For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவர்தான் நல்ல "கேப்டன்".... நம்பி வந்த பாஜகவை நட்டாற்றில் விட்ட தேமுதிக!

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவை நினைத்து பாஜகவினர் அழாத குறையாக புலம்பிக் கொண்டுள்ளனர். லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நெஞ்சு நிமிர்த்திப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு ஸ்ரீரங்கம் தேர்தல் பெரும் பின்னடைவைக் கொடுத்து விட்டது.

இனிமேலும் பாஜகவினர் வீராவேசமாக பேசிக் கொண்டிருக்க முடியாது என்ற நிலையை இது ஏற்படுத்தி விட்டது. காரணம், பத்தாயிரம் ஓட்டுக்களைக் கூட வாங்க முடியாமல் தோல்வியுற்றுப் போனதால். இதுக்குக் கூடவா நீங்க லாயக்கில்லை என்று பலரும் கிண்டலடிக்கும் நிலைக்கு பாஜக போய் விட்டது.

DMDK abandons BJP in Srirangam by election

கூடமாட துணைக்கு யாருமே இல்லாவிட்டால் பாஜக அவ்வளவுதான் என்றும் இந்தத் தேர்தல் முடிவு (மீண்டும்) ஒரு முறை வெளிக்காட்டியுள்ளது.

பாஜகவுக்கென்று எந்த சொந்த பலமும் இல்லை, கூட்டணி பலமே அதன் உயிர் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது. மிகக் கேவலமான முறையில் பாஜக ஸ்ரீரங்கத்தில் ஓட்டுக்களை வாங்கியுள்ளது. வெறும் ஐயாயிரத்து சொச்சம்தான்.

பாஜகவின் இந்த பரிதாப நிலைக்கு அது பெருமளவில் நம்பியிருந்த தேமுதிகவினர் கைவிட்டதுதான். மேலும் மதிமுக இப்போது கூட்டணியில் இல்லை. பாமகவின் சொற்ப வாக்குகளும் கூட கிடைக்காத நிலை. தேமுதிகவைத்தான் அது பெரிதும் நம்பியிருந்தது. அதேபோல இந்திய ஜனநாயகக் கட்சியையும் அது ஜாதி வாக்குகளுக்காக நம்பியிருந்தது. ஆனால் இந்த இரண்டு பேருமே கைவிட்டு விட்டனர் என்பது அம்பலமாகியுள்ளது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்தே பாஜக கூட்டணியில் குழப்பம் நீடித்து வந்தது. பாஜக இந்த தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். இதனால் தேமுதிக அதிர்ச்சி அடைந்தது. பாஜக தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவும் கூட்டணி கட்சியான எங்களை கலந்தாலோசிக்காமல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் தேமுதிக சார்பிலும் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது.

மேலும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என தேமுதிக சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பாஜக தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து சமாதானம் செய்ததோடு தங்களது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதன் பின்னர் சுப்பிரமணியனை வேட்பாளராக அறிவித்தது பாஜக. ஆனால் விஜயகாந்த் பிரசாரத்திற்கு கடைசி வரை வரவே இல்லை. பிரேமலதாவும் வரவில்லை. விஜயகாந்த் வருவார், வருவார் என்று தமிழிசைதான் வாய் வலிக்கச் சொல்லியபடி இருந்தார். ஆனால் விஜயகாந்த்தின் "வாடை" கூட ஸ்ரீரங்கம் பக்கம் அடிக்கவில்லை.

வேறு வழியில்லாத நிலையில் லோக்கல் தலைவர்கள் சகிதம் சுப்பிரமணியன் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதிமுகவை ஆட்டிப்படைப்பார், வெற்றி வாய்ப்புக்கு சவால் விடுவார், சரித்திரம் படைப்பார் என்றெல்லாம் பேசப்பட்ட பாஜக வேட்பாளர் கடைசியில் அடப்பாவமே ரேஞ்சுக்குத்தான் ஓட்டுக்களை வாங்கியுள்ளார்.

அவருக்குக் கிடைத்த வாக்குகள் வெறும் 5015 மட்டுமே. இது பாஜகவை அதிர வைத்துள்ளது. காரணம், தேமுதிகவிலிருந்து ஒரு ஓட்டு கூட வரவில்லை என்பதால். கடந்த 2006 பொதுத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட ரமேஷ் 16,522 வாக்குகளை வாங்கியிருந்தார். கடந்த 2011 பொதுத் தேர்தலில் பாஜக போட்டியிட்டது. தேமுதிக போட்டியிடவில்லை.

கடந்த 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தது. அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரான ஜெயலலிதா 1, 05, 328 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் அறிவழகன் 2, 017 வாக்குகளும், இந்திய ஜனநாயக் கட்சி வேட்பாளராக களம் இறக்கப்பட்ட தமிழரசி 1221 வாக்குகளும் பெற்றார்.

தற்போதைய தேர்தலில் தேமுதிகவும், இந்திய ஜனநாயகக் கட்சியும் தங்களைக் கைவிட்டு விட்டதாக பாஜகவினர் கொதிப்புடன் புலம்பிக் கொண்டுள்ளனர். இனிமேலும் இவ்வளவு பிடிவாதமான விஜயகாந்த்தை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா என்ற புலம்பலும் காணப்படுகிறது.

ஆனால் இப்போதைக்கு துணைக்கு கண்டிப்பாக யாராவது பாஜகவுக்கு இருந்தாக வேண்டும். அப்போதுதான் அடுத்த சட்டசபைத் தேர்தல் வரை அது உயிருடன் இருக்க முடியும் என்பதால் விஜயகாந்த்தே எட்டி உதைத்தாலும் கூட அவரது காலை பாஜக கண்டிப்பாக விடாது என்பது உறுதி. அதேசமயம், விஜயகாந்த் தன்னை நம்பியோரை நட்டாற்றில் விடுபவர் என்ற பெயரையும் விடாமல் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டுள்ளார் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் மூலம்!

சபாஷ் சரியான கூட்டணிதான்!

English summary
DMDK has completely abandoned BJP in Srirangam by election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X