயிற்றுப்போக்கு இதெல்லாம் ஏன் வருதுன்னு நினைக்கிறீங்க. உடம்புக்கு ஒவ்வாத ஏதோ ஒரு பொருளை நாம உள்ளே தள்ளியிருந்தா, உடம்பு அதை கண்டுபிடிச்சு இப்படித் தான் வெளியே தள்ளும். தாகம் எடுக்குறது, பசி எடுக்குறது, தூக்கம் வர்ரது எல்லாமே உடம்பு நமக்கு சொல்லும் சேதிதான். இதை உடனே கவனிச்சு உடம்பு கேட்குறதை கொடுத்துட்டா ரொம்ப காலத்துக்கு ஆரோக்கியமா இருக்கலாம்.

ஆனா நம்மில் பலர் என்ன பண்றோம்.. தூக்கம் வந்தாலும், கட்டுப்படுத்திகிட்டு வேலை செய்றோம், இல்லேன்னா டீவி பாக்குறோம். இதனால சரியான தூக்கம் கிடைக்காம உடம்பு தடுமாறுது. பசி எடுத்தா, உடனே சாப்பிடாம ஒரு டீயோ, ஜூஸோ குடிச்சிட்டு, அப்புறம் நமக்கு நேரம் கிடைக்கும்போது சாப்பிடுறோம். அதுக்குள்ள உடம்புக்குள் ஏகப்பட்ட ரசாயன மாற்றம் நடந்து முடிஞ்சிருக்கும். அப்புறம் நீங்க சாப்பிடுற சாப்பாடு குப்பைக்கு போற மாதிரிதான் வயிற்றுக்குள்ள போகும். அதை உடம்பால முறையா ஜீரணிச்சு, சத்துகளா மாத்த முடியாது.

உணவே மருந்துன்னு வாழ்ந்தவங்க நாம. இப்போ அதை ஒழுங்கா கடைப்பிடிக்காம விட்டதுனாலதான் மருந்தே உணவுன்னு வாழ்றதை நோக்கி வேகமா போய்கிட்டு இருக்கோம். ஒத்தை வரியில சொல்லனும்னா முடிந்த வரை காய்கறி, கீரைகள், பழங்கள்னு இயற்கை உணவுகளை அதிகமா உணவுல சேர்த்துக்கங்க. அதேபோல முடிந்த வரை ரசாயனம் கலந்த, ஆரோக்கியத்துக்கு உலை வைக்கிற துரித உணவுகளை சாப்பிடுறதை தவிர்க்கப் பாருங்க. அப்புறம் பாருங்க, உங்க உடம்பு உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுதுன்னு.

- கௌதம்

English summary
Tasting the Diwali sweets and others and working hard to reduce the fat is a common one during every year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X