For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி.க.- சிவசேனா மோதல்… போலீஸ் தடியடி:ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருமா., கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் சிவசேனாவின் வெறியாட்டத்தை அனுமதித்தது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

மதவாத சக்திகளோடு கைகோர்த்துக்கொண்டு திராவிடர் கழகத்தினர் மீது தடியடி நடத்திய காவல்துறையினரின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திராவிட கழகம் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தினால் நேற்று முன்தினம் இரவில் இருந்தே, சென்னை வேப்பேரி பெரியார் திடல் உள்ள ஈ.வி.கே.சம்பத் சாலையில் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டனர். நேற்று காலையிலும் அந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் காவல் பணியில் இருந்தனர். தாலி அகற்றும் போராட்டம் அமைதியாக பெரியார் திடல் வளாகத்தில் நடந்து முடிந்தது.

ஆனால் தாலி அகற்றும் போராட்டம் நடத்தியதை கண்டிக்கும் வகையில் இந்து அமைப்பினர் வேப்பேரி பகுதிக்கு வந்து கண்டன போராட்டம் நடத்த முற்பட்டபடி இருந்தனர். வந்தவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தபடி இருந்தனர்.

இதற்கிடையில் மாலை 3.30 மணி அளவில் சிவசேனா தொண்டர்கள் 4 பேர் ஒரு ஆட்டோவில் கோஷம் போட்டபடி ஈ.வி.கே.சம்பத் சாலையில் வந்தனர். அவர்கள் பெரியார் திடல் வாசல் பகுதியில் சிறிது நேரம் ஆட்டோவில் இருந்தபடியே ஜெய் காளி, ஓம் காளி என்று கோஷம் போட்டபடி நின்றனர். உடனே பெரியார் திடலுக்குள் திரண்டு இருந்த திராவிட கழக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தபடி வாசலுக்கு வந்தனர். சிவசேனா தொண்டர்களை விரட்டினார்கள். அவர்கள் ஆட்டோவை கமிஷனர் அலுவலகம் எதிரில் வந்து நிறுத்தினார்கள்.

இரு பிரிவினர் மோதல்

இரு பிரிவினர் மோதல்

இதற்குள் பின்னால் திரண்டு வந்த திராவிட கழக தொண்டர்களுக்கும், சிவசேனா தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. நிலமை மோசமானதால் அங்கு காவலுக்கு நின்ற போலீசார் மோதலை தடுத்தனர். அப்போது கூடுதல் துணை கமிஷனர் அலிபாஷா தள்ளப்பட்டார். போலீசார் மீதும் உருட்டுக்கட்டை அடி விழுந்தது. சிவசேனா தொண்டர்கள் 4 பேரும் மோதலில் வசமாக சிக்கினார்கள். அவர்களை காப்பாற்ற போலீசார் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. திராவிட கழக தொண்டர் சுரேஷ் என்பவரும் அடிபட்டார்.

போலீஸ் தடியடி

போலீஸ் தடியடி

மோதல் அதிகரிக்கவே போலீசார் வேறு வழி இல்லாமல் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பிறகு மோதலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினார்கள். காயம் அடைந்த சிவசேனாவினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதனால் ஈ.வி.கே.சம்பத் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

போலீசாரின் தடியடிக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், வி.சி.க தலைவர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருமாளவன் அறிக்கை

திருமாளவன் அறிக்கை

மதவாத சக்திகளின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளைக் அம்பலப்படுத்தும் வகையில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் ஆணாதிக்கத்தின் அடையாளச் சின்னமாக உள்ள தாலியைத் தாங்களே அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒரு கொள்கை அடிப்படையிலான சனநாயக வழியிலான போராட்ட வடிவமே ஆகும். அதுவும், திராவிடர் கழகத்தின் அலுவலக வளாகத்திற்குள்ளேயே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டு வெடிகுண்டுகளுடன்

நாட்டு வெடிகுண்டுகளுடன்

21 குடும்பத்தினர் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய தாலிகளை அகற்றினார்கள். இது எந்த வகையிலும் சட்டத்திற்கு விரோதமானதல்ல. அப்போராட்டத்தை நடைபெறவிடாமல் எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டவர்கள், அது திட்டமிட்டபடி நடந்தேறிவிட்டதால் ஆத்திரத்திற்காட்பட்டிருக்கிறார்கள். இதனால் மாலை 4 மணியளவில் பெரியார் திடலை நோக்கி மதவாத சக்திகள் திரண்டு வந்துள்ளனர். அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்ததாக திராவிடர் கழகத்தினருக்குத் தெரியப்படுத்தியிருக்கிற காவல்துறையினர், அவர்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஏனோ ஈடுபடவில்லை.

குறிவைத்து தாக்குதல்

குறிவைத்து தாக்குதல்

காவல்துறையினரின் தடியடியின்போது குறிப்பாக, திராவிடர் கழகத்தினரே குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ‘தாலியை அகற்றிக்கொண்ட பெண்களை சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள்' என்று கொச்சைப்படுத்தும் வகையில் தமது ஆணாதிக்கப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னணிப் பொறுப்பாளர் ஒருவர் பேசியிருக்கிறார். அவருடைய அநாகரிகமான இந்தப் போக்கையும், இத்தகைய மதவாத சக்திகளோடு கைகோர்த்துக்கொண்டு திராவிடர் கழகத்தினர் மீது தடியடி நடத்திய காவல்துறையினரின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிப்பதாக கூறியுள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

மும்பையில் தமிழர்களை அடித்து துன்புறுத்தி விரட்டப்படுவதை செயல்திட்டமாக கொண்டு செயல்பட்டு மறைந்த பால்தாக்கரேவின் கட்சியான சிவசேனாவுக்கு தமிழகத்தில் கிளை அமைத்து வகுப்புவாத வெறிச் செயலில் ஈடுபடுவதை அனுமதிப்பதை விட அவமானச் செயல் தமிழக மக்களுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. பெரியார் திடல் வளாகத்திற்குள்ளே திராவிடர் கழகம் அமைதியாக நடத்திய நிகழ்ச்சியை வன்முறை வெறியாட்டத்தின் மூலம் சீர்குலைக்கும் நடவடிக்கையை அனுமதித்த காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம்.

கருத்து சுதந்திரம்

கருத்து சுதந்திரம்

சில தினங்களுக்கு முன்பு இதே பிரச்சினைக்காக ஒரு தனியார் தொலைக்காட்சி ஊடக அலுவலகம் தாக்கப்பட்டது. எழுத்தாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். கருத்து சுதந்திரத்திற்கு மிகப்பெரிய ஆபத்து தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளதையே இத்தொடர் நிகழ்வுகள உணர்த்துகின்றன.

எனவே, தமிழகத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிற வகுப்புவாத, பாசிச, பிற்போக்கு சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தை முறியடிக்க தமிழகத்தில் உள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஒரணியில் திரள வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

English summary
EVKS Elangovan and Thol. Thirumavavan condemns Police lathichage in DK and Sena men clash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X