For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் கொள்ளையர்களை காப்பாற்றும் திமுக, அதிமுக: ராமதாஸ் தாக்கு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கிரானைட் ஊழல் மற்றும் கொள்ளையில் சம்பந்தப்பட்டோரை காப்பாற்றுவது தான் தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றின் நோக்கமாக இருக்கும் நிலையில் இந்த கட்சிகளின் ஆட்சியில் கிரானைட் ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவே இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற கிரானைட் கொள்ளை குறித்த சகாயம் குழு அறிக்கை மீது சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு மீண்டும் முட்டுக்கட்டைப் போட்டிருக்கிறது.

DMK and ADMK will not take action against granite scam: Ramdoss

கிரானைட் கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காப்பாற்றி, இந்த ஊழலை மூடி மறைப்பதற்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தையே அதிர வைத்த கிரானைட் கொள்ளையில் ஆட்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதால் இது குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) அல்லது உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என முதன் முதலில் வலியுறுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

நீண்ட தாமதத்துக்குப் பின் கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் இப்பிரச்சினையில் தலையிட்டதைத் தொடர்ந்து கிரானைட் கொள்ளை குறித்து இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.

சுமார் ஓராண்டு விசாரணைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட சகாயம் குழு அறிக்கையில், சட்டவிரோத கிரானைட் கொள்ளை காரணமாக தமிழக அரசுக்கு ரூ.1.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்த ஊழலில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இப்பரிந்துரை தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கோரியிருந்த நிலையில், 3 மாதங்கள் ஆகியும், இச்சிக்கல் குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் ஜெயலலிதா அரசு திட்டமிட்டே தாமதம் செய்து வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்நாள் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போதும், தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் கூடுதல் அவகாசம் கோரியது. சகாயம் குழு அறிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இனியும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் ஒரு பச்சைப் பொய்யை நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, இதுகுறித்த பதில் மனுவை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரியதால் இவ்வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. இதன்மூலம் கிரானைட் ஊழல் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படாமல் தடுத்திருக்கிறது.

அடுத்த இரு வாரங்களில் தமிழகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும் என்பதால், அதைக் காரணம் காட்டி இந்த வழக்கு மார்ச் இறுதியில் விசாரணைக்கு வரும் போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாமல் நழுவிவிடும்.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை 2012ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தெரியவந்தது. அதற்குப் பின் 4 ஆண்டுகள் ஆகியும் இந்த கொள்ளைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை. கிரானைட் கொள்ளையில் ஈடுபட்ட சில நிறுவனங்களின் அதிபர்கள் தொடக்கத்தில் கைது செய்யப் பட்டாலும், காலப்போக்கில் திரைமறைவில் நடைபெற்ற பேரங்கள் காரணமாக கிரானைட் கொள்ளை வழக்கும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது.

இவ்வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டால் கிரானைட் கொள்ளையர்களும், அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துணை நின்ற அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமைகளும், அதிகாரிகளும் சிக்கிக் கொள்வார்கள் என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

தேர்தல் வரை இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கப்படாமல் இருந்தால் கிரானைட் கொள்ளையர்களையும், அவர்களுக்கு துணை போனவர்களையும் காப்பாற்றி விடலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால் தான் இவ்வழக்கை திட்டமிட்டு தாமதப்படுத்தி வருகின்றனர்.

கிரானைட் கொள்ளையை பொறுத்தவரை அ.தி.மு.க. அரசும், தி.மு.க. அரசும் கூட்டணி அமைத்து செயல்படுகின்றன.1991&96 காலத்தில் கிரானைட் குவாரி உரிமம் வழங்குவதில் ஊழல் செய்ததாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தொழில்துறை அமைச்சர் கரூர் சின்னசாமி உள்ளிட்டோர் மீது 1996ம் ஆண்டு கலைஞர் அரசு வழக்குத் தொடர்ந்தது.

அவ்வழக்கில் கரூர் சின்னசாமியை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன்பின் திமுக அரசின் எதிர்பார்ப்புகளை கிரானைட் குவாரி அதிபர்கள் நிறைவேற்றியதால் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. கிரானைட் ஊழலுக்காக கைது செய்யப்பட்ட கரூர் சின்னசாமி தி.மு.க.வில் இணைந்து அதன் முக்கிய தலைவராக உருவெடுத்தார்.

இவ்வாறு கிரானைட் ஊழல் மற்றும் கொள்ளையில் சம்பந்தப்பட்டோரை காப்பாற்றுவது தான் தி.மு.க, அ.தி.மு.க ஆகியவற்றின் நோக்கமாக இருக்கும் நிலையில் இந்த கட்சிகளின் ஆட்சியில் கிரானைட் ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவே இருக்கும்.

கிரானைட் கொள்ளையில் ஆட்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதால் சகாயம் குழு அறிக்கை மீதான நடவடிக்கைக்காக அவர்களின் கருத்தை நீதிமன்றம் கேட்கத் தேவையில்லை. சகாயம் குழு பரிந்துரை அடிப்படையில் உயர்நீதிமன்றமே தன்னிச்சையாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
DMK and ADMK will not take action against granite scam, says PMK founder Ramdoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X