For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்க மாரியப்பனுக்கு 2 கோடி... ஜெயலலிதாவை பாராட்டிய திக தலைவர் வீரமணி

Google Oneindia Tamil News

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான ரியோ பாரா ஒலிம்பிக் விளையாட்டில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தங்கம் வென்ற மாரியப்பனை பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் விரைவில் அழைத்து பெருமை சேர்க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

'அண்மையில் நடைபெற்ற ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார் தங்கத் தமிழ் இளைஞர் மாரியப்பன்.

DK Leader praised Gold Mariyappan

21 வயது நிறைந்த அந்த மாணவ - இளைஞர் உடல் ஊனம் என்பது நம்மை வெற்றிப் பாதையில் வேக நடை போட, எவ்வகையிலும் தடையாக இருக்கக் கூடாது; ஊனம் உடலில் இருந்தாலும் உள்ளமும், உறுதியும் ஒரு போதும் ஊனப்படாது; அதனால் சாதிக்க நினைத்தால் சாதித்து சரித்திரம் படைக்கலாம் என்று காட்டி சிகரத்தில் ஏறி நின்று உலகப் புகழ் பெற்றதை அடைந்து நாம் செம்மாந்து பெருமிதப்படுகிறோம்!

நம்மால் முடியாதது யாராலும் முடியாது; யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று நம் இளைஞர்கள் சிந்தித்து, செயலாற்றி உழைத்தால் எந்த தடைகளையும் தாண்டி வெற்றி வாகை சூடலாம் என்பதற்கு மாரியப்பன் என்ற 21 வயது நிறைந்த இளைஞனே தக்க சான்று ஆகும்!

அவருக்கு 2 கோடி ரூபாய் பரிசளித்த தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவிற்கும் பாராட்டுகள்!

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் வகுப்பறை பாடங்களில் மதிப்பெண்களை அதிகமாக வாங்கிக் குவிக்க வேண்டும் என்று தவறான எண்ணத்துடன், அடம் பிடித்து, அவர்கள் மீது அவர்களின் நாட்டம் புரியாது, படிப்புகளைத் திணிக்காதீர்கள்!

விளையாட்டில் உலகப் புகழ் பெற்றவர் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றார் என்பதா முக்கியம்? எனவே, எங்கே எவருக்கு எதில் ஆர்வமும், அக்கறையும் உள்ளதோ, அதில் ஈடுபட்டு சாதனை புரிய நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாய் இருங்கள்.

'இக்காலத்து இளைஞனின் அறிவு விசாலம், பழங்காலத்து நம்மைவிட பன்மடங்கு அதிகம்' என்பதை உணருங்கள் தங்கத் தமிழன் இளைஞன் மாரியப்பனையும், அவரது தாயாரையும், ஊக்கமளித்தவர்களையும் அழைத்துப் பாராட்டி மகிழ்வோம்.

மாணவச் செல்வங்களுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் விரைவில் அவரை அழைத்து பெருமை சேர்த்து; அதன் மூலம் மாணவச் செல்வங்களுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு என்று காட்டி, மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும்.

இன்னும் பல்வேறு சாதனைகளைச் செய்து சரித்திரம் படைக்க மாரியப்பனுக்கு நமது மகத்தான வாழ்த்துகள்!

இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

English summary
DK Leader K. Veeramani has praised Gold medallist Mariyappan Thangavelu in Rio Paralympics 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X