For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க லீவு விட்டா விடுங்க விடாட்டி போங்க... தீபாவளிக்கு ஊருக்கு போயே தீருவோம்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி திருநாள்!.., கிராமத்தில் இருப்பவர்களுக்கு எவ்வளவு சந்தோசம் தருமோ, அதை விட அதிக சந்தோசம் தருவது நம்மைப் போல் சென்னையிலும் மற்ற வெளியூர்களில் வேலை பார்ப்பவர்களுக்கும். காரணம், வேலை நிமித்தமாக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள், தங்களின் சொந்தபங்தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு செல்கிறார்களோ இல்லையோ, நிச்சயமாக தீபாவளிக்கு கண்டிப்பாக ஊருக்கு போயே ஆவார்கள்.

காரணம், வெளியூரில் வேலை செய்பவர்கள், தங்களின் அலுவலக கஷ்டங்களை அந்த ஒரு நாளில் மறந்து நாள் முழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதால் தான். இதற்காகவே, அந்த திருநாளுக்காகவே ஆண்டு முழுவதும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இரயிலில் பயணம் செய்பவர்கள், சுமார் 4 மாதங்களுக்கு முன்பாகவே டிக்கெட்டை முன் பதிவு செய்து வைத்துவிட்டு ஏதோ ஆஸ்கார் விருது வாங்கியது போல சந்தோசப் பட்டுக்கொள்வோம்.

Diwali fever grips people

போதாக் குறைக்கு தன் நண்பர்களுக்கு ஃபோன் போட்டு "டேய் மாப்ளே, எனக்கு பாண்டியன்ல டிக்கெட் கெடச்சிடுச்சிடா, உனக்கு கெடச்சிடுச்சாடா'ன்னு கேட்டு கடுப்பேத்துவோம். அவர்களோ, இல்லேடா எனக்கு வெய்ட்டிங் லிஸ்ட் 300டா'ன்னு சொல்லி எதையோ பறிகொடுத்தது போல் பேசுவார்கள்.

ஆம்னி பஸ்ல போகாலாம்னு டிக்கெட் கேட்டால் அவர்கள் என்னடான்னா, அவர்களுக்கும் சேர்த்து ரேட் பேசுவார்கள். பலபேர் ஆம்னி பஸ்ஸை தவிர்த்துவிட்டு அரசுப் போக்குவரத்துக்கழக பஸ்ஸில் போகலாமேன்னு நினைத்திருப்பார்கள்.

ஒருவழியாக எல்லோரும், ரயிலிலும், சிறப்பு ரயிலிலும் ஆம்னி பஸ்ஸிலும், அரசு பஸ்சிலும் டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்டு தீபாவளிக்காகக் காத்திருப்போம். சரியாக தீபாவளிக்கு ஒருவாரம் முன்பே அலுவலகத்தில் விடுமுறைக்கு விண்ணப்பித்துவிட்டு (மனைவியை பிரசவத்திற்காக லேபர் வார்டில் அனுப்பிவிட்டு காத்திருப்பதை போல) காத்திருப்போம்.

மேலாளரும் விடுமுறைக்கு அனுமதி அளித்திருப்பார். நாமும், ஆஹா, நமக்கு லீவு கிடைத்துவிட்டது என்று குஷியில் கடன் வாங்கியோ அல்லது, கிரெடிட் கார்டிலோ துணிமணிகள் வாங்கி போட்டுப்பார்த்து ஊருக்கு போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே நீட்டாக பேக் பண்ணி வைத்துக்கொள்வோம்.

தீபாவளிக்கு ஊருக்கு கிளம்பும் தினத்தில், அலுவலகத்தில் எல்லா வேலைகளையும் பக்காவாக முடித்துவிட்டு (அன்னைக்கு எந்த வேலையும் உருப்படியாக செய்யமாட்டோம், அது வேறு விஷயம்) எந்த விதமான இடைஞ்சலும் இருக்கக்கூடாது என்று நினைத்து வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு, அலுவலக மேலாளரிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று, அவரிடம் போனால், அவர் என்னடான்னா, வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்.

"லீவெல்லாம் குடுக்க முடியாது, ஆபீஸில் ஆடிட்டிங் நடக்கிறது, இன்கம்டாக்ஸ் ஃபைல் பண்ணணும், நீ இல்லாம ஒன்னும் நடக்காது (நாம் மனதுக்குள் சொல்லிக்கொள்வேம், என்னடா இது, இன்கிரிமென்ட் கேட்டால் ஆமா நீ என்னத்தை செஞ்சி கிழிச்சே இன்கிரிமென்ட் கேக்குறே'ன்னு, ஆனால், லீவு கேட்டால் நீ இல்லாம ஆபீஸே நடக்காதுன்னு சொல்லுறே, எதுடா உண்மை'ன்னு), அதனால், இந்த வருஷம் தீபாவளியை இங்கேயே கொண்டாடு, ஒண்ணும் குடி முழுகிப்போகாது" என்று சொல்வார். இருந்தாலும், ஒருவழியாக அவரை சமாளித்து லீவு வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பி வருவோம்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கோவை மற்றும் திருப்பூர் போன்ற நகரங்களில் இருந்து பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. ஏனென்றால், அவர்களில் பெரும்பாலானோர் தீபாவளிக்கு முதல் நாள் மாலை தான் போனஸ் கிடைக்கும். அதனால் இவர்கள் நள்ளிரவுதான் பயணம் செய்வார்கள். அதனால், இவர்களுக்கு பேருந்துகளில் இடம் கிடைக்காது. எனவே, இவர்கள் பெரும்பாலும் ஓட்டுனர் இருக்கைக்கு அருகிலுள்ள என்ஜீனுக்கு மேல் உட்கார்ந்துதான் பயணம் செய்வார்கள்.

தீபாவளிக்கு முதல் நாள் ஊர்வந்து சேர்ந்தவுடன் நெருங்கிய சொந்தங்களின் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்துவிட்டு இரவு முதல் தீபாவளி நாள் அதிகாலை வரை விடிய விடிய நண்பர்களுடன் சேர்ந்து அரட்டைக் கச்சேரி செய்வோம்.

தீபாவளியன்று, அதிகாலையில் நன்றாகக் காய்ச்சிய நல்லெண்ணையை தேய்த்து சுமார் ஒருமணி நேரம் நன்றாக குளித்துவிட்டு தீபாவளிக் கசாயம் குடித்துவிட்டு, நாம் புதிதாக வாங்கிய துணிமணிகளை எல்லாம் பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு, பின்னர் புதிய ஆடைகள் அணிந்துகொண்டு, அம்மா அப்பா, மற்றும் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரிடமும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, அம்மா அன்புடன் நமக்காக ஆசை ஆசையாக சமைத்த இட்லியையும், நாட்டுக்கோழிக் குழம்பையும், ஆட்டுக்கறியையும் சாப்பிட்டுவிட்டு (என் ராசாவின் மனசிலே ராஜ்கிரன் கணக்கா) குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊர் மைதானத்திற்கு சென்று நாம் வெளியூரிலிருந்து வாங்கிச் சென்ற பட்டாசை ஆசை தீரக் கொளுத்துவோம்.

பின்னர், இரவு சாப்பிட்டுவிட்டு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, வெளியூர் திரும்புவதற்காக ரயில் நிலையத்திலோ, பேருந்து நிலையத்திலோ காத்திருக்கும்போது நம் மனதில் ஒரு இனம் புரியாத ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும். நாம் வேலை செய்யும் அலுவலகத்துக்கு வந்தவுடன், நாம் செய்யும் முதல் வேளை என்ன தெரியுமா? கூகுளில் "அடுத்த தீபாவளி என்னிக்கு வருது, அதுக்கு எத்தனை நாள் நமக்கு லீவு கிடைக்கும்" என்றுதான்.

ஹேப்பி தீபாவளி.... கொண்டாடுங்க மக்களே!!

English summary
With Diwali is nearing people are getting ready to visit their home towns with family without bothering anything.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X